"திமுகதான் மீண்டும் வரும்.. கால் தடம் பதியும் அளவுக்கு பிரசாரம் செய்வேன்" - மன்சூர் அலி கான் பேட்டி
சென்னை: "பாஜகவை ஆதரிக்கும், கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் பாசிச சக்திகள்தான். திமுகதான் மீண்டும் வரும். சட்டசபை தேர்தலில் திமுகவை ஆதரித்து கால் தடம் பதியும் அளவுக்கு பிரசாரம் செய்வேன்" என மன்சூர் அலி கான் தெரிவித்துள்ளார்.
மன்சூர் அலிகான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "நான் ஒரு நடிகன். நான் ஏதோ இன்றைக்கு போராடவில்லை, கடந்த 1998 ஆம் ஆண்டு ஆளுநர் மாளிகை எதற்கு 600 ஏக்கரில் இருக்கிறது, அங்கு நீச்சல் குளம், மல்யுத்த வீரர்களுக்கு மைதானங்கள் கட்ட வேண்டும் என்று போராடியதற்கு சுமார் 35 நாட்கள் சிறையில் இருந்துள்ளேன். நான் பல கட்சிகளில் இருந்திருக்கிறேன். ஆனால் நான் ஒருவரை ஏமாற்றிவிட்டேன் என்று என் மீது எந்த புகாரும் இல்லை. மனதில் பட்டதை பேசுகிறேன். நடிக்க வாய்ப்பு கொடுத்தால் கொடுங்க, இல்லை என்றாலும் கவலையில்லை.

எனக்கு நம் நாட்டை நாசமாக்கும் எஸ்.ஐ.ஆர் தடுக்கப்படவேண்டும். பாஜகவை ஆதரிக்கும், அவர்களுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அனைத்தும் பாசிச கட்சிகள், அவர்களால் தமிழ்நாட்டிற்கு பயன் இல்லை. 2026ஆம் ஆண்டு திமுக தான் மீண்டும் ஆட்சிக்கு வரும். நானே அக்கட்சிக்காக வேலை செய்தாலும் செய்வேன். வேறு வழி இல்லை. என்னுடைய போராட்டமும் பிரச்சாரமும் தரையில் கால் பதியும்.
விஜய் போல வானத்திலேயே சுற்றிக் கொண்டு இருக்க மாட்டேன். இந்தக் கால் தரையில் பட வேண்டும். அடிமட்ட மக்களைச் சென்று சந்திக்க வேண்டும். மார்க்கெட்டுகள், வயல்வெளிகள், சாலைகளில் இந்த கால் பட வேண்டும். வானத்தில் உலாத்திக் கொண்டு, வானத் தூதுவர்களாக இருக்க கூடாது. விமானத்திலேயே சென்று விட்டு விமானத்திலேயே வந்தால், பணக்காரனுக்கு தான் ஆதரவாக இருப்பார்கள்.
அரசியல் களத்தில் விஜய் எனக்கு இணையானவர் கிடையாது. அவரைப் பார்த்து நான் பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை. இது மட்டும் இல்லாமல் கரூர் துயரம் குறித்து நான் பேசியதற்கு விஜய் எனக்கு ஒரு போன் கூட செய்து பேசவில்லை. விஜய் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று வந்துள்ளார், செய்யட்டும். நிறைய பணம் வைத்திருக்கிறார். நிறைய செலவு செய்யட்டும்" என்று கூறியுள்ளார்.
இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான், கடந்த 2024 லோக்சபா தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டார். இந்திய ஜனநாயக புலிகள் என்ற பெயரில் கட்சியை நடத்தி வந்தாலும், அதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளிக்காததால் சுயேச்சையாக போட்டியிட்டார். அவருக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பலாப்பழம் சின்னத்தில் வாக்கு கேட்டு வேலூர் தொகுதி முழுவதும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தார் மன்சூர் அலிகான். தேர்தலுக்கு முன்னதாக பிரச்சாரத்தின் கடைசி நாள் அன்று, மன்சூர் அலிகானுக்கு நெஞ்சு வலி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சென்னையில் மேல் சிகிச்சை பெற்று அவர் குணமடைந்து திரும்பினார்.
தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிவடைந்ததும், இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைய, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையை சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேரில் சந்தித்து கடிதம் அளித்தார். தேர்தல் ரிசல்ட் வருவதற்கு முன்பே மன்சூர் அலிகான் கட்சியைக் கலைக்கத் தயாரானது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications