கவுன்சிலர் கனவில் சென்னையில் டேரா! சீட்டுக்கு ரூட் பிடிக்கும் திமுக பிரமுகர்கள்!
சென்னை: ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை முடிந்த கையோடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், வேட்பாளர் தேர்வில் அரசியல் கட்சிகள் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கின்றன.
அந்த வகையில் திமுக சார்பில் கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட விரும்புபவர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைமை உளவுத்துறை மூலம் அலசி ஆராயத் தொடங்கியிருக்கிறதாம்.
அதில் பலரும் வேட்பாளர் தேர்வின் போது வடிகட்டப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் சீட்டை வாங்க இப்பவே ரூட்டை பிடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் திமுக பிரமுகர்கள்.

கட்சியின் இமேஜ்
10 ஆண்டுகால கடும் போராட்டத்துக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சியை பிடித்து முதலமைச்சராக அரியணை ஏறியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். தன் மீதும் திமுக மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை தொடர்ந்து தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள அவர், கட்சியின் இமேஜை டேமேஜ் செய்யும் வகையில் நடந்துகொள்ளும் நிர்வாகிகளை பாரபட்சமின்றி கட்டம் கட்டி கட்சியை விட்டு விலக்கி வைத்து வருகிறார்.

அலசி ஆராய்ந்து
இந்தச் சூழலில் கடந்த 2011-ம் ஆண்டு திமுக தோல்வியை தழுவியதற்கு காரணம் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் அட்ராசிட்டி நடவடிக்கைகள் தான். இது போல் மீண்டும் ஒரு நிகழ்வு நடந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கும் ஸ்டாலின், நகராட்சி, மாநகராட்சிகளில் கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட விரும்புபவர்களை உளவுத்துறை மூலம் அலசி ஆராய்ந்து அவர்களின் தரவுகளை திரட்டத் தொடங்கியிருக்கிறாராம்.

சென்னையில் டேரா
இதனால் கடந்த தேர்தல்களை போல் மாவட்டச் செயலாளர் இஷ்டத்துக்கோ அல்லது அமைச்சரின் முடிவுக்கோ வேட்பாளர்களை நிறுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. முழுக்க முழுக்க இம்முறை கட்சித் தலைமையே நேரடியாக கவுன்சிலர் சீட்களுக்கான வேட்பாளர்களையும் தேர்வு செய்யவிருக்கிறது. இதனால் சென்னையில் டேரா போட்டு சீட்டுக்கு சிபாரிசு தேடி பலரும் அலைபாயத் தொடங்கியிருப்பதை காண முடிகிறது.

தர்ம சங்கடம்
ஆட்சிக்கும், கட்சிக்கும் தர்ம சங்கடமான சூழ்நிலையை உருவாக்குவார்கள் என சந்தேகிக்கிப்படும் நபர்களுக்கு கவுன்சிலர் சீட் இல்லை என்பது தலைமையின் உறுதியான முடிவாம். இதனிடையே ஜெயலலிதா பாணியில் புதிய முகங்களுக்கும், கட்சிக்காக உழைத்தும் இதுவரை எந்த அங்கீகாரமும் கிடைக்காதவர்களுக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஒரு வாய்ப்பு கொடுக்க திமுக தலைமை விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர்கள்
அமைச்சர்கள் தேர்தல் பணிகளை கவனித்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளதால், பெரிய பின்புலம் இல்லாத பலரும் இம்முறை வேட்பாளர்களாக ஸ்டாலினால் களமிறக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. வல்லவர்களை காட்டிலும் நல்லவர்களே கட்சிக்கு தேவை என்பதும் அதன் மூலம் கட்சியின் இமேஜ் சரியாமல் இருந்தாலே போதும் என்பதும் திமுக தலைமையின் கணக்கு எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications