அடுத்த "தலைவர்" இவர்தானாமே.. சலசலக்கும் பூசல்கள்.. மேலிடம் பறந்த ரிப்போர்ட்கள்.. அடுத்து என்னாகும்?
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரின் பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க கட்சித் தலைமை ஆலோசித்து வருகிறது. இந்நிலையில் இந்த தலைவர் பதவிக்கான போட்டியில் பலர் முந்திக்கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கே.எஸ்.அழகிரி தற்போது வரை நீடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது இவரது பதவிக்காலம் முடிவுக்கு வந்திருக்கிருக்கிறது. இதையடுத்து அடுத்த தலைவராக யாரை தேர்ந்தெடுப்பது என கட்சி தலைமை ஆலோசித்து வருகிறது. இந்த தலைவர் பதவிக்கான ரேசில் முதன் முறையாக நுழைந்திருக்கிறார் கார்த்திக் சிதம்பரம். சரியாக சொல்வதெனில் அவரை ரேசில் நுழைத்திருக்கிறார் ப.சிதம்பரம்.
கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழ்நாட்டின் காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் குறித்து சமீபத்தில் ப.சிதம்பரத்துடன் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும், அப்போது 'துடிப்பானவரை' நியமிக்க வேண்டும் என்று சிதம்பரம் பரிந்துரைத்ததாக சொல்லப்படுகிறது. ஏற்கெனவே இந்த போட்டியில் ஜோதிமணி எம்.பி, விஜயதரணி ஆகியோர் இருக்கும் நிலையில், புதியதாக கார்த்திக் சிதம்பரத்தின் பெயரும் அடிப்பட்டிருக்கும் நிலையில் தலைவர் பதவிக்கான ரேஸ் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

நெருக்கடி
ஏற்கனவே ப.சிதம்பரத்தின் சிபாரிசில்தான் அழகிரிக்கு இந்த மாநில தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் சமீப காலமாக அழகிரியின் செயல்பாடுகளால் சிதம்பரம் தரப்பினர் அதிருப்பதியடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. மாநில தலைவர் பதவியிலியிலிருந்து தன்னை நீக்கினால் தமாகாவில் இணைந்துவிடுவதாக அழகிரி அடுத்த அஸ்திரத்தை கையில் எடுத்திருக்கிறார். இதுவும் காங்கிரஸ் மேலிடத்திற்கு அதிருப்தியளித்துள்ளது. எனவே தலைவர் பதவியை உடனே மாற்றியே தீர வேண்டும் என்கிற நெருக்கடியை அழகிரியே உருவாக்கியுள்ளார்.

ஜோதிமணி
ரேசில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் கரூர் எம்பி ஜோதிமணி. இவருக்கு ராகுல் காந்தியிடம் நன்மதிப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது தேசிய அளவிலும் கூட சில 'சம்பவங்களில்' இவரது பெயர் அடிப்பட்டிருப்பதை ராகுல் காந்தி தொடர்ந்து 'நோட்' செய்து வருகிறார். எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி தலைவர் பதவிக்காக இவர் 'மூவ்' செய்து வருகிறார். ஆனால் இதில் ஒரு பெரும் சிக்கலும் இருக்கிறது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் தலைவராக இருப்பவர் தேர்தலின் போது கூட்டணி கட்சியுடன் தொகுதி பங்கீடுக்காக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார். அப்போது எவ்வித பஞ்சாயத்தும் நடக்காமல் சுமூகமாக இந்த பேச்சுவார்த்தையை முடிக்க வேண்டும்.

முட்டுக்கட்டை
ஏனெனில் திமுகதான் தற்போது தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் ஒரே பலம். எனவே அதையும் இழந்துவிடாமலும், அதேநேரத்தில் கட்சியின் சுயமரியாதையையும் விட்டுத்தராமல் பேசினால்தான் தேசிய தலைமைக்கு தலைவலி இல்லாமல் இருக்கும். ஆனால், கடந்த சில நாட்களாக ஜோதிமணி எம்பிvsஅமைச்சர் செந்தில் பாலாஜியின் மோதல் போக்கை பார்த்தால் ஜோதிமணிக்கு இந்த தலைவர் பொறுப்பு கிடைப்பது சற்று சவாலான காரியம் என்றே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். திமுகவுக்கு தற்போது பக்கபலமாக இருக்கும் முக்கிய நபர்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி முதன்மையானவர். இப்படி இருக்கும்போது அவரை பகைத்துக்கொள்ள திமுக தயாராக இருக்காது.

விஜயதரணி
இதற்கடுத்து மூன்றாவது இடத்தில் இருப்பவர் விஜயதரணி. தமிழ்நாடு முழுவதும் விஜயதரணியின் பெயர் ஓரளவு பரிட்சயமாகியுள்ளது. அதே போல தென் மாவட்டங்களில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு அபரிமிதமானது. இந்த செல்வாக்கை கட்சி தலைமையும் அறிந்துதான் வைத்திருக்கிறது. எனவே இதனை வைத்து விஜயதரணி தலைவர் பதவிக்கு முயன்று வருகிறார். பெண்களை இந்த பதவிக்கு கொண்டுவர வேண்டும் என்பது பிரதான கோரிக்கையாக தற்போது எழுந்திருக்கிறது. எனவே இதுவும் இவருக்கு சாதகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இதற்கடுத்து புதியதாக நுழைந்திருப்பவர்தான் கார்த்தி சிதம்பரம்.

மேலும் சிலர்
இவருக்கு எல்லா இடத்திலும் செல்வாக்கு இருக்கிறது. ஆனால் ஒரேயொரு பிரச்னை மட்டுமதான். இவர் மீது ஏகப்பட்ட புகார்கள் இருக்கின்றன. இந்நிலையில் இவரை தலைவராக கொண்டுவந்துவிட்டால் ஐடி ரெய்டு, சிபிஐ விசாரணை என பாஜக இவரை தன்னுடைய வளையத்திற்குள் கொண்டு வந்துவிட்டால் என்ன ஆவது? இல்லையெனில் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டால் அதற்கான இடம் மீண்டும் காலியாகதான் இருக்கும் என்று கட்சி தலைமை யோசிக்கிறது. இவருக்கு பின்னால் ரூபி மனோகரன், செல்வப்பெருந்தகை ஆகியோரும் கட்சி தலைவருக்கான ரேசுக்கு தயாராகி வருகின்றனர். இதில் மற்றொரு முக்கிய நபர் யார் எனில், அது ஆரணி எம்பி விஷ்ணு பிரசாத்தான். இவருடைய தந்தை கிருஷ்ணசாமி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தவர். எனவே இந்த செல்வாக்கை பயன்படுத்தி விஷ்ணு பிரசாத் காய் நகர்த்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications