அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வீட்டில் கல்யாணம்! மாப்பிள்ளை வீடு யார் தெரியுமா?
சென்னை: வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தனது மகளுக்கு திருமணம் நிச்சயித்துள்ளதால் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கும் பணியில் பிஸியாக உள்ளார்.
அந்த வகையில் தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டை பாராட்டியவரும், உழவர்கள் நலனில் அக்கறை கொண்டவருமான நடிகர் கார்த்தி, சிவக்குமார் உள்ளிட்டோருக்கும் நேரில் சென்று தனது மகள் திருமண அழைப்பிதழை வழங்கியுள்ளார். மகள் திருமணத்தை மிகவும் எளிய முறையில் நடத்த திட்டமிட்டுள்ள அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கட்சியின் முக்கிய பிரமுகர்கள், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்.

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திற்கு இரண்டு மகள்கள் ஒரு மகன். இப்போது திருமணம் நடைபெறுவது அவரது கடைசி மகள் கண்மணிக்கு தான். அவர் மருத்துவத்தில் எம்.டி.படித்து முடித்துள்ளார். மாப்பிள்ளை சித்தார்த்தும் எம்.டி. டாக்டர் தான். இதனிடையே மணமகன் குடும்பத்தாரை பொறுத்தவரை நீதித்துறையில் பாரம்பரியமிக்க பின்னணியை சேர்ந்தவர்கள். அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் சம்பந்தி, அதாவது மாப்பிள்ளையின் அம்மா திலகவதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ளார். அதுமட்டுமல்ல நீதிபதி திலகவதியின் தந்தை கோவிந்தராஜனும் நீதியரசராக இருந்து மறைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் 25ஆம் தேதி சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் செண்டரில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திருமணம் நடைபெறவுள்ளது. திருமணத்தில் கலந்துகொள்ள வருவோருக்கு நினைவிலிருந்து நீங்காதபடி அறுசுவை விருந்து படைப்பதில் உறுதியாக உள்ள அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பிரபல சமையல் கலைஞர் மங்கைமடம் அகோரமூர்த்தி மற்றும் முட்டம் நளபாகம் குழுவினரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.
அதேபோல் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தங்கள் இல்ல திருமணத்தில் கலந்துக்கொள்ள வருகை தருவோருக்கு மரக்கன்றுகளை நினைவுப்பரிசாக வழங்குவார் எனத் தெரிகிறது. ஐப்பசி மாதத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வீட்டுத் திருமணம் மட்டுமின்றி திமுகவில் உள்ள இன்னும் பல முக்கிய பிரமுகர்களின் இல்ல மண விழாக்களும் நடைபெறவுள்ளன. அதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியில் இல்ல மண விழாவும் ஐப்பசி மாதத்தில் தான் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications