சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. 10 அறைகள் தரைமட்டம்.. உயிர் சேதம் தவிர்ப்பு!
விருதுநகர்: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் 10-க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று ஆலை மூடப்பட்டிருந்த நிலையில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
சாத்தூர் அருகே உள்ள மூர்த்திநாயக்கன்பட்டியில் சீனி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. ரசாயன பொருட்களில் ஏற்பட்ட வேதியியல் மாற்றத்தால் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள மூர்த்திநாயக்கன்பட்டியில் சீனி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று (ஜூன் 28) ஞாயிற்றுக்கிழமை என்பதால் பட்டாசு ஆலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் ஆலை மூடப்பட்டிருந்த நிலையில், அறைகளில் வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் திடீரென வெடித்துச் சிதறின.
நெருப்பு பற்றி பயங்கர சத்தத்துடன் வெண்ணிற புகை வானில் பரவியதால் அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து அறைகள் வெடித்ததைக் கண்டு, அருகில் உள்ள கிராம மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் அச்சமும் நிலவியது.
இந்த விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, மீட்புப் பணிகள் மற்றும் விசாரணை முடுக்கி விடப்பட்டன. ரசாயனப் பொருள்களில் ஏற்பட்ட திடீர் வேதியியல் மாற்றம் காரணமாக இந்த வெடி விபத்து நேரிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
வெடி விபத்தின் வீரியம் காரணமாகப் பட்டாசு தயாரிக்கும் மற்றும் இருப்பு வைக்கும் 10-க்கும் மேற்பட்ட அறைகள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறி முழுமையாகச் சேதமடைந்தன. ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆலை மூடப்பட்டிருந்ததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி ஆலையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். வெடி விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சேதத்தை கணக்கெடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications