அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை.. தகுதியானவர்கள் யார்? தமிழக அரசு அரசாணை
சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்களில் 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரூ 1000 செலவில் முழு உடல் பரிசோதனை (Full body Check up or Master Health Check up ) செய்ய தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக வளர்ந்து வருகின்றன. கல்வித் தரமும் அதிகரித்துள்ளது. மேலும் ஸ்மார்ட் போர்டு, அடையாள அட்டை, ஷூ சாக்ஸ், ஸ்போர்ட்ஸ் டிரஸ் உள்ளிட்டவைகளும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கிறது.

இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் பணிபுரியும் அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதற்கான அரசாணை தற்போது வெளியாகியுள்ளது. அதில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலை பள்ளிகளின் எண்ணிக்கை 37,588 ஆகும்.
இதில் பள்ளிகளில் பணிபுரியும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை 1,06,985 ஆகும். இந்த ஆசிரியர்களுக்கு மட்டும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை முதற்கட்டமாக மேற்கொள்ளப்படும். 50 வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஆசிரியர்களில் 1,06,985 பேரில் மூன்றாக பிரித்து ஒவ்வொரு ஆண்டும் 35600 ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
இந்த 35,600 ஆசிரியர்களுக்கும் கோல்டு திட்டத்தின் கீழ் ஒரு ஆசிரியருக்கு ரூ 1000 வீதம் ரூ 3.56 கோடி மட்டும் தேசிய ஆசிரியர் நல நிதியிலிருந்து விடுவிக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் இந்த தொகையை தேசிய ஆசிரியர் நல நிதியிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். இதற்கான அதிகாரம் பள்ளிக் கல்வி இயக்குநருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications