தொடங்கியது எம்பிபிஎஸ் - பிடிஎஸ் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்.. 20 ஆம் தேதி இறுதி ஒதுக்கீடு!
சென்னை: எம்பிபிஎஸ் - பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ள நிலையில் 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோருக்கான சிறப்பு கலந்தாய்வு நேரடியாக நடக்கிறது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கான எம்பிபிஎஸ் - பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று (ஆகஸ்ட் 13) தொடங்கி உள்ளது. முதல் கட்டமாக விளையாட்டு பிரிவு மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆகியோருக்கு இன்று காலை 8 மணி முதல் நேரடி முறையில் கலந்தாய்வு நடைபெறுகிறது.

தொடர்ந்து நண்பகல் 12 மணி முதல் ஆகஸ்ட் 19 ஆம் தேதி தேதி மாலை 5 மணி வரை பொதுப் பிரிவில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும், நிர்வாக ஒதுக்கீட்டில் விரும்பும் இடங்களை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு 20 ஆம் தேதியும், அதனை உறுதி செய்த பின்னர் 21 ஆம் தேதி இறுதி ஒதுக்கீடும் அளிக்கப்படும்.
ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதிக்குள் ஒதுக்கீட்டு ஆணைகளை பதவிறக்கம் செய்து கொள்ளும் மாணவர்கள், ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் சார்பில் 2026 - 2027 ஆம் ஆண்டின் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்புகளில் சேர்வதற்கான 72,633 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் உள்ள 7.5 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களின் உள்ஒதுக்கீட்டுக்கு 4,860 விண்ணப்பங்களும், விளையாட்டுப் பிரிவுக்கு 468 விண்ணப்பங்களும், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகளுக்கான பிரிவு ஒதுக்கீட்டிற்கு 524 விண்ணப்பங்களும், மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டு பிரிவுக்கு 212 விண்ணப்பங்களும் பெறப்பட்டன.
பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலித்து மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளிப்பட்டது. அதில் அரசு ஒதுக்கீட்டில் 35,926 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதில், மாணவர்கள் 12,551, மாணவிகள் 23,375 ஆவர்.
அதேபோல், 7.5 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் 3,625 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதில் மாணவர்கள் 981, மாணவிகள் 2644 பேர். சுயநிதி மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டில் 26,956 விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதில் மாணவர்கள் 9,105, மாணவிகள் 17,851 அடங்கும்.
இந்நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு பண்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் இன்று காலை 8 மணிக்கு விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான தரவரிசை எண் 1-25 வரை இடம்பெற்றுள்ளவர்களுக்கு கலந்தாய்வு தொடங்கி உள்ளது. காலை 8:30 மணிக்கு முன்னாள் ராணுவத்தினர் குடும்பங்களை சேர்ந்த வரிசை எண் 1 முதல் 30 வரையான மாணவர்களுக்கும், 9 மணிக்கு தகுதி வாய்ந்த அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 537 இடங்கள் உள்ளன. இதில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் 335. சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 202 ஆக உள்ளன. அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் பி.டி.எஸ். இடங்கள் 104. இதில் அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 16 இடங்களும், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் 88 இடங்களும் உள்ளன.
அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின்கீழ் இன்று காலை 10 மணிக்கு ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் கலந்தாய்வு தொடங்குகிறது. காலை 10 மணிக்கு தரவரிசைப் பட்டியலில் பொதுப்பிரிவில் 1 முதல் 448 வரையில் உள்ள நீட் தேர்வு மதிப்பெண் 449 முதல் 469 வரை பெற்ற மாணவர்களுக்கும், தரவரிசைப் பட்டியலில் 449 முதல் 912 வரையில் நீட் மதிப்பெண் 468 முதல் 433 வரையிலான 464 மாணவர்களுக்கு மதியம் 12 மணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
மேலும் இட ஒதுக்கீட்டின்கீழ் எஸ்.சி. பிரிவில் தரவரிசைப் பட்டியலில் 129 முதல் 156 வரை பெற்றவர்களும், எஸ்.சி.ஏ. பிரிவில் தரவரிசைப் பட்டியலில் 21 முதல் 32 வரையில் இடம் பெற்ற மாணவர்களும், எஸ்.டி. பிரிவில் தரவரிசைப் பட்டியலில் 7 முதல் 12 வரையில் பெற்ற மாணவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கலந்தாய்விற்கான அழைப்புக்கடிதம் தனியாக அனுப்பப்பட மாட்டாது. கலந்தாய்விற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக வருகைத் தர வேண்டும். கலந்தாய்விற்கு வரும் மாணவர்கள் கண்டிப்பாக சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும். மேலும், நீட் யு.ஜி 2026 ஹால் டிக்கெட் மற்றும் மதிப்பெண் பட்டியல், 10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், 11 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான மதிப்பெண் பட்டியல், தமிழ்நாடு அரசுப் பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்ததற்கான உண்மைச் சான்றிதழ் சம்பந்தப்பட்ட தலைமை நிர்வாக அதிகாரியிடமிருந்து பெறப்பட்டிருக்க வேண்டும்.
கடைசியாகப் படித்த பள்ளியிலிருந்து பெற்ற மாற்றுச் சான்றிதழ் அல்லது விண்ணப்பதாரர் தற்போது படித்து கொண்டிருக்கும் பள்ளியிலிருந்து பெற்ற உண்மைச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும். பிறப்பிடச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், பெற்றோரில் ஒருவரின் சாதிச் சான்றிதழ் ஆகியவை கலந்தாய்வின் போது சமர்பிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்கள் பெற்ற மதிப்பெண் தரவரிசை இட ஒதுக்கீடு உள்ளிட்டவைகளின் அடிப்படையிலேயே ஒதுக்கீடு செய்ய முடியும். கலந்தாய்வு நடைபெறும் இடத்திற்குள் செல்போன் உள்ளிட்ட தொடர்பு சாதனங்கள் அனுமதிக்கப்படாது என மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்குழு அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications
