உயிருடன் இருப்பதாக போராளிகள் உறுதிப்படுத்தவில்லை.. பிரபாகரன் நலமுடன் இருந்தால் மகிழ்ச்சியே.. வைகோ!
பிரபாகரன் நலமுடன் இருந்தால் மகிழ்ச்சியே என்று வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை: பிரபாகரன் உயிருடன் இருப்பதாக எந்தத் தகவலையும் என்னுடன் தொடர்பில் இருக்கும் போராளிகள் உறுதிப்படுத்தவில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். அதேபோல், பழ.நெடுமாறன் கூறியது போல் பிரபாகரன் நலமுடன் இருந்தால், அதைவிட உலகத் தமிழர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியது ஒன்றும் இல்லை என்று கூறியுள்ளார்.
தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்து உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கூறுகையில், 2009ம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்படவில்லை. தற்போதும் உயிருடன் நலமுடன் இருக்கிறார்.

பிரபாகரன் விரைவில் வெளியே வருவார். அவர் அனுமதியுடனேயே இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன் என்று தெரிவித்தார். மேலும் சர்வதேசச் சூழலும் இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்து கிளம்பி இருக்கிற சிங்கள மக்களின் போராட்டங்களும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.
இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பிரபாகரன் உயிருடன் இருப்பதாக வெளியான செய்திக்கு இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ரவி ஹேரத் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரவி ஹேரத் கூறுகையில், விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தற்போது உயிருடன் இல்லை. 2009 மே 18ல் நடந்த இறுதிகட்ட போரில் அவர் உயிரிழந்ததற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து சீமான் கூறுகையில், பாலசந்திரனை சாக கொடுத்துவிட்டு எங்கள் அண்ணன் பிரபாகரன் பத்திரமாக தப்பிச் சென்றிருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? எந்த சூழ்நிலையிலும் நான் இந்த நாட்டை விட்டு போகமாட்டேன் என்று வீரமாக நின்று சண்டையிட்டவர் எங்கள் அண்ணன் பிரபாகரன். தன் உயிரை மட்டும் தற்காத்துக்கொண்டு தப்பிப்போகும் கோழையல்ல பிரபாகரன்.
போர் முடிந்து பேரழிவை நாங்கள் சந்தித்த பிறகு, பிரபாகரன் 15 ஆண்டுகள் பத்திரமாக ஓரிடத்தில் பதுங்கி, பேசாமல் இருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தார். இந்த நிலையில் பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், பிரபாகரன் உயிருடன் இருப்பதாக எந்தத் தகவலையும் என்னுடன் தொடர்பில் இருக்கும் போராளிகள் உறுதிப்படுத்தவில்லை. பழ.நெடுமாறன் கூறியபடி பிரபாகரன் நலனுடன் இருந்தால், அதைவிட உலகத் தமிழர்களுக்கு மகிழ்ச்சித்தரக் கூடியது ஒன்றுமில்லை என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications