மருத்துவ காப்பீட்டு திட்டம் ரூ.25 லட்சம் சொல்றீங்க? அப்ப 4000 கோடி எங்கே? தவெகவை கேட்ட திமுக எழிலன்
சென்னை: மருத்துவக் காப்பீட்டு நிதி ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், காப்பீட்டு அட்டைகளுக்கான நிதி ஒதுக்கீட்டின் விவரம் தெளிவாக இல்லை. இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தைத் தனித் திட்டம்போல் அறிவித்தது ஏன்? என்று திமுக மருத்துவ அணிச் செயலாளர் எழிலன் நாகநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய எழிலன் நாகநாதன், "மருத்துவக் காப்பீடு திட்டத்தை கலைஞர்தான் கொண்டு வந்தார். காப்பீட்டுத் திட்டத்தின் வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தியது திமுக ஆட்சிதான். மேலும், 2000க்கும் மேற்பட்ட சிகிச்சைகளுக்கு காப்பீட்டுத் திட்டத்தை திமுக அரசு விரிவாக்கம் செய்தது.

காப்பீட்டுத் திட்ட அட்டை
திமுக ஆட்சியில் காப்பீட்டுத் திட்ட அட்டை அதிகமானோருக்குக் கிடைத்ததுடன், இதன் மூலம் ஏராளமானோர் பலனும் பெற்றனர். திமுக ஆட்சியிலேயே காப்பீட்டுத் திட்டத்தில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ.22 லட்சம் வழங்கப்பட்டது. இதில் ரூ.5 லட்சம் காப்பீட்டுத் தொகை போக, எஞ்சிய ரூ.17 லட்சம் சுகாதாரத்துறையின் இருப்புத்தொகையிலிருந்து வழங்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், திமுக ஆட்சியில் பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகையை ரூ.3 உயர்த்தி வழங்கி, நுகர்வோருக்கு விலையை குறைத்தோம். ஆனால், இப்போதைய புதிய அறிவிப்புகள் குறித்து பல கேள்விகள் எழுகின்றன.
25 லட்சம் காப்பீடு
ரூ.4,000 கோடியை காப்பீட்டு நிறுவனத்துக்கு வழங்கினால்தான் தலா ரூ.25 லட்சம் காப்பீடு செய்ய முடியும். அப்படியிருக்கும்போது, காப்பீட்டுத் திட்டத்துக்கான தொகை எவ்வளவு உயர்த்தப்பட்டது என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. காப்பீட்டு திட்டத்தில் எத்தனை மருத்துவமனைகளை இணைக்கப் போகிறார்கள் என்ற தகவலும், என்னென்ன சிகிச்சைகள் அதன் கீழ் அடங்கும் என்ற விவரங்களும் இல்லை. இதன் பிரீமியம் தொகை எவ்வளவு என்பதையும் அரசு அறிவிக்கவில்லை.
மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டத்தின் நீட்சிதான் முதலமைச்சரின் இந்த அறிவிப்பா? அப்படியானால் மாநில அரசின் பங்குத்தொகை எவ்வளவு? இந்த அறிவிப்பு விளம்பரத்துக்காக மட்டுமே செய்யப்பட்டதா? முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தைத் தனித் திட்டம்போல் அறிவித்தது ஏன்?
கார் வழங்குவது தொடர்பான விவகாரத்தில், கார் இல்லாத எம்.எல்.எல்.ஏ.க்களுக்கு மட்டுமே கார் வழங்க வேண்டும். தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள விவரத்தின் அடிப்படையில்தான் கார் வழங்க வேண்டும். "திமுக ஆட்சியில் கஜானா காலியாக விட்டுப் போயிருந்தால், அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் எப்படி கார் வழங்க முடியும்?'
எம்எல்ஏக்களுக்கு கார்
தேர்தல் வேட்புமனுவில் யார் எல்லாம் கார் வைத்துள்ளனர்; அவர்களின் பொருளாதார நிலை பற்றி வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். எனவே, அதை ஆராய்ந்து கார் இல்லாத எம்எல்ஏக்களுக்கு மட்டும் கார் வழங்க வேண்டும்.
சட்டப்பேரவையில் உள்ள 234 எம்எல்ஏக்களில் 190 எம்எல்ஏக்கள் கோடிகளில் சொத்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. ஏழை, எளிய சாமானியர்களை சட்ட மன்றத்துக்குள் கொண்டு வந்திருப்பதாக சொல்லும் முதல்வர் விஜய், யார் கார் வைத்துள்ளனர், கார் இல்லை என வேறுபடுத்தி பார்த்து கார் வழங்கினால் உகந்ததாக இருக்கும்.
500 யூனிட்டுகளுக்குள்தான் 200 யூனிட் இலவச மின்சாரம் பொருந்தும் என்று தவெக அரசு சொல்கிறது. 501 யூனிட்டுக்கு மேல் சென்றால், ஒரு யூனிட்டுக்கு ரூ.4 என்று கணக்கிடப்படுவதால்தான் தற்போது மின்கட்டணம் அதிகரித்துள்ளது. இப்படித் திட்டங்களைக் கொடுப்பதுபோல் கொடுத்துவிட்டு, மக்களிடம் பணத்தைச் சுரண்டுகிறார்கள். 110 விதியின் கீழ் வெற்று அறிவிப்புகளை அறிவிப்பது சட்டமன்றத்துக்கு தலைகுனிவு" என்றெல்லாம் காட்டமாக தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
