மெடிக்கல் ஷாப்களில் பிளட் டெஸ்ட்.. சின்ன லேப்களுக்கு செக் வைத்த அரசாணை 41! கிளம்பி வந்த எஸ்டிபிஐ
சென்னை: சிறிய ரத்த பரிசோதனை மையங்களை மூடச் செய்யும் புதிய அரசாணையை எதிர்த்து சென்னையில் லேப் டெக்னீஷியன்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.. லேப் டெஸ்ட் முடிவுகளில் முதுநிலை படித்தவர்கள் மட்டுமே கையெழுத்திட வேண்டும் என்ற இந்த விதியால் சிறிய லேப்கள் முடங்கிப் பெருநிறுவனங்கள் மட்டுமே லாபம் அடையும் என்றும், இதனால் ஏழை எளிய மக்களின் எளிய மருத்துவ சேவை கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கம் இணைந்து சென்னையில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் தமிழக சுகாதாரத் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சிறிய ரத்தப் பரிசோதனை மையங்களின் இருப்பைக் கேள்விக்குறியாக்கும் அரசாணை எண் 41/2026-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் அல்லது திருத்தம் செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் பங்கேற்றவர்கள் ஆவேசமாகக் குரல் எழுப்பினார்கள்..
மெடிக்கல் ஷாப்களில் பிளட் டெஸ்ட்
முக்கியமாக, ரத்த பரிசோதனை மையங்களின், பரிசோதனை முடிவுகளில் டாக்டர் அல்லது குறிப்பிட்ட முதுநிலைப் படிப்பு படித்தவர்கள் மட்டுமே கையெழுத்திட வேண்டும் என்ற புதிய நிபந்தனைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
சங்கத்தினர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசும்போது, "தமிழகத்தில் உள்ள அடிப்படை ரத்தப் பரிசோதனை மையங்களில் ரத்தச் சர்க்கரை, ஹீமோகுளோபின் உள்ளிட்ட எளிய பரிசோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய மையங்களில் CMLT, DMLT, BSc MLT உள்ளிட்ட பல்வேறு லேப் படிப்புகளை முடித்தவர்கள் பல வருடங்களாகவே டெஸ்ட்டுகளை எடுத்து, முடிவுகளில் கையெழுத்திட்டு வருகிறார்கள்.
ஆனால், இப்போது டாக்டர் அல்லது Medical Pathology, Medical Microbiology, Medical Biochemistry போன்ற துறைகளில் முதுநிலை படித்தவர்கள் மட்டுமே கையெழுத்திட வேண்டும் என்ற புதிய நிபந்தனை, சிறிய பரிசோதனை மையங்களுக்கு மிகப்பெரிய சுமையாக மாறும்.
சின்ன சின்ன லேப்கள்
குறைந்த கட்டணத்தில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்குத் தடையின்றி சேவை வழங்கி வரும் இந்த சின்ன சின்ன சென்டர்களில், முதுநிலை பட்டதாரிகளை அதிக சம்பளத்தை தந்து பணியமர்த்துவது பொருளாதார ரீதியாக சாத்தியமில்லை... இதனால் சின்ன சின்ன லேப்கள் மூடப்படும் நிலை உருவாகி, பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த விதிமுறை சாதகமாக போய் முடியும்.. அத்துடன் ஏழை எளிய மக்கள் தங்களது இருப்பிடங்களுக்கு அருகிலேயே குறைந்த கட்டணத்தில் ரத்த பரிசோதனை செய்து கொள்ளும் வசதியும் போய்விடும்.
அதேபோல வெப்சைட்கள், ஆப்கள் மூலம் சேகரிக்கப்படும் ரத்த மாதிரிகள் முறையாக ரிஜிஸ்டர் செய்யப்பட்ட நிலையங்களில், தகுதியானவர்களால் பரிசோதிக்கப்படுகிறதா என்பதை அரசு கண்காணிக்க வேண்டும்..
மெடிக்கல் ஷாப்களில் பிளட் டெஸ்ட்
அதேபோல மெடிக்கல் ஷாப்களில், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்களில், பூங்காக்களில், சூப்பர் மார்க்கெட்டுகளில் என பொது இடங்களில் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் ரத்தப் பரிசோதனை செய்வதற்குத் தடை விதிக்க வேண்டும்..
அங்கீகாரம் பெறாத கல்வி நிலையங்களில் லேப் டெக்னீஷியன்களுக்கு குறுகிய காலப் பயிற்சி அளித்து தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும், இணை மருத்துவக் கழகத்தில் சங்கத்திற்கு நிரந்தர உறுப்பினர் அங்கீகாரம் வழங்க வேண்டும், சிறிய ரத்தப் பரிசோதனை மையங்களுக்கான மருத்துவக் கழிவு அகற்றும் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளையும் போராட்டத்தில் திட்டவட்டமாக முன்வைத்துள்ளனர். இந்த கோரிக்கைகள் அனைத்துமே மருத்துவ துறையிலும், பொதுமக்களிடமும் மிகப்பெரிய கவனத்தை பெற்று வருகிறது..
அரசுக்கு போன எஸ்டிபிஐ கோரிக்கை
இப்படிப்பட்ட சூழலில், சிறிய ரத்த பரிசோதனை நிலையங்களை பாதிக்கும் அரசாணையை உடனடியாகத் திரும்ப பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசாணை எண் 41/2026 சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களையும், அங்கு பணியாற்றும் லேப் டெக்னீசியன்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் வகையில் உள்ளது.
BMLT, DMLT உள்ளிட்ட படிப்புகளை முடித்த நுட்புநர்கள் பரிசோதனை அறிக்கைகளில் கையெழுத்திட தடை விதித்து, மருத்துவர்கள் மட்டுமே கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை நடைமுறைக்கு சாத்தியமற்றது, இது சிறிய ஆய்வகங்களின் செயல்பாட்டை பாதித்து கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு வழிவகுக்கும்.
பரிசோதனை அறிக்கைகள்
மருத்துவர்களை சார்ந்து பரிசோதனை அறிக்கைகளை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டால், ரத்தப் பரிசோதனைக் கட்டணம் உயரும் அபாயம் உள்ளது. இதனால் ஏழை எளிய மக்களுக்கான குறைந்த கட்டண சுகாதார சேவைகள் பாதிக்கப்படும்.. சிறிய ஆய்வகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பிற கட்டுப்பாடுகளையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்..
அரசாணை எண் 41/2026-ல் சிறிய ஆய்வகங்களைப் பாதிக்கும் விதிகளை உடனடியாக ரத்து செய்து, அனுபவமிக்க ஆய்வக நுட்புநர்கள் தொடர்ந்து பரிசோதனை அறிக்கைகளில் கையெழுத்திடும் உரிமையை உறுதி செய்ய வேண்டும்.. பாதிக்கப்பட்ட லேப் உரிமையாளர்கள் மற்றும் நுட்புநர்களின் போராட்டங்களுக்கு எஸ்டிபிஐ கட்சி முழு ஆதரவு அளிக்கும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
