கடைகளின் பெயர்ப்பலகைகள் தமிழில்! விதிமீறல்கள் இருப்பின் ரூ.2,000 வரை தண்டம் கட்ட வேண்டியிருக்கும்!
சென்னை: வணிக நிறுவனங்களில் பெயர்ப்பலகைகளில் தமிழில் நிறுவுவது தொடர்பான கூட்டம் அமைச்சர்கள் சாமிநாதன், சி.வி. கணேசன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ் நாட்டிலுள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்கள், கடைகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றின் பெயர்ப் பலகைகள் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, முதலில் தமிழில் முதன்மையாக இடம்பெற வேண்டும் என்பதுடன் அதனைத் தொடர்ந்து ஆங்கிலத்திலும், தத்தம் தாய்மொழிகளிலும் 5 : 3 : 2 என்ற விகிதத்தில் அமையப் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

வணிக நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்குதல் மற்றும் புதுப்பித்தலின்போதே பெயர்ப்பலகைகள் தமிழில் இருப்பதை உரிய அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டுமென தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர் கேட்டுக் கொண்டார். பல மாவட்டங்களில் தாம் ஆய்வு செய்தபோது, ஆங்கிலப் பெயர்ப்பலகைகள் தான் மிகுதியாகக் காணப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், அந்நிலையை மாற்றி தமிழில் பெயர்பலகைகள் நிறுவ வலியுறுத்தினார்.
பெயர்ப்பலகைகள் தொடர்பான விதிமீறல்களுக்கு விதிக்கப்படும் தண்டத்தொகை ரூ.50லிருந்து ரூ.2000 ஆக உயர்த்துவதற்கு வகை செய்யப்பட்டிருப்பது பற்றியும் பேசப்பட்டது. தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக எதிர்வரும் திசம்பர் திங்களில் நடத்தப்படும் ஆட்சிமொழிச் சட்ட வார (திசம்பர் 21 முதல் ஏழு நாள்கள்) நிகழ்ச்சியில் ஒரு நாள் நிகழ்ச்சியாக, வணிக நிறுவனங்களின் பெயர்கள் தமிழில் முதன்மையாக அமைவதை வலியுறுத்தும் வண்ணம் பேரணி / விழிப்புணர்வுக் கூட்டங்கள் வணிகர் சங்கங்களுடன் இணைந்து தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடத்திடுமாறு அமைச்சர் சாமிநாதன் அறிவுறுத்தினார்.
இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் வெறுமனே தமிழில் மட்டும் தான் பெயர்ப்பலகைகளை நிறுவ வேண்டும் என்பதில்லை. பிரதானமாக, அதாவது முதன்மையாக தமிழிலும் அடுத்ததாக ஆங்கிலத்திலோ அல்லது தங்கள் தாய் மொழியிலோ 5 : 3 : 2 என்ற விகிதத்தில் பெயர்ப் பலகைகள் நிறுவிக்கொள்ளலாம் என்பது தான். இதனால் இனியும் தமிழ் பெயர்ப்பலகைகளை மாற்றாத நிறுவனங்கள் விரைந்து மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதும் இல்லையெனில் தண்டத்தொகை ரூ.50லிருந்து ரூ.2000 ஆக உயர்த்துவதற்கு வகை செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications