"கிளம்பி வாங்க".. அவரா? இங்கேயே.. எடப்பாடி வெச்ச புள்ளியில் இணைகிறதா கட்சிகள்.. கடுப்பில் கமலாலயம்?
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைய போகும் கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் என்னென்ன
சென்னை: எடப்பாடி பழனிசாமியின் அடுத்தக்கட்ட நகர்வு என்னவாக இருக்க போகிறது? பாஜக அடுத்து என்ன செய்ய போகிறது? என்ற எதிர்பார்ப்புகள் எகிறி வருகின்றன.
பாஜகவில் உள்ள அதிருப்திகள் காரணமாக, முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் இணைந்து வருகிறார்கள்.. கட்சியில் இருந்து விலகுபவர்களை, எடப்பாடி பழனிசாமி அரவணைத்து கொள்வதால், கூட்டணி கட்சியான பாஜக கொதிப்பில் காணப்படுகிறது.
இதனால், எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்து பாஜகவினர் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.. தமிழகம் முழுவதும் ஆங்காங்கே எடப்பாடிக்கு எதிர்ப்புகள் பெருகிவரும் நிலையில், அதிமுகவினர் 50 பேர், தங்களது அதிமுக அடையாள அட்டையை அண்ணாமலையிடம் ஒப்படைத்துவிட்டு, பாஜவில் இணைந்த சம்பவமும் மறுபுறம் நிகழ்ந்து வருகிறது.

சுருக் எடப்பாடி
இந்த மோதல் மற்றும் அதிருப்திக்கான முதல் புள்ளியை வைத்ததே எடப்பாடி பழனிசாமிதான் என்கிறார்கள்.. இதற்கு என்ன காரணம்? அப்படியானால், பாஜகவை கூட்டணியில் இருந்து கழட்டிவிட எடப்பாடி தயாராகி விட்டாரா? என்ற கேள்விகள் எழுகின்றன.. கடந்த முறை சட்டமன்ற தேர்தலின்போதே, கூட்டணிக்கு தலைமை யார் என்று எடப்பாடி பழனிசாமியிடம் கேட்கப்பட்டிருந்தது.. அதற்கு எடப்பாடி, 'தேர்தல் நெருங்கும்போதுதான் அதுகுறித்து முடிவு எடுக்கப்படும்' என்று கூறியிருந்தார்.. அதேபோல், முதல்வர் வேட்பாளர் என்று, பாஜக தரப்பில் செய்தியாளர்கள் கேட்டனர்.. அதற்கு, 'பாஜக மேலிடம் தான் அதை பற்றி முடிவு செய்யும்' என்று எல்.முருகன் முதல் வானதி சீனிவாசன் வரை பதிலளித்திருந்தனர்..

கன்ட்ரோல்
பொதுவாக மக்களவை தேர்தலின்போதுதான், மேலிட பாஜக, கூட்டணி தலைமை, சீட் விவகாரங்களில் முடிவு செய்வது வழக்கம் என்றாலும், இங்கே நடக்கும் சட்டசபை தேர்தலிலும் தன் கன்ட்ரோலிலேயே கூட்டணியை வைத்திருக்க நினைத்ததை எடப்பாடி பழனிசாமி தரப்பு அப்போதே விரும்பவில்லை என்கிறார்கள். சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே, அதாவது எம்பி தேர்தலின்போதே, பாஜகவை கழட்டிவிட்டு தேர்தலை சந்திக்க எடப்பாடி பழனிசாமி யோசித்திருந்தாராம்.. இதற்கு காரணம், அப்போதுதான், குடியுரிமை சட்டம், சிஏஏ போன்ற விவகாரங்கள் தலைதூக்கி மக்கள் மனதில் குறிப்பாக சிறுபான்மையினர் மத்தியில் அதிருப்தி அலை படர்ந்திருந்தது..

தன்னிச்சை
எனவே, பாஜகவை தவிர்த்து தேர்தலை சந்திக்கவே எடப்பாடி முடிவு செய்திருந்தபோது, ஓபிஎஸ் அப்போது உள்ளே புகுந்து, ஆட்டத்தை கலைத்துவிட்டாராம்.. அதுமட்டுமல்லாமல், பாஜகவுடன் தான் கூட்டணி என்பதையும் எடப்பாடி பழனிசாமியை கேட்காமலேயே தன்னிச்சையாக அறிவித்து விட்ட கோபமும் எடப்பாடி பழனிசாமிக்கு இன்னமும் ஓபிஎஸ் மீது இருக்கத்தான் செய்கிறதாம். சுருக்கமாக சொல்லப்போனால், கடந்த 3 வருட காலமாகவே பாஜக கூட்டணியை விரும்பாமல், மென்று விழுங்கி கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இப்போது ஒன்று சேர்ந்து பாஜகவை எதிர்க்கும் மனநிலைமைக்கு வந்துவிட்டதாகவே தெரிகிறது..

அன்வர் ராஜா
அதுமட்டுமல்ல, கடந்த எம்பி தேர்தலின் சமயம், அதாவது குடியுரிமை சட்டம் எதிரொலித்தபோது, அதிமுகவின் மூத்த தலைவர் அன்வர்ராஜா, எடப்பாடி பழனிசாமியிடம் ஒரு விஷயத்தை சொல்லி வருத்தப்பட்டாராம். "நிலைமை இங்கே ரொம்ப மோசமாயிருச்சு.. தமிழக இஸ்லாமியர்கள் எல்லாம் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.. அதிமுகவுக்கு பாரம்பரியமாக வாக்களிக்க கூடியவர்களே, இந்த முறை வாக்களிக்கவில்லை" என்றெல்லாம் சொல்லி கவலைப்பட்டாராம்.. அதற்கு எடப்பாடி பழனிசாமி, பாஜக கூட்டணியே அடுத்த முறையும் தொடருமா என்பது நிச்சயமில்லை, எல்லாம் சரியாயிரும், சிறுபான்மையினர் நம்மை விட்டு போக மாட்டார்கள் என்று நம்பிக்கையாக கூறியிருந்தாராம்...

செங்கோட்டையன்
ஆக, எம்பி தேர்தலிலும் சரி, சட்டசபை தேர்தலிலும் சரி, அதிமுக தோல்வியை சந்தித்தது.. சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே, அதாவது எம்பி தேர்தலின்போதே, பாஜகவை கழட்டிவிட்டு தேர்தலை சந்திக்க எடப்பாடி பழனிசாமி கணக்கு போட்டதாக சொன்னார்கள்.. அந்த காய்நகர்த்தலைதான் எடப்பாடி கையில் எடுத்துள்ளார் என்கிறார்கள்.. கேபி முனுசாமி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ்.மணியன், போன்றோர் பாஜகவுக்கு எதிரான கருத்துக்களை விடாமல் வெளிப்படுத்தி வரும் நிலையில், பாஜகவை வெளியேற்றி விட்டால், திமுக கூட்டணியை எளிதாக உடைத்து விடலாம் என்ற நம்பிக்கையும் எடப்பாடியிடம் இருப்பதாக சொல்கிறார்கள்..

அசால்ட் எடப்பாடி
மேலும், நடந்து முடிந்த இடைத்தேர்தலில் 25.8 சதவீத ஓட்டுகளுடன் டெபாசிட் தொகையை தக்க வைத்தது எடப்பாடிக்கு புது தெம்பை தந்துள்ளதாம்.. அந்தவகையில், பாஜகவை கழட்டிவிட்டு தேர்தலை சந்திக்க தயாராகி கொண்டிருக்கிறது எடப்பாடி கூடாரம் என்கிறார்கள். வரும் எம்பி தேர்தலில் மெகா கூட்டணி அமைப்போம் என்று கடந்த நவம்பரில் நடந்த அதிமுக பொன்விழா பொதுக்கூட்டத்தில் எடப்பாடி அறிவித்திருந்தார்.. அப்படியானால், பாஜகவை தவிர்த்து, எடப்பாடி பழனிசாமி யாருடன் கூட்டணி அமைக்க போகிறார்? என்ற எதிர்பார்ப்பும் எழுகிறது.

காம்ரேடுகள்
திமுக கூட்டணியில் விசிக வலுவாக உள்ளது, இந்த கூட்டணியை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்று திருமாவளவன் தொடர்ந்து உறுதிப்படுத்தி வந்தாலும், விசிக மீதும் அதிமுகவுக்கு ஒரு கண் இருப்பதாகவே சொல்கிறார்கள்.. திமுக ஆட்சி மீது பல்வேறு விஷயங்களில் விசிகவுக்கு அதிருப்திகள் உள்ளதால், விசிகவை கூட்டணியில் இணைக்க நிச்சயம் எடப்பாடி டீம் முயலக்கூடும் என்றும் கிட்டத்தட்ட இதே மனநிலையில்தான் கம்யூனிஸ்ட்களும் உள்ளனர் என்றும் சொல்கிறார்கள்.. பாஜக என்ற கட்சி இருப்பதால் மட்டுமே கூட்டணிக்குள் விசிக - கம்யூனிஸ்ட்கள் வர முடியாமலும் உள்ளதால், பாஜகவை கழட்டிவிட எடப்பாடி வியூகம் அமைக்க துவங்கி உள்ளாராம்.

சவுக்கடி
பாஜகவை வெளியேற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே, நிர்மல்குமார் போன்ற நிர்வாகிகளை, கட்சிக்குள் இணைத்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.... அதுமட்டுமல்ல, எடப்பாடியை சந்தித்து வந்த பிறகுதான், செருப்புபோல தொண்டர்களை நடத்துகிறார். மனநலம்...குன்றியவர்களை போல செயல்படுகிறார்' போன்ற கடுமையான வார்த்தைகளுடன், நிர்மல்குமார் அறிக்கை விடுத்ததாகவும் பாஜக குற்றஞ்சாட்டுகிறது.. காரணம், எடப்பாடியின் ஒப்புதலின்றி, இப்படியொரு அறிக்கை வெளியாக வாய்ப்பில்லை என்று அடித்து சொல்கிறார்கள் பாஜகவினர்.. கூட்டணியில் இருந்து பாஜகவை கழட்டிவிடும் பட்சத்தில், சசிகலா, ஓபிஎஸ் 2 பேரையும் கட்சியில் இணைக்க வேண்டும், டிடிவி தினகரனின் அமமுகவை கூட்டணியில் இணைக்க வேண்டும் என்ற அழுத்தங்களுக்கும் ஒரு விடிவு கிடைக்கும் என்றும் எடப்பாடி டீம் நம்புகிறதாம்..

ஜான் பாண்டியன்
விசிக + கம்யூனிஸ்ட்கள் இணையும் பட்சத்தில், தமாகா, புதிய தமிழகம், புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளுடன் இணைந்து அதிமுக கூட்டணி அமைக்கலாம்.. தேவைப்பட்டால் பாமகவையும் கூட்டணிக்கு இணைக்க முயற்சிக்கலாம் என்கிறார்கள்.. அதேபோல, அதிமுக இல்லாத சூழலில், ஓபிஎஸ் + சசிகலா + தேமுதிக + தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் + புதிய நீதி கட்சி + ஐஜேகே போன்ற கட்சிகளை உள்ளடக்கி பாஜக கூட்டணி அமைக்கலாம். இப்படி இரு தரப்பின் கூட்டணிகள் குறித்த சலசலப்புகள் வெடித்து கிளம்பினாலும், அதிமுக - பாஜகவை சமாதானப்படுத்தும் முயற்சிகள் விரைவில் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.. என்னதான் நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

சூரியக்கோட்டை
இதனிடையே, பாஜகவில் இருந்து மேலும் சிலர் எடப்பாடி டீமுக்கு தாவ உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.. கொடும்பாவி எரிப்பு நடந்து கொண்டிருக்கும் சூழலில், இப்படியான கட்சி தாவல்கள் அதிகரித்து வருவது, பெரும் கூட்டணி குழப்பத்தை தந்து வருகிறது.. இப்படி இரு தரப்பு கட்சி தொண்டர்களும் வீதியில் இறங்கி எதிர்ப்பை காட்டி வரும் நிலையில், நாளைக்கே இரு தரப்பு தலைவர்களும் சமாதானம் ஆனாலும், இக்கட்சிகளின் தொண்டர்கள் எப்படி சமாதானம் ஆவார்கள்? எப்படி தேர்தல் வேலைகளில் இணைந்து செயல்படுவார்கள்? என்பன போன்ற கேள்விகளும் எழுகின்றன.. எனினும் 10 கட்சிகளை கொண்டு பலம்வாய்ந்த கூட்டணியாக திமுக உள்ளபோது, இதற்கு மாற்றாக இவர்கள் எல்லாரும் சேர்ந்து என்ன செய்ய போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பும் எகிறி வருகின்றன.












Click it and Unblock the Notifications