தமிழகத்தில் மெல்ல பரவும் கொரோனா..1 லட்சம் இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் இன்று மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெகிறது.
சென்னை: கொரோனா பரவல் அதிகரிப்பதால் தமிழகத்தில் இன்று மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. முன்களப் பணியாளர்களுக்கும் 60 வயதை கடந்தவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது.
Recommended Video
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகமாக உள்ளது.

கொரோனா தொற்று அதிகரித்து வருவதையும், உருமாறிய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. தலைமை செயலாளர் இறையன்பு, காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலாளர் மருத்துவர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
மாநிலம் முழுவதும் கொரோனா சிகிச்சை வசதிகளை தயார் நிலையில் வைக்க வேண்டும் என்றும் கொரோனா கட்டுப்பாட்டு பணிகளை சுகாதாரத்துறை , உள்ளாட்சித் துறை, நகராட்சி நிர்வாகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை போன்ற துறைகளை ஈடுபடுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். மேலும், பணி செய்யும் இடங்கள், திருவிழாக்கள், திருமணங்கள், கூட்டங்கள், நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் மக்களிடையே ஒருசிலர் கோவிட் தொற்றால் பாதிக்கப்படும்போது, இவர்கள் அனைவரையும் பரிசோதனை செய்து தொடர் கண்காணிப்பு செய்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் முதல்வர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கோவிட் பாதுகாப்பு நடைமுறைகளான முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை கண்டிப்பாக கடைபிடித்திடவும் போதிய பரிசோதனைகள் தொடர் கண்காணிப்பு, சிகிச்சை மற்றும் தடுப்பூசி ஆகியவற்றை முறையாக பின்பற்றிட பொதுமக்களிடையே தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் தமிழகம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் 1 லட்சம் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 3 ஆயிரம் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணி தொடங்கி மாலை 7 மணிவரை தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. 2வது டோஸ் தடுப்பூசியை செலுத்தவும், பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications