செந்தில் பாலாஜிக்கு சிக்கல்.. விஜய் ’சர்க்கார்’ கையில் அமலாக்கத்துறை கொடுத்த ஆதாரம்! வெளியான தகவல்!
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வேலைவாய்ப்பு மோசடி வழக்கு மீண்டும் பரபரப்பான கட்டத்தை சந்தித்துள்ளது. போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாக பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரிக்க அனுமதி கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியுள்ளது. அதில், விசாரணைக்கு தேவையான ஆதாரங்கள், ரகசிய தகவல்கள் மற்றும் புகார் ஆவணங்களுடன், மின்னணு ஆதாரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக ஆட்சிக் காலத்தில், குறிப்பாக 2011 முதல் 2016 வரை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, அரசு போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடமிருந்து பணம் பெற்றதாக செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதுதொடர்பாக பல்வேறு புகார்கள் பதிவு செய்யப்பட்டதுடன், பின்னர் இந்த விவகாரம் நீதிமன்றங்களிலும் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த வழக்கை அடிப்படையாக கொண்டு அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடை சட்டத்தின் கீழ் தனியாக வழக்குப் பதிவு செய்தது.
செந்தில் பாலாஜி
அதில் செந்தில் பாலாஜியுடன் அவரது சகோதரர் அசோக் குமார் மற்றும் நெருங்கிய உதவியாளர்கள் சிலரின் பெயர்களும் சேர்க்கப்பட்டன. இந்த வழக்கில் கடந்த 2023ஆம் ஆண்டு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட சம்பவம் தேசிய அளவிலும் பரபரப்பாகப் பேசப்பட்டது. உடல்நலப் பிரச்சினைகள், நீதிமன்ற விசாரணைகள் என இந்த வழக்கு தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று வந்தது. பின்னர் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியதால் அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
அமலாக்கத்துறை
ஆனால், வழக்கின் நீதிமன்ற விசாரணை முழுமையாக இன்னும் தொடங்கப்படவில்லை. காரணம், அவர் மீது குற்றச்சாட்டு கூறப்படும் காலகட்டத்தில் அமைச்சராக இருந்ததால், அவரை எதிர்த்து வழக்கை முன்னெடுக்க மாநில அரசின் அனுமதி அவசியம் என்ற சட்ட நடைமுறை உள்ளது. இதனையடுத்து விசாரணையை தொடங்கக் கோரி அமலாக்கத்துறை அனுப்பிய கடித்தத்துக்கு அப்போதைய தமிழக அரசு அனுமதி வழங்க மறுத்ததாக கூறப்பட்டது. மேலும், மாநில அரசை நேரடியாக அணுகாமல் ஆளுநருக்கு கடிதம் அனுப்பியிருந்தது குறித்து தலைமைச் செயலாளர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
வேலைவாய்ப்பு மோசடி
மாநில அரசு ஊழியர்கள் மற்றும் அமைச்சர்களை விசாரிக்கும் விவகாரங்களில் உரிய அதிகாரம் மாநில அரசுக்கே இருப்பதாக அப்போது விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாக பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரிக்க அனுமதி கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியுள்ளது. தமிழக தலைமைச் செயலாளருக்கு நேரடியாக கடிதம் அனுப்பியுள்ள அமலாக்கத்துறை, விசாரணைக்கு தேவையான ஆதாரங்கள், ரகசிய தகவல்கள் மற்றும் புகார் ஆவணங்களை இணைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மின்னணு ஆதாரங்கள்
இதனுடன் மின்னணு ஆதாரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், இந்த விவகாரம் மீண்டும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு என்ன முடிவு எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஒருபுறம், ஊழல் குற்றச்சாட்டுகளில் கடுமையான நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
மாநில அரசு
மறுபுறம், இது அரசியல் பழிவாங்கல் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் நடவடிக்கை என திமுக தரப்பில் விமர்சனங்கள் எழ வாய்ப்பு இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். அதேநேரத்தில், சட்ட ரீதியாகவும் இந்த விவகாரம் மிகவும் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. மாநில அரசு அனுமதி வழங்கினால், அமலாக்கத்துறை நேரடி விசாரணையை தீவிரப்படுத்தும் வாய்ப்பு உள்ளது. அதன்பின் குற்றப்பத்திரிகை உள்ளிட்ட நீதிமன்ற நடவடிக்கைகளும் வேகமடையும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications