பிஎஃப் புதிய ரூல்ஸ்.. 100% பணம் எடுக்கலாம். மாதம் 1800 மேல் செலுத்துவது விருப்ப தேர்வு.. முழு விவரம்
சென்னை: வருங்கால வைப்பு நிதி அமைப்பில் உள்ள எட்டு கோடி ஊழியர்களுக்கு பலன் அளிக்கும் வகையில், புதிய விதிகள் விரைவில் அமலுக்கு வருகிறது. இதன்படி வருங்கால வைப்பு நிதியில் மாதம் ரூ.1,800-க்கு மேல் செலுத்துவது விருப்ப தேர்வாக மாறுகிறது. அதேபோல் தங்கள் கணக்கில் இருந்து பிஎஃப் சந்தாதாரர்கள் இனி 100 சதவீதம் வரை பணம் எடுக்கலாம். அதற்கான விதிமுறைகள் அமலுக்கு வர இருக்கிறது.
மாத சம்பளம் வாங்கும் ஊழியர்கள் ஏதேனும் ஒரு சூழலில் இடர்பாடுகளை சந்திக்கக்கூடாது என்பதற்காகவும், வேலையில் இருந்து ஓய்வு பெற்ற உடன், மாத ஓய்வூதியம் பெறுவதற்காகவும், வேலையை விட்டு நின்றால், குடும்பத்தினர் பாதிக்கப்படாத அளவிற்கு பணபலன் பெறுவதற்காகவும் மத்திய அரசு வருங்கால வைப்பு நிதி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அரசு ஊழியர்களுக்கு அரசே இந்த திட்டத்தினை சம்பளத்தை பிடித்து செயல்படுத்துகிறது. அதேபோல் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு அந்தந்த நிறுவனங்களை பங்களிப்பு தொகை செலுத்த வைத்து திட்டத்தை செயல்படுத்துகிறது. இந்த பிஎஃப் பணம் என்பது, இக்கட்டான சூழல் ஏற்படும் மாத சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு கைகொடுத்து வருகிறது. பிஎஃப் பணம் பிடிக்கும் திட்டம் பெரும்பாலான நிறுவனங்களில் உள்ளன. இதற்காக உருவாக்கப்பட்டது தான் வருங்கால வைப்பு நிதி அமைப்பு.

இந்த அமைப்பில் உறுப்பினர்களாக 8 கோடி ஊழியர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு பலன் அளிக்கும் வகையில், புதிய விதிகள் நடைமுறைளை மத்திய அரசு விரைவில் கொண்டு வர உள்ளது. வருங்கால வைப்பு நிதி அமைப்பு கொண்டுவரும் புதிய விதிகளின்படி, மாதம் ரூ.15 ஆயிரம் வரை உள்ள ஊதிய வரம்பில் 12 சதவீதம் பி.எப். பங்களிப்பு கட்டாயமாக இருக்கும். அதாவது, ஊழியரும், நிறுவனமும் தலா மாதம் அதிகபட்சமாக ரூ.1,800 வீதம் கட்டாயமாக செலுத்த வேண்டியது அவசியம் ஆகும்.
இதற்கு மேல் செலுத்தப்படும் தொகை அனைத்தும் விருப்பப் பங்களிப்பாக கருதப்படும். இதனால், ஒருவரின் அடிப்படை சம்பளம் ரூ.1 லட்சமாக இருந்தாலும், கட்டாய பி.எப். பிடித்தம் ரூ.1,800 மட்டுமே இனி இருக்கும். அதற்கு மேல் ஓய்வூதிய சேமிப்பை அதிகரிக்க விரும்பினால், கூடுதல் தொகையை விருப்ப அடிப்படையில் பி.எப். கணக்கில் செலுத்தலாம். அதாவது ஊழியர்கள் சட்டப்பூர்வ வரம்பை மீறி கூடுதல் பங்களிப்பை செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிறுவனங்களும் அந்த கூடுதல் தொகைக்கு இணையான பங்களிப்பை வழங்கலாம். ஆனால் அது கட்டாயம் கிடையாது.
மேலும், ஊழியர் அல்லது நிறுவனம் எந்த நேரத்திலும் இந்த கூடுதல் பங்களிப்பை குறைக்கவோ, நிறுத்தவோ முடியும். அதன் மூலம் உறுப்பினர்கள் தங்களின் ஓய்வூதிய சேமிப்பை தாங்களே திட்டமிட்டு அதிகரிக்க உதவும் என்பது அரசு ஊழியர்களின் கருத்தாக உள்ளது. அத்துடன் பி.எப். கணக்கிலிருந்து முன்பணமாக பணம் எடுக்கும் விதிகளிலும் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது ஓர் ஆண்டுக்கு பணம் எடுக்கும் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் தகுதியான இருப்புத் தொகையில் 100 சதவீதம் வரை முன்பணமாக எடுத்துக்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஊழியர் மற்றும் நிறுவனம் செலுத்திய பங்களிப்பு தொகைகளும் அடங்கும். எனினும், உறுப்பினர்கள் தங்களது கணக்கில் உள்ள மொத்த பங்களிப்பில் குறைந்தபட்சம் 25 சதவீதத்தை இருப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும். இந்த விதிமுறைகள் அனைத்தும் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது.














Click it and Unblock the Notifications