தமிழகத்தில் 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்.. 2வது டோஸுக்கு முன்னுரிமை
சென்னை: தமிழகத்தில் இன்று 17வது கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்று வருகிறது.
Recommended Video
கொரோனா மற்றும் ஓமிக்ரான் பரவல் காரணமாக தமிழகத்தில் தடுப்பூசி திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்படும் நிலையில் தமிழகத்தில் 100 சதவீதம் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை உறுதி செய்யும் வகையில் தடுப்பூசி திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 16 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்ற நிலையில் முதல் தவணையாக 87 சதவீதத்தினருக்கும், இரண்டாவது தவணையாக சுமார் 50 சதவீதத்தினருk்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மெகா தடுப்பூசி முகாம்
இந்த நிலையில் 17வது தடுப்பூசி முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்று வருகிறது. சென்னையில் இந்த தடுப்பூசி முகாமினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

சென்னையில் 1600 இடங்களில் முகாம்
தமிழகம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் இடங்களில் இந்த முகாம் நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் மட்டும் 1600 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இதே போல தமிழகம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் வழிபாட்டுத்தலங்கள் பேருந்து நிலையம் மற்றும் பள்ளிகளில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

2வது டோஸுக்கு முன்னுரிமை
காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த முகாம்கள் நாளை மாலை 5 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி முகாமில் காலக்கெடு முடிந்து இரண்டாவது தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத நபர்கள் இந்த முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடுத்த வாரம் முதல் சனிக்கிழமை முகாம்
தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் மெகா தடுப்பூசி முகாம் வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெற்று வந்த நிலையில் இந்த ஆண்டு புத்தாண்டு விடுமுறை காரணமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாகவும், அடுத்த வாரம் முதல் வழக்கம்போல் சனிக்கிழமைகளில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்












Click it and Unblock the Notifications