மேகதாது அணை பற்றி டெல்லியில் டிகே சிவக்குமாருடன் ஏன் விஜய் பேசவில்லை – திமுக பரந்தாமன் சாடல்
சென்னை:''டெல்லியில் சென்ற முதல்வர் விஜய் ஏன் மேகதாது அணை தொடர்பாக கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமாரிடம் பேசவில்லை'' என்று திமுகவின் சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

''டெல்லியில் முதல்வர் விஜய் பின்வாசல் வழியாக சென்றுள்ளார். அமைச்சர் ராஜ்மோகன் வடநாட்டு அமைச்சர் போல் உடையணிந்து பழைய புளித்துபோன விஷயம் பற்றி பேட்டி கொடுத்துள்ளார். தமிழக முதல் அமைச்சரும் சரி, தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரும் சரி, திமுக சார்பில் உங்களிடம் கேட்கக்கூடிய ஒரு கேள்வி இதுதான். நேற்று உங்கள் பக்கத்தில் சோனியா காந்தி இருந்தார்.
கர்நாடகா முதலமைச்சர் டிகே சிவக்குமார் இருந்தார். மேகதாது அணை கட்டக்கூடாது என்று நீங்கள் கோரிக்கை வைத்தீர்களா? மேகதாது அணை கட்டக்கூடாது என பேச முதல்வருக்கு துப்பில்லை. பத்திரிகையாளர்களை சந்திக்க தமிழக அமைச்சருக்கு தைரியமில்லை. ஆனால் தமிழ்நாட்டில் அரசியலை மடைமாற்றம் செய்வதற்காக ஏதேதோ டெல்லியில் போய் பேசுகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு பெங்களூரில் மெட்ரோ ரயில் தொடக்க விழாவில் பிரதமர் மோடி முன்பு கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார் மேகதாது அணையை கட்டியே தீருவோம். யார் தடுத்தாலும் கட்டியே தீருவோம். எங்களுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே போதும் என்று சொல்கிறார். தேவகவுடா என்ன சொல்கிறார். இது 50 வருடத்திற்கு முந்தைய தீர்ப்பு அதனை வைத்து பேசுவது சரியாக இருக்காது என்கிறார். இதன்மூலம் காவிரி தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய சொல்கின்றனர்.
தமிழகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து உள்ளது. காவிரி டெல்டா பகுதிகளை வறண்ட பாலைவனமாக்கும் வகையில் முதல்வர் விஜய் சென்று கொண்டிருக்கிறார். இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு சிந்து நதி பாய்கிறது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது போல் காவிரி நதிநீர் ஆணையத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வாதம் வைக்கிறார்கள்.



Click it and Unblock the Notifications
