மேகதாது அணை விவகாரம்! உதயநிதி சொன்னதை விஜய் ஏற்றிருக்கக் கூடாது! சிக்கல்தான் போங்க! அன்புமணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேகதாது விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது, தமிழகத்தின் உரிமைகளை
பாதிக்கும் யோசனையை திரும்பப் பெறுங்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பதால் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு தீர்வு காண தனி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட அரசினர் தீர்மானத்தில் சேர்க்கப்பட்டிருப்பதற்கு உழவர் அமைப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

Mekedatu Dispute

மேகதாது அணை சிக்கலில் தமிழகத்தின் பக்கம் நியாயம் இருக்கும் நிலையில், அதை வலியுறுத்தாமல் மத்திய அரசை மத்தியஸ்தம் செய்யக் கோருவது தமிழகத்தின் உரிமைகளை நாமே அடகு வைப்பதாக அமைந்து விடும்.

தமிழ்நாடு சட்டசபையில் கடந்த வெள்ளிக்கிழமை மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அரசினர் தீர்மானம் ஒன்றை முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் முன்மொழிந்தார். மேகதாது அணைக்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் என எவ்வித அனுமதியும் கொடுக்கக் கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்துகிறோம் என்றும், காவிரி படுகையில் எவ்வித நீர் தேக்கத்தையும் கர்நாடக அரசு கட்டக் கூடாது என்று அம்மாநிலத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என்றும் அதில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

அந்தத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பா.ம.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் தீர்மானத்திற்கு முழு ஆதரவு தெரிவித்தனர். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசும் போது,''மேகதாது பிரச்னைகளுக்காக தனி நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்த வேண்டும்'' என்ற கோரிக்கையை முன்வைத்தார். அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் விஜய், பேரவைத் தலைவரை கேட்டுக் கொண்டதையடுத்து மேகதாது அணை சிக்கலுக்காக தனி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற யோசனையையும் சேர்த்து அனைத்துக் கட்சி ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகாதாது அணை கட்டுவதை என்ன விலை கொடுத்தாவது தடுத்து நிறுத்த வேண்டும்; மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகி விடும் & சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் மற்றும் மாவட்டங்களைச் சேர்ந்த 5 கோடி மக்களுக்கு குடிநீர் கிடைக்காது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். இதற்காக அரசுத் தரப்பில் மேற்கொள்ளப்படும் அனைத்து சரியான சட்ட, அரசியல் முயற்சிகளுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி நிபந்தனையற்ற ஆதரவை அளிக்கும்.

அதே நேரத்தில், மேகதாது அணை விவகாரத்திற்காக தனி நடுவர் மன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற அரசின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது. மேகதாது அணை சிக்கலுக்கு தனி நடுவர் மன்றம் தான் தீர்வு என்று எந்த அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை கூறினார்; அந்த ஆலோசனையை முதலமைச்சர் விஜய் எந்த அடிப்படையில் ஏற்றுக்கொண்டார் என்பது தெரியவில்லை.

மேகதாது அணை சிக்கலைத் தீர்க்க ஆக்கப்பூர்வமான யோசனை எதையாவது வழங்க வேண்டும் என்ற ஆர்வத்தில், அதனால் ஏற்படும் பின்னடைவுகள் குறித்து அறியாமல், எதிர்க்கட்சித் தலைவர் இந்த யோசனையை வழங்கியிருக்கலாம்; அவை நாகரிகம் மற்றும் ஜனநாயக மாண்புகளை மதித்து இந்த யோசனையை முதலமைச்சரும் ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால், தனி நடுவர் மன்றம் நிலைமை மேலும் மோசமாக்கும் என்பதே எதார்த்தம்.

காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007&ஆம் ஆண்டு பிப்ரவரி 5&ஆம் தேதி அளித்தத் தீர்ப்பின் 4&ஆம் தொகுதியின் 173, 174, 175 ஆகிய பக்கங்களில் கர்நாடகத்தின் பாசனப் பரப்பு தொடர்பாக கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, கிருஷ்ணராஜ சாகர், சுவர்ணவதி, அக்ராவதி உள்ளிட்ட அணைகளின் நீரைக் கொண்டு செயல்படுத்தப்படும் 28 திட்டங்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், அந்தத் தீர்ப்பின் மூன்றாம் தொகுதியின் 98, 99, 100 ஆகிய பக்கங்களில் கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் 1972&ஆம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட ஒரு டி.எம்.சிக்கும் கூடுதலான கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கங்கள், 1972&ஆம் ஆண்டுக்கு பிறகு கட்டப்பட்ட ஒரு டி.எம்.சிக்கும் அதிக கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கங்கள், எதிர்காலத்தில் கட்டப்படுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நீர்த்தேக்கங்கள் என முறையே 13, 13, 8 திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

இவற்றில் எதிலுமே மேகதாது அணை குறிப்பிடப்படவில்லை. குறிப்பாக புதிதாக செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள 8 திட்டங்களும் கேரளத்தில் கபினி நீர்ப்பிடிப்பு பகுதியில் தான் உள்ளனவே தவிர கர்நாடகத்தில் எந்தத் திட்டமும் இல்லை.

அவ்வாறு இருக்கும் போது, புதிதாக எந்த பாசனத் திட்டத்தையும் மேற்கொள்ள முடியாது என்ற தீர்ப்பின் அடிப்படையில் மேகதாது அணை உள்ளிட்ட எந்தத் திட்டத்தையும் கர்நாடக அரசால் செயல்படுத்த முடியாது.

மேலும் மேல்மடை மாநிலங்களான கர்நாடகம், கேரளம் ஆகியவற்றில் எந்த கட்டுமானங்களை மேற்கொள்வதாக இருந்தாலும் கடைமடை பாசன மாநிலமான தமிழ்நாட்டின் அனுமதி அவசியம் என்று காவிரி நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும் தெளிவாக தீர்ப்பளித்துள்ளன.

அவ்வாறு இருக்கும் போது, மேகதாது அணை விவகாரத்திற்கு தீர்வு காண புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு கோருவது தேவையில்லாத சிக்கல்களை ஏற்படுத்தும்; நாமே தமது தலையை தேவையில்லாமல் முதலையின் வாயில் கொடுப்பதற்கு ஒப்பாகி விடும்.

மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை சட்டப்போராட்டம் மற்றும் அரசியல் அழுத்தத்தின் மூலமும் தான் பாதுகாக்க முடியும். இதற்கான தமிழக அரசின் முயற்சிகளுக்கு பாமக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவாகத் தான் உள்ளன.

இத்தகைய சூழலில் மேகதாது அணை சிக்கலுக்கு தீர்வு காண தனி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று கோருவதன் மூலம் கர்நாடகத்திற்கு சாதகமான நிலையை ஏற்படுத்தி விடக் கூடாது. எனவே, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தனி நடுவர் மன்றம் குறித்த பகுதிகளை உரிய பேரவை விதிகளை பின்பற்றி நீக்கி விட்டு, அதன்பிறகே மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் விமர்சித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+