ரூ.600 கோடி சொத்து காட்டியுள்ளேன்.. பூதக்கண்ணாடி வைத்து பார்க்குறாங்க! நீதிமன்றத்தில் விஜய் வாதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் பிரமாணப் பத்திரமான படிவம் 26-ல் உள்ள சொத்துக்களின் மதிப்பில் ஏற்படும் சிறிய ஏற்ற இறக்கங்களை, மனுதாரர் பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்து அணு அணுவாகக் குற்றம் சாட்டுகிறார். ஆனால், இந்த வாதங்கள் எதுவுமே எனது தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்குத் தொடர்வதற்கான சட்டப்பூர்வ முகாந்திரத்தை உருவாக்கவில்லை என்று விஜய் இன்று கோர்ட்டில் வாதம் வைத்தார்.

பெரம்பூர் தொகுதி தேர்தல் வழக்கை ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்யக் கோரி, தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவின் மையப்புள்ளி இதுதான்.

tvk vijay

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய் பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி, அதே தொகுதியைச் சேர்ந்த எஸ். தினேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனுவை விசாரணைக்கே ஏற்காமல் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற விஜய்யின் மனுவை நீதிபதி வி. லட்சுமிநாராயணன் விசாரித்து வருகிறார்.

பூதக்கண்ணாடி பார்வை: விஜய் தரப்பு வைக்கும் விளக்கம்

தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் அசையாச் சொத்துகளின் பரப்பளவு, வாங்கிய விலை மற்றும் தற்போதைய மதிப்பு ஆகியவற்றில் குளறுபடிகள் இருப்பதாக மனுதாரர் கூறிய குற்றச்சாட்டுகளை விஜய் தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

நீதிமன்றத்தில் விஜய் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

மனுதாரர் தாக்கல் செய்துள்ள மனு முழுக்க முழுக்க பக்கம்பக்கமாக படிவம் 26-ஐ அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து ஆராய்ந்து, சொத்து மதிப்பில் உள்ள சிறு ஏற்ற இறக்கங்களை மட்டுமே பட்டியலிட்டுள்ளது. இது ஒரு சட்டப்பூர்வ வழக்கைத் தொடங்குவதற்கான அடிப்படைக் காரணமே அல்ல.

நான் சொத்துக்களை முழுமையாக மறைத்துவிட்டேன் என்றோ, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளேன் என்றோ மனுதாரர் கூறவில்லை. சுமார் ரூ.600 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை நானே வெளிப்படையாக அறிவித்துள்ளேன். நிலத்தின் அளவு, விற்பனைத் தொகை அல்லது வாங்கிய முறை ஆகியவற்றில் கூறப்படும் சிறிய தொழில்நுட்ப மாறுபாடுகள் எக்காரணத்தைக் கொண்டும் முறைகேடாகாது.

கொடைக்கானல் வில்பட்டி நிலம் தொடர்பாக 1997-ல் வாங்கிய அசல் கிரயப் பத்திரம் தன்னிடம் உள்ளது. எனவே அரசு புறம்போக்கு நிலத்தை சொந்தம் கொண்டாடியதாகக் கூறுவது தவறானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் வாக்களித்தது நேர்மையான மனிதருக்கு!

மக்கள் தங்களுக்கு ஒரு நல்ல அரசியல் மாற்றாகத் தன்னைத் தேர்ந்தெடுத்ததாக விஜய் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தொகுதி மக்கள் எனக்கு வாக்களித்தபோது, நான் தமிழ்நாடு முழுவதும் நன்கு அறியப்பட்ட ஒரு சினிமா நடிகர் என்பதும், சொந்தமாக சொத்துக்கள் வைத்திருப்பவர் என்பதும் அவர்களுக்குத் தெரியும். தேர்தல் பத்திரத்தில் ஒரு சொத்தின் மதிப்பு சிறிது கூடியதாலோ அல்லது குறைந்ததாலோ வாக்காளர்கள் தங்கள் முடிவை மாற்றியிருக்க மாட்டார்கள். 1,20,365 வாக்குகளைப் பெற்று, 53,715 வாக்குகள் என்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் மக்கள் என்னை வெற்றிபெறச் செய்துள்ளனர். இப்படிப்பட்ட ஒரு வெற்றியை வெறும் யூகங்களின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவால் ரத்து செய்ய முடியாது" என விஜய் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதிமன்ற விசாரணையில் நீதிபதியின் முக்கியப் பார்வை

இந்த வழக்கில் வாதங்களை கேட்ட நீதிபதி வி. லட்சுமிநாராயணன், பல யதார்த்தமான கேள்விகளை எழுப்பினார்.

நீதிபதி தனது உரையாடலில், "ஒருவர் நீதிபதியாகப் பதவியேற்கும் போது சொத்துக்களை அறிவிக்க வேண்டும். அப்போது நாங்களே அமர்ந்து ஒவ்வொரு சொத்தாகப் பட்டியலிடுவதில்லை; ஆடிட்டர்களையே (CA) நம்பியிருக்கிறோம். அதேபோல ஒரு பிரபலமான நடிகர் தாமாகவே அமர்ந்து அனைத்து சொத்து விவரங்களையும் எழுதினார் என நினைக்கிறீர்களா? அவரும் ஆடிட்டர்களைத்தான் நம்பியிருப்பார். ஆடிட்டர்கள் சில சொத்து விவரங்களை கவனக்குறைவாக விட்டிருந்தால், அதற்காக தேர்தலையே ரத்து செய்ய முடியுமா?" என்று வினவினார்.

மேலும், "ரூ.600 கோடி சொத்துக்களை வெளிப்படையாக அறிவித்த ஒருவர், ஒரு குறிப்பிட்ட சொத்தின் விவரத்தை முழுமையாகக் குறிப்பிடாமல் விட்டிருந்தால், அது எப்படி வாக்காளர்களைத் தவறாக வழிநடத்திய ஊழல் நடைமுறையாக மாறும்?" என்ற கேள்வியையும் நீதிபதி மனுதாரரிடம் கேட்டார்.

எளிமையான சட்டப் பார்வை

பொதுவாக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் ஒரு தேர்தலை செல்லாது என அறிவிக்க வேண்டுமென்றால், வாக்காளர்களின் முடிவில் சட்டவிரோதமாகத் தலையிட்டிருக்க வேண்டும் அல்லது கடுமையான ஊழல் முறைகேடுகள் நடந்திருக்க வேண்டும்.

ஆனால் இங்கு, சொத்துக்களை மறைக்காமல் காட்டியுள்ள நிலையில், மதிப்பீட்டில் இருக்கும் சிறிய வேறுபாடுகளை பூதக்கண்ணாடி கொண்டு பெரிதுபடுத்துவது தேர்தல் சட்டத்தின் நோக்கத்தையே சிதைத்துவிடும் என்பதே விஜய் தரப்பின் வாதமாகும். இரு தரப்பு சட்ட வாதங்களையும் தொடர்ந்து நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+