12 மணி நேரத்தைத் தாண்டியும் சரியாகாத மைக்ரோசாப்ட்! கைவிரித்ததா நிறுவனம்? என்னதான் காரணம்?
சென்னை: உலகம் முழுவதும் கோடிக்கணக்கான அலுவலக ஊழியர்களின் அன்றாடப் பணிகளுக்கு முதுகெலும்பாக இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சேவைகள், 10 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து முடங்கிக் கிடப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சனையைச் சரிசெய்ய மைக்ரோசாப்ட் பொறியாளர்கள் எடுத்த முதற்கட்ட நடவடிக்கைகள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்று அந்நிறுவனமே அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது.

ஒரே மணி நேரத்தில் 74 நாடுகளில் பரவிய பாதிப்பு
நேற்று இரவு தொடங்கிய இந்தத் தொழில்நுட்பக் கோளாறு, வெறும் ஒரே மணி நேரத்திற்குள் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சிங்கப்பூர் உட்பட உலகின் 74 நாடுகளுக்குப் பரவியதாக இணையச் சேவைகளைக் கண்காணிக்கும் 'டவுன்டிடெக்டர்' தளம் தெரிவித்துள்ளது.
இதனால் மைக்ரோசாப்ட் அவுட்லுக் மூலம் இமெயில் அனுப்பவோ, பெறவோ முடியாமல் பயனர்கள் தவித்து வருகின்றனர். மேலும், அலுவலகக் கூட்டங்களுக்கான டீம்ஸ் செயலியில் தேதிகள் குறிப்பது, செயற்கை நுண்ணறிவு உதவியாளரான கோபைலட் மற்றும் மைக்ரோசாப்ட் 365 ஆகிய முக்கியச் சேவைகளும் முற்றிலும் முடங்கியுள்ளன.
எதிர்பார்த்தபடி வேலை செய்யாத தீர்வு - மைக்ரோசாப்ட் விளக்கம்
பிரச்சனையைச் சரிசெய்ய மைக்ரோசாப்ட் நிறுவனம் தீவிரமாக முயன்று வந்த நிலையில், தற்போது எக்ஸ் தளத்தில் அதிர்ச்சியளிக்கும் புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அதில், "சேவைகளை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவர நாங்கள் செய்த மாற்றங்களைக் கண்காணித்தோம். ஆனால், அவை நாங்கள் எதிர்பார்த்தபடி வேலை செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம்" என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.
மேலும், சேவைகள் எப்போது முழுமையாகச் சீராகும் என்ற காலக்கெடுவையும் மைக்ரோசாப்ட் வெளியிடவில்லை. இதற்குப் பதிலாக, சர்வர்களின் திறனை அதிகரிக்க மாற்று வழிகளைத் தேடி வருவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
உலக அளவில் முடங்கிய அலுவலகப் பணிகள்
இந்தத் தொடர் முடக்கத்தால் பல நாடுகளில் அரசு அலுவலகங்கள், வங்கிகள், நீதிமன்றங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் அரசு சேவை மையங்கள் மற்றும் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் முடங்கின. அமெரிக்காவில் பல நிறுவனங்கள் வேறு வழியின்றி ஊழியர்களை முன்கூட்டியே வீட்டிற்கு அனுப்பின.
இதற்கிடையில், மைக்ரோசாப்ட் சேவைகளை நம்பியிருக்கும் ஓபன்ஏஐ போன்ற பிற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் சேவைகளிலும் சில இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.
சைபர் தாக்குதலா? உண்மை என்ன?
தொடர்ந்து 10 மணி நேரத்திற்கும் மேலாகப் பிரச்சனை நீடிப்பதால், இது ஏதேனும் பெரிய சைபர் தாக்குதலாக இருக்குமோ என்ற அச்சம் எழுந்தது. ஆனால், இது சைபர் தாக்குதல் அல்ல என்று மைக்ரோசாப்ட் உயரதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
பாதுகாப்பான இணைப்பை ஏற்படுத்தும் சர்வர்களில் ஏற்பட்ட அதிகப்படியான அழுத்தம் மற்றும் சமீபத்தில் செய்யப்பட்ட சில தொழில்நுட்ப மாற்றங்களே இந்தப் பெருங்குழப்பத்திற்குக் காரணம் என மைக்ரோசாப்ட் கண்டறிந்துள்ளது. தற்போதைக்குப் பாதிக்கப்பட்ட சர்வர்களை மீண்டும் இயங்க வைக்கும் பணிகளும், இணையப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதனால் சில இடங்களில் மட்டும் சேவைகள் மெதுவாகத் திரும்பத் தொடங்கியுள்ள போதிலும், உலகம் முழுவதும் எப்போது முழுமையாகச் சரியாகும் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.



Click it and Unblock the Notifications
