தமிழ்நாட்டில் குறைந்தபட்ச நில வழிகாட்டி மதிப்பு.. எந்த ஊரில் எவ்வளவு? சென்னையில் அடியோடு மாறியது
சென்னை: தமிழ்நாடு முழுவதும் நீண்ட காலமாக இருந்து வந்த குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பு மாறி உள்ளது. விவசாய நிலம் மற்றும் மனை நிலங்களுக்கு குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பு மறுநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பெரு நகரங்களான சென்னை, கோவை நகரங்களுக்கு சதுர அடிக்கு ரூ.1,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வழிகாட்டி மதிப்புகள் வெளிச்சந்தை மதிப்பை விட மிக மிக குறைவாக இருக்கும் காரணத்தால் வங்கிகளில், மனை நிலம் வாங்குபவர்களுக்கு தேவையான அளவு கடன் கிடைப்பது இல்லை. இது தொடர்பாக அடுத்தடுத்து பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில் வழிகாட்டி மதிப்பை உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக பதிவுத்துறை தலைவர் வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "தமிழ்நாட்டில் வழிகாட்டி மதிப்புகள், விவசாய நிலங்களுக்கு ஏக்கரிலும், மனை நிலங்களுக்கு சதுர அடியிலும் நிர்ணயம் செய்யப்படும். இவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்ட வழிகாட்டி மதிப்புகள் பெரும்பாலான இடங்களில் வெளிச்சந்தை மதிப்பை விட மிக மிக குறைவாக இருக்கின்றன. வங்கிகள், வழிகாட்டி மதிப்பையொட்டியே கடன் வழங்கும். இதனால், மனை நிலம் வாங்குபவர்கள் வங்கிகளில் தேவையான அளவிற்கு கடன் பெற முடியாத நிலையே உள்ளது.
இதை தவிர்ப்பதற்காகவும், வழிகாட்டியில் குறைந்தபட்ச மதிப்பை நிர்ணயம் செய்வதற்காகவும் 16.8.2023 அன்று மைய மதிப்பீட்டுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களின் விரிவான விவாதத்திற்கு பின் சொத்து அமைந்துள்ள பகுதிகளைப் பொறுத்து குறைந்தபட்ச மதிப்பு நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டது
சென்னை கோவை: அதன்படி, சென்னை மாநகராட்சி மற்றும் கோவை மாநகராட்சியில் குறைந்தபட்ச குடியிருப்பு மதிப்பு சதுர அடிக்கு ரூ.1,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆவடி, தாம்பரம், ஓசூர், காஞ்சிபுரம் மாநகராட்சி - சதுர அடிக்கு ரூ.800; ஈரோடு, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம், நாகர்கோவில் மாநகராட்சி - ரூ.700; திருநெல்வேலி, திண்டுக்கல், வேலூர். கரூர் மாநகராட்சி - ரூ.600; தூத்துக்குடி, தஞ்சாவூர். சிவகாசி, கும்பகோணம் மாநகராட்சி - ரூ.500; கடலூர் மாநகராட்சி - ரூ.400;
நகராட்சி பகுதிகள்: அனைத்து நகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள மனையிடங்களுக்கு குறைந்தபட்ச மதிப்பு - ரூ.300,
அனைத்து பேரூராட்சி பகுதியில் உள்ள தெருக்களுக்கு குறைந்தபட்ச மதிப்பு - ரூ.200
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, ஈரோடு, சேலம், மதுரை, கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கும், இம்மாவட்டங்களில் உள்ள பேரூராட்சி பகுதிகளில் உள்ள புல எண்களுக்கான குறைந்தபட்ச மதிப்பு - ரூ.100; குறைந்தபட்ச விவசாய மதிப்பு - ஏக்கருக்கு ரூ.5 லட்சம்.
இதர மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கும், அந்த மாவட்டங்களில் உள்ள பேரூராட்சி பகுதிகளில் உள்ள புல எண்களுக்கான குறைந்தபட்ச மதிப்பு - சதுர அடி ரூ.50; குறைந்தபட்ச விவசாய மதிப்பு - ஏக்கருக்கு ரூ.2 லட்சம்.
இந்த குறைந்தபட்ச நிர்ணயிக்கப்பட்ட மதிப்புகள், இணையதளத்தில் நேரடியாக மாற்றியமைக்கப்பட்டு உள்ளன. அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பிற்கு கீழ் வேறு மதிப்புகள் எதும் உள்ளனவா? என்பதை சரிபார்த்துக்கொள்ள சம்பந்தப்பட்ட துணைப்பதிவுத்துறை தலைவர்கள், நிர்வாக மற்றும் தணிக்கை மாவட்டப் பதிவாளர்கள் மற்றும் சார் பதிவாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" இவ்வாறு பதிவுத்துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications