சட்டமன்றத்தை அதிரவைத்த கம்யூனிஸ்ட் எம்எல்ஏ.. நா தழுதழுத்த ஆதவ் அர்ஜுனா
சென்னை: சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை நடைபெற்று வருகிறது. தவெக, திமுக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்று வருகிறது. இருவரும் பரஸ்பரம் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்கள். ஆக்கப்பூர்வமான விஷயங்களும் சட்டமன்றத்தில் பேசப்படுகிறது. காவல்துறை பிரச்சனை குறித்து கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மாரிமுத்து தெளிவாக புட்டு புட்டு வைத்தார். அவர் பேசி முடிந்ததும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் துணை சபாநாயகர், உங்கள் பேச்சுக்கு நாங்கள் அடிமை என்று அவரை புகழ்ந்து தள்ளினார்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த நிர்வாகியும், திருத்துறைப்பூண்டி எம்எல்ஏவுமான மாரிமுத்து, "தீயணைப்புத்துறையில் பெண்களும் பணியாற்றலாம் என்று முதலமைச்சர் அறிவித்திருப்பதை நாங்கள் பெருமையாக பார்க்கிறோம். பெண்களுக்கு முன்னுரிமை வழங்குவதில் இந்த அரசு முதல் வரிசையில் உள்ளது. காவல்நிலையங்களில் பெரிய அதிகாரியாக பணியாற்றும் பெண்களுக்கு கூட மிகப்பெரிய நெருக்கடி இருக்கிறது. ஆணாதிக்கம் சமூகம் இன்றைக்கும் நிலவி கொண்டிருக்கிறது.

பெண்களுக்கு சம ஊதியம்
உயரதிகாரியாக இருந்தாலும் ஆணாதிக்கத்தால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்பதை இந்த அரசின் கவனத்திற்கு கொண்டு சொல்கிறேன். பெண் காவலர்களாக இருந்தாலும், காவல் அதிகாரியாக இருந்தாலும், அவர்களின் குறையை, கோரிக்கையை நிறைவேற்ற தனி வாரியம் அமைக்க வேண்டும். அதன் மூலம் பெண் காவலர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். களத்தில் நின்று போராடும் காவலர்கள் இதை எதிர்பார்க்கிறார்கள்.
அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறார்கள். சம வேலைக்கு சம ஊதியம் என சட்டம் சொல்கிறது. ஆனால் காவல்துறையில் குறைந்தபட்ச சட்ட ஊதியத்தை நடைமுறைப்படுத்தவில்லை என்கிற கேள்வி எழுந்துள்ளது. அருகில் உள்ள கேரளா மாநிலத்தில் காவலர்களுக்கு ரூ.33,000 சம்பளம் வழங்குகிறார்கள். இதே தமிழகத்தில் ரூ.18,200 மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. தவெக ஆட்சிக்கு வந்தால் காவலர்களுக்கு ரூ.25,000 சம்பளம் வழங்குவோம் என்று தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.
ஆதவ் அர்ஜுனா பாராட்டு
சட்டப்படி வழங்காவிடினும், வாக்குறுதிபடியாவது சமூகத்தில் போராடி கட்டி காப்பாற்றும் காவலர்களுக்கான ஊதியத்தை உறுதிப்படுத்த வேண்டும். அவர்களுக்கு தீபாவளியும் இல்லை, பொங்கலும் இல்லை. பற்றாக்குறை நேரத்தால் காவலர்களுக்கு நெருக்கடி உள்ளது. அவர்களுக்கு பண்டிகை காலத்தில் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். காவல்துறைக்கு என்று தனி மருத்துவமனை உருவாக்க வேண்டும் என்று கூறினார்.
இதற்கு பதிலளித்து ஆதவ் அர்ஜுனா பேசுகையில், அண்ணன் மாரிமுத்துவுக்கு நன்றி. உங்கள் களப்பணியும், சமூகத்தில் அடிமட்டத்தில் உள்ள பிரச்சனையை தெரிவிப்பதில் நாங்கள் உங்களிடம் கற்று கொள்கிறோம். எங்களுக்கு பல பிரச்சனைகளை தெரிவிக்கிறீர்கள். இதை எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்ததற்கு நன்றி. உங்கள் பேச்சுக்கு நாங்க அடிமை என்றார். துணை சபாநாயகர் ரவிசங்கர், உங்கள் பேச்சுக்கு நானும் அடிமை. கையில் ஒரு துண்டு சீட்டு கூட இல்லாமல் நிறுத்தி நிதானமாக பேசுகிறீர்கள். உங்களிடம் கற்று கொள்கிறோம்" என்றார்.


Click it and Unblock the Notifications
