8 மணியில் இருந்து காத்திருக்கேன்.. ஆசிரியர்கள் யாரும் வரல.. பேச்சுவார்த்தைக்கு அன்பில் மகேஷ் அழைப்பு
சென்னை: ஆசிரியர்கள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இன்று காலை 8 மணி முதல் காத்திருக்கிறேன். பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயாராக இருக்கிறேன் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிடல், எமிஸ் பதிவேற்றம் பணிகளில் இருந்து விடுவித்தல் என்பன உட்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோ ஜாக்) சார்பில் சென்னையில் நாளை (அக்.13) போராட்டம் நடத்தப்பட உள்ளது.

இதையடுத்து டிட்டோஜாக் குழுவில் உள்ள ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன், பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் க.அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் ஆகியோர் சென்னை டிபிஐ வளாகத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 2 மணி நேரம் வரை நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் திட்டமிட்டபடி போராட்டத்தை நடத்தவுள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
சமீபத்தில்தான் ஆசிரியர் சங்கங்கள் டிபிஐ வளாகத்தில் தொடர் போராட்டம் நடத்தினர். அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டும் போராட்டம் தொடர்ந்ததால் ஆசிரியர்கள் குண்டுக்கட்டாக தூக்கிச் செல்லப்பட்டு கைது செய்யப்ப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக தற்போது ஆசிரியர் இயக்கங்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட உள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட உள்ள ஆசிரியர் சங்கங்களுடன் இன்று காலை 8 மணியளவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்திருந்தார். தனது முகாம் அலுவலகத்தில் இன்று காலை முதல் காத்திருந்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. ஆனால், ஆசிரியர் சங்கத்தினர் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "நான் காலை 8 மணி முதல், ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த காத்திருக்கிறேன். ஒவ்வொருவரையும் போன் செய்து அழைத்தோம். இதுவரை எப்போதாவது, அமைச்சர் கையெழுத்து போட்டு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து காத்திருந்ததைப் பார்த்திருக்கிறீர்களா?
ஆசிரியர்கள் சங்கத்தினர் இன்று காலை 8.30 மணிக்கு வருவதாகச் சொல்லி இருந்தார்கள். ஆசிரியர் சங்க பிரதிநிதிகளிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. அனைவரும் சேர்ந்து ஒருமித்த கருத்துடன் என்னை சந்திக்க வாருங்கள் என்று சொல்லி இருந்தேன். 9 மணி வரை யாரும் வரவில்லை. காத்திருந்துவிட்டு இப்போது தான் பள்ளி நிகழ்ச்சிக்காக வந்திருக்கிறேன்.
மாணவர்கள் காத்திருக்கிறார்கள் என்பதற்காக வந்திருக்கிறேன். இதை முடித்துவிட்டு மீண்டும் 10.30 மணி முதல் பேச்சுவார்த்தைக்காக காத்திருக்கிறேன். இன்று நாள் முழுவதும் காத்துக் கொண்டிருப்பேன். பேச்சுவார்த்தை நடத்த எனது அலுவலக கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்." எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுக ஆட்சியில் அரசு பள்ளி மாணவர்கள் நீட், ஜே.இ.இ, ஆகிய போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள வழங்கப்பட்ட பயிற்சிகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என சிஏஜி அறிக்கை குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். ரூ.4.27 கோடி செலவீனத்தை தவிர்த்து இருக்கலாம் எனவும் 385 பயிற்சி மையங்களுக்கு தலா ரூ.55 ஆயிரம் செலவில் வழங்கப்பட்ட டிஷ் ஆண்டனாக்கள் 103 நாட்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றம் சாட்டினார்.
ரூ.3.18 கோடி மதிப்பீட்டில் மாணவர்களுக்காக வாங்கப்பட்ட வழிகாட்டி புத்தகங்கள் பயன்படுத்தப்படாத நிலையில், ரூ.2.15 கோடி செலவில் வழிகாட்டு புத்தகங்கள் மறுகொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications