கீர்த்தனா வீசிய விருதுநகர் "லஞ்ச" வெடி.. உடனே கொதித்த தங்கம் தென்னரசு.. இப்ப ராஜேந்திர பாலாஜி
சென்னை: அமைச்சர் கீர்த்தனா 2 நாட்களுக்கு முன்பு, திமுக, அதிமுக மீது வீசிய ஊழல் குற்றச்சாட்டு அதிர்வலைகள் இன்னமும் நீங்கவில்லை.. இரு திராவிட கட்சிகளுமே கொந்தளித்து உள்ளன.. திமுக மீது லஞ்ச புகாரை கீர்த்தனா கூறியிருந்த நிலையில், தங்கம் தென்னரசு உட்பட பல திமுக சீனியர்கள் ஆவேசமடைந்து பதிலடி தந்தார்கள்.. இப்போது அதிமுகவில் ராஜேந்திர பாலாஜியும் கீர்த்தனாவுக்கு காரசார பதில் தந்துள்ளார்.
தமிழ்நாட்டில் தவெக அரசு அமைந்தது முதல் லஞ்சம், ஊழலுக்கு இடமில்லாத வெளிப்படையான ஆட்சியை வழங்குவோம் என்று தொடர்ந்து கூறி வருகிறது. அரசு துறைகளில் லஞ்சம் வாங்குவதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர்களும் விடாமல் தெரிவித்து வருகிறார்கள்..

அமைச்சர் கீர்த்தனா குற்றச்சாட்டு
இந்த சூழலில், சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனா தெரிவித்த ஒரு லஞ்சப் புகார் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பட்டாசு ஆலைகளுக்கு லைசென்ஸ் வழங்குவதில் கடந்த காலங்களில் லஞ்சம் பெறப்பட்டதாக 2 நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார்..
கீர்த்தனா பேசும்போது "சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 177 பட்டாசு ஆலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.. பட்டாசு ஆலைகளுக்கு லைசென்ஸ் வழங்குவதில் கடந்த காலங்களில் முறைகேடுகளும் நடந்துள்ளன. ஒரு லைசென்ஸ் பெறுவதற்கே ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை லஞ்சமாக வாங்கப்பட்டிருக்கிறது.. இதுதொடர்பான ஆதாரங்கள் சம்பந்தப்பட்ட அசோசியேஷனில் இருந்து எனக்கு இமெயில் செய்துள்ளார்கள், தேவைப்பட்டால் அந்த ஆதாரங்களை சமர்ப்பிக்க தயாராக இருக்கிறேன்" என்றார்
தங்கம் தென்னரசு
உடனே இதைக்கேட்டு திமுக ஆவேசமாகி, அவையிலேயே இதற்கு ரியாக்ட் செய்தது. இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, "முந்தைய காலகட்டத்தில் நிறுத்தப்பட்டிருந்த பட்டாசு ஆலைகளுக்கான உரிமங்களை தற்போதைய அரசு புதுப்பித்து வருகிறது, ஆனால் லைசென்ஸ், அனுமதிகளுக்கு லஞ்சம் வாங்கப்படுவதாக, சில அசோசியேஷன்களை சேர்ந்தவர்கள் எங்களிடமும் புகார்கள் சொல்கிறார்கள், அந்த குற்றச்சாட்டுகளையும் நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா" என்று கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், அமைச்சர் கீர்த்தனா கூறிய லஞ்சப் புகார் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று விழுப்புரத்தைச் சேர்ந்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ராஜன், லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் மனு அளித்துள்ளார். லைசென்ஸ் வழங்க நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதலாக பணம் வசூலிக்கப்பட்டிருந்தால், அது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ராஜேந்திர பாலாஜி பதிலடி
திமுக, தவெக இப்படி பரபரத்து கிடக்க, அதிமுகவும் பொங்கி கிளம்பிவிட்டது.. கீர்த்தனா பேசியதற்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் ஆவேசமாக பதிலளித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசும்போது, "ஒவ்வொரு ஆட்சியிலும் நல்ல அதிகாரிகள் இருப்பார்கள், ஒரு சில அதிகாரிகளின் செயல்பாடுகளை வைத்து ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் குறை சொல்லக்கூடாது.. நான் சொல்லும் இந்த கருத்து தற்போதைய த.வெ.க ஆட்சிக்கும் பொருந்தும்" என்று பதிலடி தந்துள்ளார்.
கீர்த்தனா தந்த வாட்ஸ்அப் நம்பர்
இன்றைய தினம் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ் பக்கத்தில், "லஞ்சம் வாங்கினாலும் சரி, தவறு செய்தாலும் சரி யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி. இது தொடக்கம் மட்டுமே. மாற்றம் வரும் வரை நடவடிக்கை தொடரும். லஞ்சம் குறித்துத் தெரிந்தால் WhatsApp Number (+91 70103 27687) எண்ணில் புகார் தெரிவியுங்கள். தவறு செய்தவர் யாராக இருந்தாலும் தப்ப முடியாது." என்று பதிவிட்டிருக்கிறார்..
பட்டாசு ஆலை லைசென்ஸ் விவகாரத்தில் கீர்த்தனா கூறிய லஞ்சப் புகார் மட்டுமின்றி, அதற்கு ராஜேந்திர பாலாஜி அளித்துள்ள பதிலும், இன்றைய தினம் கீர்த்தனா பதிவிட்டுள்ள பதிவும், அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய கவனம் பெற்றுள்ளது....!!!


Click it and Unblock the Notifications
