சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் தீ! ஸ்பாட்டுக்கே போன கே.என்.நேரு.. 2 நாட்களில் சரியாகும் என உறுதி
சென்னை: சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் இன்னும் 2 நாட்களில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்படும் என அமைச்சர் நேரு ஆய்வுக்கு பின் உறுதியளித்துள்ளார்.
கடுமையான வெயில் காரணமாக குப்பைகளில் மீத்தேன் வாயு உருவானதால் தீ அதிகமாக பரவி இருப்பதாக அவர் விளக்கம் அளித்தார்.
இது தொடர்பான மேலும் விவரம் வருமாறு;

குப்பைக்கிடங்கு
சென்னை பெருங்குடியில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் நேற்று ஏற்பட்ட தீயை அணைக்க 2வது நாளாக சென்னை மாநகராட்சி, தீயணைப்பு துறை, போலீஸ், மெட்ரோ குடிநீர் வாரியம் இணைந்து செயல்படுகிறது. 150க்கும் மேற்பட்ட லாரிகளில் தண்ணீர் ஊற்றி கட்டுப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை தமிழக நகர்ப்புற நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார். ஸ்கை லிப்ட் தீயணைக்கும் இயந்திரம் மூலம் அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, தீயணைப்புத்துறை டிஜிபி வி.கே.ரவி ஆகியோர் 100 அடி உயரம் மேலே சென்று குப்பை பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர்.

அமைச்சர் கே.என்.நேரு
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, கடுமையான வெயில் காரணமாக குப்பைகளில் மீத்தேன் வாயு உருவானதால் தீ அதிகமாக பரவி உள்ளது. தீயணைப்பு துறை, மாநகராட்சி, சென்னை குடிநீர் வாரியம் என 3 துறைகளிலும் 300 பேர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.150 தண்ணீர் லாரிகள்,12 தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 2 நாட்களில் இப்பகுதியில் ஏற்பட்டுள்ள தீ முழுவதுமாக கட்டுப்படுத்தப்படும்.

தீயணைப்பு வாகனங்கள்
கோடை காலம் முடியும் வரை இப்பகுதியில் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் உள்ள குப்பை கிடங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. புகையால் இப்பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவ சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளோம். அருகில் உள்ள பகுதிகளில் 3 மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு உள்ளது. தீ அதிகமாக பரவாமல் இருக்க தீ ஏற்பட்ட குப்பை கிடங்கு பகுதி மற்ற பகுதிகளில் இருந்து பொக்லைன் இயந்திரம் மூலம் தனியாக துண்டிக்கப்பட்டுள்ளது.

225 ஏக்கர் குப்பை கிடங்கு
தீ பெரிய அளவில் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. 225 ஏக்கர் குப்பை கிடங்கில் 15 ஏக்கர் பகுதி குப்பை கிடங்குகள் தீயால் பாதிக்கப்பட்டுள்ளது. பெருங்குடி குப்பை கிடங்கை அகற்ற உயிரி அகன்றெடுத்தல் முறையில் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள குப்பை கிடங்குகளில் தீயணைப்பு நிலையங்கள் அமைக்க முதலமைச்சரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications