பிரதமர் விழாவில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்ரமணியன்... தமிழகத்துக்கு மத்திய அரசு கொடுத்த கிஃப்ட்..!
சென்னை: சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் ஜெனரேட்டரை ரிஷிகேஷிலிருந்து காணொலி மூலம் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
Recommended Video
இந்த விழாவில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நாடு முழுவதும் 1,222 ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் பிரதம மந்திரி திட்ட நிதியின் கீழ் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் விழாவில் பங்கேற்றதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன்,

மருத்துவக் கட்டமைப்பு
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மருத்துவக் கட்டமைப்பு சிறப்பாக உள்ளதாகவும் தமிழகத்தில் 222 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் இருப்பதாகவும் கூறினார். மேலும், புதிதாக 70 ஆக்சிஜன் உற்பத்தி ஆலை அமைக்கும் பணிகள் நடந்து வருவதாக கூறிய அமைச்சர் மா.சு., தனியார் மருத்துவமனைகளை விஞ்சும் அளவுக்கு அரசு மருத்துவமனைகள் தரம் உயர்ந்து செயல்படுவதாக பெருமிதம் தெரிவித்தார்.

அரசு மருத்துவமனை
குறிப்பாக சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மற்ற மாநிலங்களில் இருந்தெல்லாம் குழந்தை நோயாளிகள் வருவதாகவும், சென்னையில் உள்ள புகழ்பெற்ற தனியார் மருத்துவமனைகள் சிலவே எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையை பரிந்துரை செய்யும் அளவுக்கு அங்கு மருத்துவர்களும், செவிலியர்களும் சிறப்பாக செயல்புரிவதாக பாராட்டினார்.

எக்ஸ்ரே
மேலும், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே விவரத்தை காகிதத்தில் எழுதிக்கொடுத்ததாக ஒரிரு தொலைக்காட்சி சேனல்கள் மட்டும் செய்தி ஒளிபரப்பியதோடு, அரசின் நிதிச்சுமையால் இது போன்று நடப்பதாக கூறியிருந்ததாகவும், ஆனால் இது முற்றிலும் தவறானது எனவும் அமைச்சர் மா.சு. விளக்கம் தெரிவித்தார். தற்போது டிஜிட்டல் யுகம் என்பதால் எக்ஸ்ரே விவரங்கள் வாட்ஸ் அப் மூலமே உரிய மருத்துவருக்கு சென்றடையும் படி காலம் மாறியுள்ளதாகவும், நோயாளிக்கு என்ன பிரச்சனை என்பதை மட்டும் பேப்பரில் எழுதிக்கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

அட்மிஷன்
இதனிடையே தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் 11 மருத்துவக் கல்லூரிகளில், தலா 150 மாணவர்களை சேர்க்க அனுமதி தர வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்த கோரிக்கையை ஏற்று முதற்கட்டமாக 850 இடங்களுக்கு மத்திய அரசின் அனுமதி கிடைத்து விட்டதாகவும், எஞ்சியுள்ள 800 இடங்களுக்கும் விரைவில் மத்திய அரசு அட்மிஷன் அனுமதி வழங்கும் என நம்பிக்கை உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications