சொத்து குவிப்பு வழக்கு: நீதிமன்றத்திற்கு வந்தார் பொன்முடி! காரிலிருந்து தேசியக் கொடி நீக்கம்!
சென்னை: வருமானத்திற்கு அதிகமான சொத்து குவித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் அமைச்சர் பொன்முடிக்கான தண்டனை விவரங்கள் வெளியாகவுள்ளது. இதற்காக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தேசியக் கொடி அகற்றப்பட்ட காரில் சென்று நீதிமன்றத்தை அடைந்தனர்.
தமிழகத்தில் உயர் கல்வித் துறை அமைச்சராக இருப்பவர் க.பொன்முடி. கடந்த 2006- 2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் உயர்கல்வி, கனிமவளத் துறை துறை அமைச்சராக இருந்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ 1.73 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக அதிமுக ஆட்சி காலத்தில் வழக்கு தொடரப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கடந்த 2011 ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இதையடுத்து விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு கடந்த 2015 ஆம் ஆண்டு இந்த வழக்கு மாற்றப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரமூர்த்தி இந்த வழக்கில் பொன்முடி, மனைவி விசாலாட்சி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என கூறி இருவரையும் விடுதலை செய்தார். இந்த தீர்ப்பு கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி வழங்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் கடந்த 2017ஆம் ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. இந்த நிலையில் இது நீதிபதி ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. கடந்த நவம்பர் 27ஆம் தேதி இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயசந்திரன் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தார். இந்த நிலையில் நேற்று அவர் தீர்ப்பளித்தார். விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை மேலோட்டமாக விசாரித்துவிட்டது.
வருமானத்திற்கு அதிகமாக 1.72 தோடி அளவுக்கு அதாவது 64.90% அளவுக்கு பொன்முடியும் விசாலாட்சியும் சொத்துக்களை குவித்துள்ளதாக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் சரியாக நிரூபணமாகியுள்ளன. ஆனால் அவர்களது வருமானத்தை தனித்தனியாக பிரித்து பார்த்து வருமான வரி கணக்கு அடிப்படையில் இருவரையும் சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
இது அடிப்படையிலேயே தவறு. இந்த தீர்ப்பை நான் ரத்து செய்கிறேன். அமைச்சர் பொன்முடிக்கு கணக்கில் காட்டாத வகையில் வந்த வருமான மூலம் அவரது மனைவி பெயரில் பல்வேறு இடங்களில் சொத்துகளை வாங்கியுள்ளார். இந்த மூலதன வருமானத்தை சிறப்பு நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை. எனவே இந்த வழக்கில் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கிறேன்.

இந்த வழக்கிற்கான தண்டனை விவரங்களை வியாழக்கிழமை (டிச.21) அறிவிக்கும் போது அமைச்சர் பொன்முடி, விசாலாட்சி ஆகியோர் நேரிலோ அல்லது வீடியோ கான்பிரன்ஸ் மூலமாகவோ ஆஜராக வேண்டும் என நீதிபதி நேற்று உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் சென்னை நீதிமன்றத்திற்கு தனது சைதாப்பேட்டை வீட்டிலிருந்து பொன்முடி புறப்பட்டார்.
அவரும் அவருடைய மனைவி விசாலாட்சியும் தேசிய கொடி அகற்றப்பட்ட காரில் புறப்பட்டனர். அவர்கள் அங்கு நீதிமன்ற அறை எண் 46 இல் காத்திருக்கிறார்கள். இன்று காலை 10.30 மணிக்கு பொன்முடிக்கான தண்டனை விவரங்கள் வழக்கு 2ஆவது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தை சுற்றி போலீஸார் அதிகம் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications