தமிழ்நாட்டை ஏன் பின்னோக்கி இழுக்க பார்க்குறீங்க? மோடியின் பேச்சுக்கு.. பிடிஆர் டேட்டாவோடு பதிலடி
சென்னை: தமிழ்நாட்டின் வளர்ச்சியை இந்தியாவின் வளர்ச்சிக்கு இணையாக கொண்டு செல்வதே என் நோக்கம் என்று பிரதமர் மோடி பேசியதற்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் இரண்டாவது ஏவுதள அடிக்கல் நாட்டு விழா உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்திருந்தார். நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்த விமர்சனங்களை வைத்தார்.

அதில், 21 ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் வெற்றிகரமான வளர்ச்சி உலக நாடுகளை ஆச்சரியப்படுத்துகிறது மற்றும் ஊக்கப்படுத்துகிறது. திமுக அரசு தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிராக செய்தி வெளியிடுமாறு ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறது. பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டின் வளர்ச்சியை UPA முடக்கியது
இந்தியாவின் விண்வெளி வெற்றி இளைஞர்களின் அறிவியல் மனப்பான்மைக்கு ஒரு சான்றாகும். ககன்யான் திட்டத்தில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான விண்வெளி உபகரணங்கள் 'மேட் இன் இந்தியா' தயாரிப்புகள் ஆகும். இந்தியாவின் வளர்ச்சி வேகத்திற்கு இணையாக தமிழ்நாடும் வளர வேண்டும். தமிழ்நாட்டின் வளர்ச்சியை இந்தியாவின் வளர்ச்சிக்கு இணையாக கொண்டு செல்வதே என் நோக்கம் என்று பிரதமர் மோடி பேசி இருந்தார்.
பிடிஆர் பதிலடி: இந்த நிலையில்தான் தமிழ்நாட்டின் வளர்ச்சியை இந்தியாவின் வளர்ச்சிக்கு இணையாக கொண்டு செல்வதே என் நோக்கம் என்று பிரதமர் மோடி பேசியதற்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
உண்மையான GDP வளர்ச்சியுடன் (RBI இன் புள்ளிவிவரங்கள்) ஒப்பிடுகையில் இந்தியாவின் தனிநபர் CAGR 4.43% ஆனால் தமிழ்நாடு 5.54% என்ற NSDP வளர்ச்சியை பெற்றுள்ளது. 2024 நிதியாண்டிற்கு இன்னும் ஒரு மாதம் மீதமுள்ளதால், மார்ச் 31, 2023 இல் முடிவடையும் 10 ஆண்டு காலத்திற்கான கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் (CAGR) ஆகும் இது. இதில் தமிழ்நாடு தேசிய அளவிலான வளர்ச்சியை விட சிறப்பாகவே உள்ளது.
இந்திய சராசரி தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (2011-2012 ரூபாய் அடிப்படை) குறைந்தபட்சம் 1.3 மடங்கு முதல் 1.44 மடங்கு வரை நாம் இந்திய தேசிய அளவை அதிகம் முன்னேறி உள்ளோம் . (மாநிலத் தரவு NET ஆகவும், தேசியமானது GROSS ஆகவும் இருப்பதைக் கவனிக்கவும்). ஆனால் ஏன் ஒருவர் தமிழ்நாட்டின் வளர்ச்சியை பின்னுக்கு கொண்டு செல்ல பார்க்கிறார்.
ஆனால் இங்கே பிரதமர் தமிழ்நாட்டின் வளர்ச்சியை இந்திய வளர்ச்சிக்கு இணையாக கொண்டு செல்வேன் என்கிறார் . ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தின் வளர்ச்சியை 1%க்கு மேல் குறைத்து, இந்திய சராசரிக்குக் கீழே வர யாராவது விரும்புவார்களா?
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு வேகமாக வளர்ந்து வருகிறது. மத்திய அரசு முதலில் மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றட்டும். மத்திய அரசு நியமித்த ஆளுனர் அரசின் மசோதாக்களில் கையெழுத்து போடட்டும். அதன்பின் தமிழ்நாடு வளர்ச்சி பற்றி பேசுங்கள்;.
பல தசாப்தங்களாக ஆட்சியில் இருந்த திராவிடக் கருத்தியலின் தெளிவான திட்டமிடல் காரணமாக தமிழ்நாட்டிற்கு மேம்பட்ட கல்வி மற்றும் பரவலான பகுத்தறிவு சிந்தனை ஏற்பட்டு உள்ளது. பெரும்பான்மையான தமிழ் மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் யதார்த்தத்தை உணர்ந்து முற்போக்குடன் செயல்பட தொடங்கி உள்ளனர் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications