மக்களவை தேர்தல் தேதி இன்று அறிவிப்பு! பொன்முடி அமைச்சராக பதவியேற்பதில் சிக்கல்? ரகுபதி விளக்கம்
சென்னை: மக்களவைத் தேர்தல் தேதி இன்று அறிவித்தால் பொன்முடி அமைச்சராக பதவியேற்பதில் ஏதேனும் சிக்கல் ஏற்படுமா என்ற கேள்விக்கு சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் சட்டத் துறை அமைச்சர் ரகுபதி உரிய விளக்கத்தை அளித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர்கள் ரகுபதி, சேகர்பாபு ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ரகுபதி பேசுகையில் டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று தமிழகம் வந்துவிட்டார். எனவே பொன்முடி அமைச்சராக பதவியேற்க பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஒரு தேதியை சொல்வார்.

அந்த தேதியில் பொன்முடி அமைச்சராக பதவியேற்பார். அவர் பதவியேற்க எந்த தடையும் இல்லை. பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் எந்த விளக்கத்தை கேட்டாலும் எந்த நேரத்தில் கேட்டாலும் அதற்கு சட்டத் துறை தயாராக இருக்கிறது.
மேலும் தேர்தல் தேதி இன்று அறிவித்தாலும் பொன்முடி பதவியேற்பதில் எந்த பிரச்சினையும் இருக்காது. இது தொடர்பாக நாங்கள் ஏற்கெனவே தேர்தல் ஆணையத்திடம் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் நகலை வைத்து அனுப்பியுள்ளோம்.
துணை வேந்தர்களுக்கு திடீரென பதவி நீட்டிப்புகளை ஆளுநர் கொடுத்து வருகிறார். சட்டப்படி 3 ஆண்டுகளுக்கு ஒருவர் துணைவேந்தராக பதவியேற்க வேண்டும். அந்த விதிகளை புறந்தள்ளிவிட்டு ஆளுநருக்கு வேண்டியவர்களுக்கு 4 ஆண்டுகள் என்றெல்லாம் பதவி நீட்டிப்பை தந்து கொண்டிருக்கிறார்.
தனி ராஜ்ஜியம் நடத்துவது போன்ற ஒரு தோற்றத்தை அவர் உருவாக்கிக் கொண்டிருக்கிறார். தேர்தலுக்கு பிறகு அந்த தனி ராஜ்ஜியத்திற்கு ஒரு முடிவு கொண்டு வரப்படும். மசோதாக்களை தற்போது ஆளுநர் நிலுவையில் வைப்பதில்லை. உடனுக்குடன் அனுப்பி விடுகிறார். அதாவது நாங்கள் மசோதாவுக்கு ஒப்புதல் கேட்டு அவருக்கு அனுப்புவோம். அவர் அதற்கு விளக்கம் கேட்டு அனுப்புவார். இப்படியே போக்குவரத்து துறை போல் இந்த மசோதாக்கள் அனுப்புவது மாறியுள்ளது என சிரித்தபடியே ரகுபதி தெரிவித்துள்ளார்.
மேலும் ரகுபதி கூறுகையில் ஒரு தேர்தல் ஆணையர் தேர்தலுக்கு முன்பே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. அடுத்தது திடீரென இருவர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். உச்சநீதிமன்றத்தின் நீதிபதியும் தேர்தல் ஆணையர் நியமனத்தில் இருக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையாக இருக்கிறது. இந்த நிலையில் அந்த கோரிக்கையை உதாசினப்படுத்திவிட்டு மத்திய அரசு தேர்தல் ஆணையர்களை நியமித்திருப்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.
தேர்தல் ஆணையத்தை மத்திய அரசு ஒரு கைப்பாவையாக பயன்படுத்துகிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஜனநாயகத்தில் அதை நாங்கள் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் இறுதி வெற்றி இந்தியா கூட்டணிக்குத்தான் கிடைக்கும். அப்போது யாரெல்லாம் மனிதாபிமானம் பார்க்காமல் பழிவாங்கினார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் தெரிவித்தார்.
பொன்முடி வழக்கின் பின்னணி: தமிழக உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, அவருடைய மனைவி விசாலாட்சி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குத் தொடர்ந்தது. அதாவது 1.72 கோடிக்கு சொத்து சேர்த்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இதில் பொன்முடிக்கும் அவருடைய மனைவி விசாலாட்சிக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூ 50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே இந்த வழக்கில் குற்றவாளி என தீர்ப்பானதால் அவருடைய எம்எல்ஏ பதவியையும் அமைச்சர் பதவியையும் இழந்தார். இதையடுத்து திருக்கோவிலூர் எம்எல்ஏ பதவி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொன்முடி தரப்பு வழக்கு தாக்கல் செய்தது. இந்த நிலையில் பொன்முடியின் தண்டனையையும் தீர்ப்பையும் உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து தீர்ப்பளித்தது. இதனால் முன்னாள் அமைச்சர் பொன்முடி மீண்டும் அமைச்சராகவும் எம்எல்ஏவாகவும் தொடர வழிவகுத்தது. இதையடுத்து பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்குமாறு கடந்த 3 நாட்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர். என்.ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் தீர்ப்பு நகலுடன் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications