என் குடும்பத்துல ரூ.2 கோடி இருந்தால்! சென்னைல வீடு வாங்காம பழனில ஏன் நிலம் வாங்குறோம்? ரமேஷ் கேள்வி
சென்னை: "என் குடும்பத்தில் இருக்கும் யாரிடமும் ரூ. 2 கோடி பணமே கிடையாது. அப்படியிருக்கும் எப்படி பழனியில் சொத்து வாங்க முடியும்" என அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: பழனி நில முறைகேடு விவகாரத்தில் மிகவும் தீவிரமாக விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. முதல்வர் விஜய், இந்த வழக்க சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி, குற்றவாளி யாராக இருந்தாலும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

முதலில் அந்த நிலத்தை விற்றவர்கள், வாங்கியவர்களை கைது செய்திருக்கிறார்கள். அடுத்தடுத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட பதிவாளரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த விசாரணையில் யாரெல்லாம் சிக்குகிறார்கள், நமது அரசாங்கம் பாரபட்சம் பார்க்காமல் இந்த அரசு நடவடிக்கை எடுக்கும்.
இந்த முறைகேட்டில் என் மீது வைத்தது குற்றச்சாட்டு இல்லை. என் மீது பொய்யை பரப்பினார்கள். எனது உறவினர்தான் அந்த நிலத்தை முறைகேடாக வாங்கியதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
என் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் ரூ 100 கோடி இடத்தை ரூ 2 கோடிக்கு வாங்கியுள்ளதாக கிளப்பிவிடுகிறார்கள். முதலில் என் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரிடமும் 2 கோடி ரூபாய் பணமே கிடையாது.
அப்படியே 2 கோடி ரூபாய் பணமிருந்தால் வாடகை வீட்டில் வசித்து வரும் நாங்கள் சென்னையில் வீடு வாங்காமல் ஏன் பழனியில் நிலம் வாங்க போறோம்? எனது நற்பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இது போல் செய்கிறார்கள். ஏதோ சீப்பை திருடி வைத்தால் கல்யாணம் நின்று விடும் என்பதை போல் இது போல் பொய்யான தகவல்களை கூறி வருகிறார்கள் என ரமேஷ் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ரூ 100 கோடி மதிப்புள்ள 1.4 ஏக்கர் கோயில் நிலத்தை ரூ 2 கோடிக்கு முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாக தகவல்கள் வெளியானது.
பழனி சார் பதிவாளர் அலுவலகத்தில் மோசடியாக கடந்த 6 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. அந்த இடத்தை வெள்ளத்துரை, சேதுபதி ஆகியோர் வாங்கி ரூ 2 கோடிக்கு கிரயம் செய்ததாக போலீஸில் புகார் எழுந்தது.
அந்த நிலம் பழனி கோயிலின் சொத்து என்பதை மறைத்து தனி நபர்களுக்கு கிரயம் செய்து மோசடி நடந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து இந்த மோசடிக்கு உறுதுணையாக இருந்த பழனி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், வெள்ளத்துரை, சேதுபதி ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சார்பதிவாளர் ஜஸ்டின், மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேடு தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு கடந்த 14 நாட்களாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த நில மோசடியின் பின்புலத்தில் அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷின் குடும்பத்தினர் இருப்பதாக குற்றச்சாட்டப்பட்டது. இதை ரமேஷ் மறுத்தார். மேலும் தன் மீது அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
இதனிடையே பத்திரப்பதிவு நகல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கடந்த 1980 ஆம் ஆண்டில் நில உரிமையாளர் குப்புசாமி குடும்பத்தினர் சிபிசிஐடி அலுவலகத்தில் மூலப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை தாக்கல் செய்தனர்.
பழனி ரூ.100 கோடி மட நில மோசடி வழக்கு தொடர்பாக 3 பேரை சிபிசிஐடி போலீஸ் கைது செய்தது. திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலுகா, பப்பன்குளம் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து என்பவரின் மகன் வெள்ளைத்துரை (60), திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா, கவுண்டன்குளம், ஏ.சி.சி. சாலை பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவரின் மகன் அன்வர்தீன் (65), விழுப்புரம் மாவட்டம், சாலாமேடு, காமராஜர் நகர் 2-வது குறுக்கு தெருவைச் சேர்ந்த தண்டபாணி அய்யா என்பவரின் மகன் முருகதாஸ் (56) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.


Click it and Unblock the Notifications
