கோயில் திருடர்கள் திமுக.. எந்த விதியில் கோயில் நிலத்தில் கட்சி அலுவலகம் அமைத்தீர்கள்.. ரமேஷ் பதிலடி
சென்னை: தவெக ஆட்சி 6 மாதங்களை கடந்துவிட்டது. திமுக, அதிமுகவுக்கு மாற்று என சொல்லி ஆட்சிக்கு வந்த தவெக ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. சட்டம் ஒழுங்கு பாதிப்பு, தவெக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் மீதான புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயில் சூரசம்ஹாரம் நிகழ்வில், முதல்வர், அமைச்சருக்கு அரோகரா என கோஷமிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தவெக, அமைச்சர் ரமேஷ் விதிமீறலில் ஈடுபட்டதாக திமுக சேகர்பாபு பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார். இந்நிலையில் திமுகவினர் கோயில் திருடர்கள். எந்த விதி அடிப்படையில் கோயில் நிலத்தை அபகரித்து கட்சி அலுவலகம் நடத்தினார்கள் என ரமேஷ் பதிலடி கொடுத்துளளார்.
திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, திருச்செந்தூரில் ஆகம விதிகள் மீறப்பட்டுள்ளன. மனிதனை இறைவனுக்கு நிகராக கொண்டாடியுள்ளனர். இறைவனுக்கு அரோகரா என்று சொல்வதற்கு பதிலாக, முதல்வருக்கு அரோகரா அறநிலையத்துறை அமைச்சருக்கு அரோகரா என்று ஒருவர் சொல்கிறார். துறையின் அமைச்சர் வேல் மற்றும் சேவர் கொடியை இரண்டு கையில் பிடித்திருந்தார். வேல் வாங்கும்போது சட்டை அணிய கூடாது. வெறும் உடம்பில் தான் வேல் மற்றும் சேவர் கொடியை வாங்க வேண்டும்.

புகழ்பாடுவதில் விருப்பமில்லை
சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த விளக்கத்தில், "திருச்செந்தூரில் நடந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்டுள்ளோம். பாடகர்கள் விளக்கத்தை கொடுத்துள்ளனர். இனி வரும் காலங்களில் கவனமாக செயல்படுவோம் என கூறியுள்ளனர். முதலமைச்சருக்கும், எங்களுக்கும் புகழ் பாடுவதில் விருப்பம் இல்லை. இனிமேல் இப்படி நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இதை செய்ய கூடாது என தெளிவாக சொல்லியுள்ளோம். நாங்கள் விதிகளை எல்லாம் மீறிவிட்டோம் என்கிறார்கள். எந்த விதியின் அடிப்படையில் சேகர்பாபு அமைச்சராக இருந்தபோது, ஸ்ரீரங்கத்தில் 50 கோடி நிலத்தை கட்சி அலுவலகத்திற்காக பெயர் மாற்ற அனுமதித்தார். கோயிலின் நிலத்தை திமுககாரர்கள் அவர்கள் சொந்த பயன்பாட்டுக்கு பெயர் மாற்றி கட்சி அலுவலகம் நடத்தினர். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அதை கண்டுபிடித்தோம். அதன் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்து சிறையில் அடைத்தோம்.
கோயில் திருடர்கள் திமுக
எந்த விதிகளின் அடிப்படையில் கோயில் நிலத்தை திருடி விட்டார்கள். திருடுவதை எப்படி வேடிக்கை பார்த்தீர்கள். கோயில் நிலத்தை திருடி அபகரித்த திமுகவினருக்கு இப்போது என்ன அக்கறை வந்தது. கோயில் திருடர்கள் திமுகவுக்கு திடீரென என்ன அக்கறை வந்தது என்ன பேசுகிறோம், என்ன வார்த்தை பயன்படுத்துகிறோம் என பார்த்து பேச வேண்டும். ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை சிந்திக்க வேண்டும்.
கோயில் நிலத்தை திமுகவினர் எப்படி அபகரித்தார்கள். கோயில் நிலத்தை எப்படி லீஸ்க்கு விட்டு சம்பாதித்தார்கள் என்பதை எடுத்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொன்றாக நாங்கள் வெளியில் கொண்டு வருவோம். திமுகவினர் வேண்டுமென்றே பெரிதாக்குகிறார்கள். பாடகர்கள் எல்லாம் சேர்த்து வைத்து தெருக்கூத்தாடிகள் என சேகர்பாபு சொல்வதை வன்மையாக கண்டிக்கிறோம். கலைஞர்களை எப்படி மதிக்க வேண்டுமென கற்க வேண்டும். திமுக பண்ணையார் மனநிலையில் இருந்து விலக வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications
