ஓராண்டு திமுக ஆட்சியில் ரூ.3,000 கோடி கோவில் சொத்துக்கள் மீட்பு! அமைச்சர் சேகர்பாபு புதிய தகவல்!
சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த ஓராண்டில் ரூ.3,000 கோடி மதிப்புள்ள கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்களை புனரமைத்து குடமுழுக்கு நடத்துவதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளதாக கூறினார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.

அமைச்சர் சேகர்பாபு
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே மிகவும் பழமை வாய்ந்த பூமீஸ்வரர் ஆலயம் உள்ளது. அதை புனரமைப்பது தொடர்பாக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கோவில் திருப்பணிகளுக்கு அரசு கொடுத்து வரும் முக்கியத்துவத்தை விளக்கிக் கூறினார். பூமீஸ்வரர் ஆலயத்தில் ரூ.80 லட்சம் மதிப்பில் புனரமைப்பு பணிகள் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.

ஆயிரம் கோவில்கள்
மேலும், ரூ.85 லட்சம் மதிப்பில் திருத்தேர் செய்யவும் மேற்கொண்டு ரூ.80 லட்சம் மதிப்பில் கோவில் குளத்தை தூர்வாரவுள்ளதாகவும் கூறினார். தமிழகம் முழுவதும் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் ஆயிரம் கோவில்களை புனரமைக்க உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு புதிய தகவலை வெளியிட்டார். அதில் முதற்கட்டமாக ரூ.100 கோடி மதிப்பீட்டில் 80 கோயில்கள் புனரமைக்கப்பட்டு இந்த ஆண்டிலேயே குடமுழுக்க நடத்தப்படவுள்ளதாகவும் கூறினார்.

ரூ.3,000 கோடி
எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழக வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், திமுக ஆட்சிக்கு வந்த ஓராண்டில் ரூ.3,000 கோடி மதிப்புள்ள கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். திமுக ஆட்சி இந்துக்களுக்கும் ஆன்மிகத்திற்கும் எதிரான ஆட்சி என்பதை போல் சிலர் விமர்சித்து வரும் நிலையில், அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள இந்த தகவல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

அதிரடி நடவடிக்கை
கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு அதனை மீண்டும் கோவில்களுக்கே சேர்க்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசு சமரசமின்றி நடவடிக்கைகள் எடுத்து வருவது கவனிக்கத்தக்கது. இதன் காரணமாகவே திமுக ஆட்சி மீதான இமேஜ் முன்பைக் காட்டிலும் இப்போது அனைத்து தரப்பினர் மத்தியிலும் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications