ஆஜரான செந்தில் பாலாஜி தம்பி அசோக் குமார்.. நீதிபதி கேட்ட கேள்வி! அமலாக்கத்துறை ரியாக்ஷன் என்ன?
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் உத்தரவாத தொகையாக ரூ.2 லட்சம் செலுத்த உத்தரவிட்டு உள்ளது.
கடந்த 2011- 2015 ஆம் ஆண்டு காலகட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் 2,222 பேர் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த 2024 ஆம் ஆண்டு அமலாக்கத்துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த ஆண்டு ஜனவரியில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அசோக் குமார்
அதில் செந்தில்பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் உள்ளிட்ட 13 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அசோக்குமார் உள்ளிட்டோர் ஏப்ரல் 9 ஆம் தேதி (இன்று) நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த சுமார் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அசோக்குமார் சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று தமது வழக்கறிஞருடன் வந்து ஆஜரானார். இந்த வழக்கில் தொடர்புடைய சண்முகம், கார்த்திகேயன், கணேசன், வெற்றிச்செல்வம் உள்ளிட்ட 11 பேரும் ஆஜராகியிருந்தனர். இந்த வழக்கு விசாரணை நீதிபதி கார்த்திகேயன் முன்பாக இன்று நடைபெற்றது.
இன்று விசாரணை
அப்போது, "செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆவணங்கள் உள்ளன" என அமலாக்கத்துறை தெரிவித்தது. அமலாக்கத்துறை தரப்பில் கூடுதல் குற்றப்பத்திரிகையுடன் சுமார் 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் உள்ளது. இதனை சிடியில் தருவதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கு குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் மின்னனு ஆவணமாக இல்லமால் காகித வடிவில் வழங்க வேண்டும் எனவும் அப்போது தான் சான்றளிக்கப்பட்ட ஆவணங்கள் உறுதி தன்மை நிலை நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு புதிய சட்டத்தின் அடிப்படையில் மின்னனு முறையில் ஆவணங்கள் வழங்கலாம் என அமலாக்கத்துறை தெரிவித்தது.
எவ்வளவு முறைகேடு - நீதிபதி கேள்வி
இதையடுத்து, "ஒவ்வொரு நபரும் எவ்வளவு தொகை முறைகேடு செய்துள்ளனர்" என நீதிபதி கேள்வி எழுப்பினார்.அதற்கு அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர், "ஒவ்வொரு நபரும் எவ்வளவு தொகை முறைகேடு செய்தனர் என்கிற தரவுகளை தெரிவிக்க கால அவகாசம் வேண்டும்" எனத் தெரிவித்தார். இதையடுத்து, குற்றப்பத்திரிக்கை நகலை ஆஜரான அனைவருக்கும் வழங்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி.
மேலும், செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமாருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 20 ஆம் தேதிக்குள் ஜாமீன் உத்தரவாத தொகையாக ரூ.2 லட்சம் செலுத்த அசோக்குமார் உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications