செந்தில் பாலாஜிக்கு ஆக.25ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு.. அமலாக்கத்துறையின் "பிளான்" என்ன?
சென்னை: அமலாக்கத்துறையின் காவல் இன்றுடன் முடிந்த நிலையில், செந்தில் பாலாஜி இன்று சென்னை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதில், செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்டு 25-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது. கைது செய்த போது செந்தில் பாலாஜிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு உடல் நலம் தேறிய பிறகு செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே, செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது சட்டவிரோதம் இல்லை எனவும் அவரை காவலில் எடுத்து விசாரிக்கலாம் எனவும் உச்ச நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டியது. இதையடுத்து செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கியது. இதன்படி, சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தது. அதன்படி, செந்தில் பாலாஜியை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையின் போது செந்தில் பாலாஜிக்கு தேவையான ஓய்வு கொடுக்கப்படுகிறது. அமலாக்கத்துறை அதிகாரிகள் கேள்விக்கு செந்தில் பாலாஜி அளிக்கும் பதில்கள் வீடியோவாக பதிவு செய்யப்படுகிறது.

இதுவரையில் 300க்கும் மேற்பட்ட கேள்விகளை செந்தில் பாலாஜியிடம் கேட்டதாக தகவல்கள் கூறுகின்றன. ஒருபக்கம் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்திக் கொண்டே மற்றொரு பக்கம் செந்தில் பாலாஜியின் சகோதர் அசோக்குமாரின் மனைவி நிர்மலாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதேபோல், கரூரில் அசோக்குமார் கட்டி வரும் சொகுசு பங்களாவையும் அமலாக்கத்துறை முடக்கி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.
செந்தில் பாலாஜியின் அமலாக்கத்துறை காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதனால் இன்று மாலை 3 மணியளவில் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத்துறையினர் மேலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனு அளித்தனர். ஆனால் நீதிபதி அல்லி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்டு மாதம் 25-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜி மீண்டும் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்படுகிறார்.
செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை காவலில் எடுக்கும் போது எப்படி அழைத்து வந்தார்களோ அதே பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்து செல்கிறார்கள். முன்னதாக செந்தில் பாலாஜியிடம் கடந்த 5 நாட்களாக காலை மாலை என நாள் முழுவதும் நீடித்தது. இடையிடையே செந்தில் பாலாஜியின் உடல் நலம் கருதி ஓய்வும் அளிக்கப்பட்டது. இ.எஸ்.ஐ. மருத்துவர்களும் தயார் நிலையில், வைக்கப்பட்டு இருந்தனர். செந்தில் பாலாஜியிடம் 300 க்கும் மேற்பட்ட கேள்விகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்டு விசாரணை நடத்தினர்.
செந்தில் பாலாஜி அளித்த பதில்கள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி அளித்த பதில்களை குறித்த விசாரணை அறிக்கையை ஏற்கனவே தலைமை அலுவலகத்திற்கு அதிகாரிகள் சமர்பித்துள்ளனர். விசாரணைக்கு எவ்வாறு ஒத்துழைத்தார்.. அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் எவ்வாறு பதில் அளித்தார் என்ற விவரங்கள் அடங்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லியில் இருக்கும் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அடுத்த வாரம் சமர்பிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
செந்தில் பாலாஜி அளித்த பதில்கள் அளித்த திருப்திகரமாகவும் நம்பிக்கைதன்மையுடன் இருக்கிறதா? என்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்துவார்கள். டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுக்கும் முடிவின்படி தான் செந்தில் பாலாஜி மீண்டும் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கப்படுவாரா? என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படும் தகவலாக உள்ளது












Click it and Unblock the Notifications