விஜய் ரசிகர்னு வீட்டில் யாராச்சும் சொன்னா சோறு போடாதே.. ஆவேசமாக ஒருமையில் விமர்சித்த திமுக அமைச்சர்
சென்னை: திமுக சார்பில் தாம்பரத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் த. மோ. அன்பரசன் திமுக கொண்டு வந்த திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார். அதேநேரம் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை மிகக் கடுமையாக ஒருமையில் விமர்சித்துப் பேசிய அவர், தவெக தலைவர் விஜய்யையும் மறைமுகமாக ஒருமையில் சாடினார்.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில், இப்போதே தேர்தல் பணிகளை திமுக தொடங்கிவிட்டது. மாநிலம் முழுக்க திமுக சார்பில் பல்வேறு கூட்டங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே தாம்பரத்தில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தவெக தலைவர் விஜய்யை அமைச்சர் த. மோ. அன்பரசன் கடுமையாக விமர்சித்தார்

ஒருமையில் விமர்சனம்
தாம்பரத்தில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் பேசிய அமைச்சர் த. மோ. அன்பரசன், "சீமான் மாதிரியான ஆட்களை ஒரு வாரம் தூக்கி சிறையில் போட்டால் ஆள் இருப்பான்? அரசியலே வேண்டாம் என ஓடிவிடுவான். நாட்டில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளையும் ஒருமையில் தான் விமர்சிப்பான்.. ஏதோ அவன் மட்டும் தான் யோக்கியம் மாதிரியும் மற்றவர்கள் அயோக்கியர்கள் மாதிரியும் பேசுவார்.
டிவி சேனல்களும் அவரை ஏதோ பெரியாள் மாதிரி ஆக்கிவிட்டார்கள். இவன் எல்லாம் தேர்தல் நேரத்தில் மற்றும் வருவான்.. வேகமாகப் பேசுவான் பிறகு ஆளே இல்லாமல் போய்விடுவான். ஆட்சியில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி மக்களோடு மக்களாக நின்று அரசியல் செய்ய ஒரே கட்சி திமுக தான்.
தொடர் வெற்றி
2019 லோக்சபா, 2021 சட்டசபை, 2024 நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என அனைத்திலும் வென்று காட்டியிருக்கிறோம். அதற்குக் காரணம் நம்ம முதல்வர் தான். பல இடைத் தேர்தல்களிலும் வென்றுள்ளோம். திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றது முதலே அனைத்து தேர்தல்களிலும் வென்றுள்ளோம். தமிழகத்தில் பாதி இடங்களில் கருணாநிதி கொடியேற்றி இருக்கிறார் என்றால் மீதி பாதி இடங்களில் ஸ்டாலின் கொடியேற்றியிருக்கிறார். ஸ்டாலின் என்றால் உழைப்பு உழைப்பு உழைப்பு என்று கருணாநிதியே கூறியிருக்கிறார்.
விஜய் அரசியல்
இப்போது ஒருவன் புதிதாக கட்சியை ஆரம்பித்துள்ளான். நம்ம வீட்டில் கூட அவனுக்கு ரசிகர்கள் இருப்பார்கள். அவனுக்கு சோறு போடாதே.. நீ ரசிகனாக இருந்துவிட்டு போ.. ஆனால், அரசியல் வேறு!
2026ம் ஆண்டு நடக்கும் தேர்தலிலும் நிச்சயம் திமுக தான் வென்று ஆட்சியைப் பிடிக்கும். 200+ தொகுதிகளில் நாம் வெல்ல போகிறோம் திமுகவுக்கு மக்களிடையே அதிக செல்வாக்கு இருக்கிறது. திமுக நிகழ்ச்சிகளுக்கு மக்கள் அதிகளவில் திரள்கிறார்கள். கூட்டங்களில் முதல்வரால் நடக்கவே முடியாத கூட்டம் இருக்கிறது.
அவரது திட்டங்களால் தான் மக்கள் பலன் பெறுகிறார்கள்.. திமுக ஆட்சிக்கு வந்தால் தான் நான் அமைச்சராக முடியும் என நான் சொல்லவில்லை. திமுக ஆட்சியில் தான் ஏழை மக்கள் வாழ முடியும். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரம் உயர திமுக ஆட்சி அமைய வேண்டும்
எடப்பாடி மீதும் தாக்கு
கூவத்தூரில் ஓபிஎஸை காலி செய்துவிட்டு, எடப்பாடி பழனிசாமி எப்படி வந்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.. சசிகலா காலில் விழுந்ததை டிவியில் பார்த்திருப்பீர்கள்.. அதிமுகவில் இப்படி ஒரு ஆள் இருக்கிறார் என்றே அப்போது தான் அனைவருக்கும் தெரியும். மேலும், 5 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென வந்த தலைவர்கள் எல்லாம் நம்முடைய முதல்வர் மு.க ஸ்டாலின் சிறையில் இருந்தது குறித்துப் பேசினார்கள். அதற்கும் நாம் பதில் கொடுத்தோம்" என்றார்.












Click it and Unblock the Notifications