இன்று பிறந்த குழந்தைகளுக்கு ‘ஜாக்பாட்’.. தங்க மோதிரம் அணிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
இன்று பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, தனது தொகுதியில் உள்ள மருத்துவமனையில், இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களின் வாழ்த்துகளைப் பெற்றார். திமுகவினர் தமிழ்நாடு முழுவதும் நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகின்றனர்.

முதல்வருக்கு வாழ்த்து
தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், கேரள முதல்வர் பினராயி விஜயன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோரும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

வீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளை வீட்டில் குடும்பத்தினருடன் கேக் வெட்டி எளிமையாக கொண்டாடினார். அவருக்கு மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின், மகள் செந்தாமரை உள்ளிட்ட குடும்பத்தினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். முதல்வர் ஸ்டாலினின் சகோதரிகள் செல்வி, கனிமொழி எம்.பி., சகோதரர் மு.க.தமிழரசு மற்றும் குடும்பத்தினரும் வந்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். அதன் பிறகு கட்சி நிர்வாகிகள் தொண்டர்களை சந்திப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் சென்றார்.

தொண்டர்களிடம் வாழ்த்து
அறிவாலயம் சென்ற முதல்வரை அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், கட்சிப் பிரமுகர்கள் திரளாக கூடி நின்று வரவேற்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் கலைஞர் அரங்க வளாகத்தில் மரக்கன்று நட்டு தண்ணீர் ஊற்றினார். பின்னர் கலைஞர் அரங்கினுள் சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். தமிழக முதல்வர் ஸ்டாலின், தொண்டர்களைச் சந்தித்து அவர்களது வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டதோடு நன்றியும் தெரிவித்தார். தொண்டர்கள் அனைவருக்கும் மஞ்சப்பையில் மரக்கன்றுகள் வைத்து அன்பளிப்பாக வழங்கினார்.

தங்க மோதிரம்
முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு திமுகவினர் ஏழை எளிய மக்களுக்கு உணவளித்தும், பல்வேறு உதவிகளை செய்தும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை சேப்பாக்கம் அரசு கஸ்தூரிபா காந்தி மகப்பேறு மருத்துவமனையில், இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து மகிழ்ந்தார்.

அமைச்சர் உதயநிதி உதவி
சென்னை கஸ்தூரிபாய் காந்தி மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு திமுக பகுதி செயலாளர் மதன்மோகன் ஏற்பாட்டில் தங்க மோதிரம் அணிவித்து, மருந்து பெட்டகங்களை வழங்கி வாழ்த்தியுள்ளார் அமைச்சர் உதயநிதி. மேலும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இன்று பரிசுப் பொருட்கள், புத்தாடைகள் வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications