Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வயிற்றெரிச்சல் பிடிச்சவங்க தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தை குறை சொல்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் அட்டாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மாணவர்களை சிந்திக்க வைக்கும் கல்விமுறை உள்ளது. ஏன்? எதற்கு? என பகுத்தறிவுடன் கேள்வி கேட்கின்ற கல்வி முறை உள்ளது. தமிழ்நாட்டு கல்வியை பார்த்து சிலர் வயிற்றெரிச்சலில் பேசுகிறார்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அண்மையில் சென்னையில் நடந்த தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, "தேசிய பாடத் திட்டத்தை ஒப்பிடும்போது, மாநில பாடத் திட்டத்தின் தரம் மோசமாக உள்ளது. பல்வேறு கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களிடம் உரையாடினேன். மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் போன்றவற்றில் அறிவுத்திறன் குறைவாக உள்ளது. பள்ளி மாணவர்களுக்கும் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும்" என்று பேசினார்.

udhayanidhi stalin rn ravi tamil nadu

இந்நிலையில் சென்னையை அடுத்த வண்டலூரில் இன்று டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "தமிழ்நாட்டின் பள்ளி பாடத்திட்டம் சரி இல்லை என்று சிலர் அவதூறு கிளப்புகிறார்கள். மயில்சாமி அண்ணாதுரை, வீரமுத்துவேல் ஆகியோர் அரசு பள்ளியில் படித்து இஸ்ரோ விஞ்ஞானிகளாகி இருக்கிறார்கள்.

உலகின் தலைசிறந்த மருத்துவர்கள், விஞ்ஞானிகள் தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் படித்தவர்கள்தான். மாணவர்களை சுயமாக சிந்திக்கத் தூண்டும் கல்விமுறை தான் சிறந்த கல்விமுறை. அந்த வகையில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மாணவர்களை சிந்திக்க வைக்கும் கல்விமுறை உள்ளது. ஏன்? எதற்கு? எப்படி? என பகுத்தறிவுடன் கேள்வி கேட்கின்ற கல்வி முறை உள்ளது.

நமது சிலபஸில் படிப்பவர்கள் தான் எதிர்காலத்திலும் இன்னும் பல சாதனைகளை படைக்கப் போகிறார்கள். இதைப் பிடிக்காத சில வயிற்றெரிச்சல் பிடித்தவர்கள்தான் இன்று தமிழ்நாட்டின் பாடத்திட்டத்தை குறை சொல்கிறார்கள். தமிழக அரசின் பாடத்திட்டம் சரியில்லை என்று புரளி கிளப்புகின்றனர்.

நமது பாடத்திட்டத்தை குறை சொல்வது என்பது நமது பள்ளி மாணவர்களையும், ஆசிரியர்களையும் அவமதிப்பு செய்வதற்குச் சமம். இதற்கு நமது திராவிட மாடல் அரசும், நமது முதலமைச்சரும் எந்தக் காலத்திலும் அனுமதிக்க மாட்டார்கள். இந்தியாவிலேயே சிறந்த கல்வி என்றால் அது தமிழ்நாட்டு கல்விதான்.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்த பல பேர் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பெரிய பெரிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் பொழுது தமிழக அரசின் கல்விமுறையை குறை சொல்வது எந்த நாளும் ஏற்க முடியாது. மாணவர் நலனில் ஆசிரியர் போலவே சிந்தித்து திட்டங்களை தமிழக முதல்வர் வகுத்து வருகிறார். தமிழ் சமுதாயத்திற்கு மானமும் அறிவும் ஊட்டியவர்கள் ஆசிரியர்கள்." என பதிலடி கொடுத்துள்ளார்.

செப்டம்பர் 5 ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சென்னையை அடுத்த வண்டலூரில் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். 2024 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான 339 ஆசிரியர்களுக்கு பத்தாயிரம் ரூபாயுடன் வெள்ளி பதக்கமும் பாராட்டு சான்றிதழும் வழங்கினார். மேலும், 10 விரிவுரையாளர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கினார்.

மேலும் இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "நான் என்னுடைய விளையாட்டுத்துறை நிகழ்ச்சியை விட அதிகமாக கலந்து கொள்வது பள்ளிக்கல்வித்துறை நிகழ்ச்சி தான். இங்கிருக்கும் அமைச்சர்களிலேயே அன்பில் மகேஷ்தான் அதிகமாக சுற்றிக் கொண்டே இருப்பார். எப்போதுமே பள்ளிகளில் சென்று ஆய்வு செய்து கொண்டிருப்பார் அல்லது வெளிநாட்டில் இருப்பார். சிறந்த மாணவர்கள் மற்றும் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களை அழைத்துக் கொண்டு வெளிநாட்டுக்கு போய்விடுவார். ஒரு வாரத்திற்கு முன்பு கூட அவர் ஹாங்காங்கில் இருந்தார்.

இந்த நேரத்தில் இங்கு வந்துள்ள ஆசிரியர்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற வகையில் நான் கோரிக்கையை முன் வைக்க விரும்புகிறேன். வழக்கமாக நான் வைக்கின்ற கோரிக்கை தான். நீங்கள் எல்லாம் விருது பெற்றுள்ள ஆசிரியர்கள். நீங்கள் விருது பெறுவதைப் போல நம்முடைய மாணவர்களும் விளையாட்டுகளில் பதக்கங்களை பெற வேண்டும். நன்றாக விளையாடுகின்ற மாணவன் ஆரோக்கியமாக இருப்பான். ஆரோக்கியமாக இருக்கும் மாணவன் தான் நன்றாக படிப்பான். எனவே பிஇடி பீரியடை கடன் வாங்காதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+