திருமாவளவனுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு! எதற்காக இந்த டிஸ்கஷன்? என்ன பின்னணி?
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார்.
சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது விசிக சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு திருமாவளவனை சந்தித்து வாழ்த்து பெற திட்டமிட்ட உதயநிதி ஸ்டாலின் தொடர் நிகழ்ச்சிகள் காரணமாக பரபரப்பாக இருந்து வந்திருக்கிறார்.
இதற்கிடையே இன்று திருமாவளவனை அவரது அலுவலகத்திற்கே சென்று சந்தித்து வாழ்த்துப் பெற்றிருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின்
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மூத்த அரசியல் தலைவர்களான சங்கரய்யாவையும், நல்லகண்ணுவையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் உதயநிதி ஸ்டாலின். அதைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களையும் அவர் சந்தித்து வாழ்த்து பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கான நேரமின்றி பரபரப்பாக துறை சார்ந்த பணிகளில் பிசியாகிவிட்டார் உதயநிதி.

திருமாவுடன் சந்திப்பு
இதற்கிடையே இன்று மாலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு சென்ற உதயநிதி ஸ்டாலின், திருமாவளவனிடம் வாழ்த்து பெற்றார். அமைச்சராகிய பிறகு முதல்முறையாக தனது அலுவலகம் வந்த உதயநிதியை வாஞ்சையுடன் வாசலில் நின்று வரவேற்ற திருமாவளவன் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். இந்தச் சந்திப்பின் போது தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் திடீரென வெளியேறியது, ஆளுநர் விவகாரத்தில் அதிமுக அமைதி காத்து வருவது என நடப்பு அரசியல் விவகாரங்கள் பற்றி பேசப்பட்டிருக்கிறது.

முற்றுகைப் போராட்டம்
மேலும், வரும் வெள்ளிக்கிழமை அன்று தாம் நடத்தும் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் பற்றியும் உதயநிதியிடம் திருமாவளவன் எடுத்துக் கூறியிருக்கிறார். இந்த நிகழ்வின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனும் உடனிருந்தார். அதேபோல் விசிக சட்டமன்ற உறுப்பினர்களும் உதயநிதி வருகையின் போது விசிக அலுவலகத்தில் இருந்தனர்.

உதயநிதி பதிவு
இதனிடையே இது தொடர்பாக பதிவு வெளியிட்டுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சமூக அநீதிகளுக்கு எதிரான அண்ணல் அம்பேத்கர் -பெரியார் கொள்கை வழியில் நின்று போராடும் எழுச்சி தமிழர் அண்ணன் திருமாவளவன் எனக் குறிப்பிட்டு அவருடனான சந்திப்பை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications