“இன்றைக்கே தலைவர் கூப்பிட்டு அமைச்சர் பதவியை தூக்கிப் போடச் சொன்னால் உடனே போவேன்”- வன்னி அரசு பேச்சு
கள்ளக்குறிச்சி: இன்றைக்கே தலைவர் கூப்பிட்டு இந்த அமைச்சர் பதவியை தூக்கிப்போட்டுட்டு போகச் சொன்னால் உடனே போயிடுவேன் என அமைச்சர் வன்னி அரசு பேசியுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் அமைச்சர் வன்னியரசு தனது அரசியல் பயணம் மற்றும் அமைச்சர் பதவி குறித்து பேசியுள்ளார். "80 ஆண்டுகளுக்குப் பிறகு எங்கள் ஊரில் இப்போதுதான் பேருந்து விட்டிருக்கிறேன். பேருந்து விடுவதற்கே அமைச்சராக வேண்டியிருக்கிறது. கிராமத்தில் இருந்து 4 கி.மீ தொலைவுக்கு நடக்க வேண்டி இருந்தது" என்று கூறினார் வன்னியரசு.

மேலும் பேசிய அவர், "விடுதலைச் சிறுத்தைகளின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு இந்த இயக்கத்திற்கு அர்ப்பணித்துள்ளேன். இந்த இயக்கத்துக்கு எம்.எல்.ஏ ஆவதற்கு, எம்.பி ஆவதற்கு, அமைச்சராவதற்கு வரக்கூடாது, வாய்க்கரிசி போட்டுக்கொண்டு ஜெயிலுக்குப் போக தயாராக இருப்பவர்கள் தான் வரவேண்டும் எனச் சொன்னபோது இந்த இயக்கத்துக்கு வந்தவன் வன்னி அரசு.
எனக்கு எந்தவிதமான எதிர்பார்ப்பும் கிடையாது. இன்றைக்கே தலைவர் அழைத்து அமைச்சர் பதவியை தூக்கிப் போட்டுவிட்டு போராட்டக் களத்துக்குச் போகச் சொன்னாலும் உடனே போய்விடுவேன். அமைச்சர் பதவியை விட மக்களுக்கான பணியே முக்கியம்" எனப் பேசியுள்ளார்.
தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள விசிகவுக்கு 1 அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. வன்னி அரசு சமூக நீதித்துறை அமைச்சராகச் செயல்பட்டு வருகிறார். அமைச்சர் பதவிக்காக விசிகவின் வன்னி அரசு தவெக அரசை புகழ்வதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் தான் வன்னி அரசு இவ்வாறு பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications
