மழைக்காலத்தில் எப்போதும் விலைவாசி அதிகமாக இருக்கும்.. அமைச்சர் வெங்கடரமணன் சொன்ன காரணம்!
சென்னை: மழைக்காலங்களில் வெங்காயம், தக்காளி, பூண்டு உள்ளிட்டவற்றின் விலை அதிகமாகத் தான் இருக்கும் என்று அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார். இவற்றின் விலை படிப்படியாக குறையும் என்று கூறிய வெங்கடரமணன், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.
இந்தியாவில் விலைவாசி உயர்வில் 7.29 சதவிகிதத்துடன் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தவெக ஆட்சி அமைந்த நாள் முதலே தமிழ்நாட்டில் விலைவாசி அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக அரிசி, வெங்காயம், பூண்டு, சமையல் எண்ணெய், பால் பொருட்கள் உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்திருப்பது சாமானிய மக்களை பாதிப்படைய வைத்துள்ளது.

தவெக ஆட்சி அமைந்த பின் மளிகை சாமான்களுக்கான கட்டண ரசீதில் ஏற்பட்டுள்ள மாற்றம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு மாதமும் அந்த ரசீதில் விலை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்துள்ளன.
தீபாவளி நேரத்திலும் கூட விலைவாசி அதிகரித்தது மக்களிடையே சலிப்பை ஏற்படுத்தியது. இதனிடையே வெங்காய கொள்முதலில் தவெக சொதப்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல் சன்னரக அரிசி என்று ரேஷன் கடைகளில் தமிழக அரசு கொண்டு வந்த திட்டம் மிகப்பெரிய பின்னடைவை உருவாக்கியது. சன்னரக அரிசி எங்கிருந்து கொள்முதல் செய்யப்பட்டது என்ற கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை.
நேரம் வரும் போது பதில் சொல்லுவோம் என்று அமைச்சர் வெங்கடரமணன் கொடுத்த பதில் தவெகவினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அமைச்சர் வெங்கடரமணன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்து கொண்டே இருக்கிறேன். பிரச்சனைகள் நடக்கும் போது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து கொண்டே இருக்கிறேன்.
அரிசி, பருப்பு உள்ளிட்டவை வாங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பூண்டு, வெங்காயம், தக்காளியின் விலை மழைக்காலம் வரும் போது எப்போதும் அதிகரிக்கும். அது படிப்படியாக குறையும். இன்னும் 15 நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிடும். எங்கெல்லாம் விலைவாசி உயர்வு இருக்கிறதோ, அங்கெல்லாம் கவனம் செலுத்தி வருகிறோம். அந்த பொருட்கள் உடனடியாக வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
