தான் உண்டு தன் வேலை உண்டு! கப்சிப் அமைச்சர்கள்! மீண்டும் பரபரப்பாக தலைமைச் செயலகம்!
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவை ஏற்று அமைச்சர்கள் தங்கள் அலுவல் பணிகளை கவனிப்பதற்காக தொடர்ச்சியாக தலைமைச் செயலகம் வந்து செல்வதால் மீண்டும் பரபரப்பாக காணப்படுகிறது அங்குள்ள அவர்களது அறைகள்.
கடந்த அமைச்சரவை கூட்டத்தின் போதே வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் அமைச்சர்கள் கட்டாயம் தலைமைச் செயலகம் வந்து செல்ல வேண்டும் என உத்தரவிட்டிருந்தார் முதல்வர் ஸ்டாலின்.
இந்நிலையில் அவரது உத்தரவை கடைபிடிக்கும் விதமாகவும் சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கவிருப்பதாலும் அலுவல் பணிகளில் பிசியாக இருக்கிறார்கள் அமைச்சர்கள்.

தலைமைச் செயலகம்
அமைச்சர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனித்து வரும் முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த அமைச்சரவை கூட்டத்தில் அவர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். அதாவது தலைமைச் செயலகத்திற்கு அமைச்சர்கள் வாரத்திற்கு 4 நாட்களாவது வந்து செல்ல வேண்டும் என்பது தான் அந்த உத்தரவு. அரசு விழாக்கள், தொகுதிப்பணி, மாவட்ட அரசியல் பணிகள் இருந்தால் வாரத்திற்கு 4 நாட்களுக்கு பதில் 3 நாட்களவது தலைமைச் செயலகம் வந்து செல்ல வேண்டும் என்பது முதல்வர் போட்ட கட்டளை.

பின்பற்றும் அமைச்சர்கள்
இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட கட்டளையை ஏற்று செயல்படும் வண்ணம் அமைச்சர்கள் தலைமைச் செயலகத்தில் உள்ள தங்கள் அறைகளுக்கு வந்து அலுவல் பணிகளை கவனிக்க ஆரம்பித்துள்ளனர். இதற்கு முன்னர் முகாம் அலுவலகமான பசுமை வழிச்சாலை பங்களாவில் அமர்ந்து கொண்டு அதிகாரிகளை வரவழைத்து ஃபைல் பார்த்த பலர் இப்போது தலைமைச் செயலகம் வந்து செல்கிறார்கள். இதனால் அமைச்சர்களின் அறைகள் மெல்ல பரபரப்பு நிலைக்கு வந்துள்ளது.

சட்டசபை கூட்டம்
வரும் திங்கள்கிழமை சட்டசபைக் கூட்டம் தொடங்கவுள்ளதால் எதிர்க்கட்சிகள் என்னென்ன விவகாரத்தை பெரிதுபடுத்தலாம் என்பதை யூகித்து அதற்கேற்ப முன் தயாரிப்பு பணிகளில் அமைச்சர்கள் பிசியாக உள்ளனர். மின்சாரத்துறை, வேளாண்மைத்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, என பல முக்கிய துறைகளின் அமைச்சர்கள் அதிகாரிகளை அழைத்து தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

அதிமுக ஆட்சி
அதிமுக ஆட்சியின் போது தலைமைச் செயலகத்தில் எப்போதும் கட்சிக்காரர்களின் கூட்டம் நிரம்பி வழியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அது போன்ற ஒரு நிலை இப்போது இல்லை என்றாலும் கூட இனி வரும் நாட்களில் கட்சியினர் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications