அழைப்பிதழ்கள் இல்லை... ஆடம்பரம் இல்லை... எளிமையாக நடைபெறும் அமைச்சர் வீட்டு திருமணங்கள்..!
சென்னை: கொரோனா கால கட்டுப்பாடுகள் இன்னும் முழுமையாக தளர்த்தப்படாததால் தமிழக அமைச்சர்கள் இல்லத் திருமணங்கள் மிக எளிமையாக நடைபெறுகின்றன.
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இதையடுத்து மே மாதம் அமல்படுத்தப்பட்ட மிக கடுமையான ஊரடங்கில் தற்போது தளர்வுகள் தந்துள்ளது அரசு.

இந்நிலையில் திருமண நிகழ்வுகளுக்கான கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்படாததால் தமிழக அமைச்சர்கள் தங்கள் இல்ல திருமண விழாக்களை மிகவும் எளிமையாக நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று திருப்பூரில் நடைபெற்ற செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் மு.பெ.சாமிநாதன் மகள் திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது. மணமக்கள் வீட்டாருக்கு நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதேபோல் நாளை கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் நடைபெறவுள்ள தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜின் மகன் திருமணமும் மிக எளிய முறையில் நடைபெறவுள்ளது. தேவாலயத்தில் மணமக்கள் பெற்றோர் முன்னிலையில் மட்டும் திருமணம் நடைபெறுகிறது.
அமைச்சராக இருந்தும் உள்ளூர் கட்சிக்காரர்கள், சக அமைச்சர்களை, திருமண விழாவுக்கு அழைக்க முடியவில்லையே என்ற வருத்தம் இவர்கள் இருவருக்கும் இருக்கத் தான் செய்கிறது. இருப்பினும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமல்படுத்தியுள்ள கட்டுப்பாடுகளை முன்மாதிரியாக பின்பற்ற வேண்டும் என்பதால் ஆடம்பரமின்றி தங்கள் இல்ல திருமண விழாக்களை நடத்தியுள்ளனர் அமைச்சர்கள்.
மகனுக்கு நாளை காலை திருமணம் நடைபெறும் சூழலிலும், தந்தையான அமைச்சர் மனோ தங்கராஜ் சென்னையில் சட்டமன்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டிருக்கிறார். இன்றிரவு தான் மகன் திருமணத்துக்காக அவர் நாகர்கோவில் செல்லவிருக்கிறார்.












Click it and Unblock the Notifications