"கவலைப்படாதீங்க".. ட்வீ ட் செய்த பிடிஆர்.. மதுரை கரகாட்ட கலைஞர்களுக்கு தேடி வந்த ஸ்பெஷல் நிவாரணம்!
சென்னை: மதுரையில் கொரோனா காரணமாக கஷ்டத்தில் இருந்த கரகாட்ட கலைஞர்களுக்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் பி மூர்த்தி ஆகியோர் நிவாரணம் வழங்கி உள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக பல்வேறு துறைகள் நசிந்து போய் இருக்கின்றன. முக்கியமாக மக்களை, கூட்டத்தை நம்பி இருக்கும் சுற்றுலாத்துறை, தியேட்டர்கள் ஆகியவை பெரிய அளவில் முடங்கி உள்ளன. கொரோனா காரணமாக 2 வருடமாக ஊர் திருவிழாக்களும் நடக்கவில்லை.
ஊர் திருவிழாக்கள் நடக்காத காரணத்தால், கரகாட்ட கலைஞர்கள் உள்ளிட்ட பாரம்பரிய தமிழ்நாட்டு கலைஞர்கள் பலர் கடும் இழப்புகளை சந்தித்து உள்ளனர்.

விழா
மக்கள் வெளியே செல்ல முடியாத காரணத்தால் எங்கும் கரகாட்ட நிகழ்வுகள் நடக்கவில்லை. 2 வருடமாக இவர்கள் எல்லோரும் நிகழ்ச்சிகள் நடத்த முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். முக்கியமாக மதுரையில் இருக்கும் பல்வேறு கரகாட்ட குழுவினர் போதிய வருமானம் இன்றி கடும் கஷ்டத்தில் உள்ளனர்.

புகைப்படம்
இந்த நிலையில் people archive of rural india என்ற இணைய பக்கத்தில் மதுரை கரகாட்ட கலைஞர்களின் மோசமான நிலை குறித்து கட்டுரை வெளியாகி இருந்தது. அவர்களின் இன்னல்களை வெளிப்படுத்தும் வகையில் புகைப்படங்களோடு கட்டுரை வெளியாகி இருந்தது. இந்த கட்டுரையை பகிர்ந்த பலர் அரசு இதில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையை விடுத்து இருந்தனர்.

கோரிக்கை
இந்த நிலையில், இந்த செய்தியை பகிர்ந்த மதுரையை சேர்ந்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், என்னுடைய கவனத்திற்கு இதை கொண்டு வந்ததற்கு நன்றி. மதுரை கரகாட்ட கலைஞர்களுக்கு உடனடியாக தற்போது நிவாரணம் அளிப்போம். கவலை வேண்டாம். அமைச்சர் பி மூர்த்தியும், நானும் உடனடி நிவாரணம் வழங்குவோம்.

நீண்ட காலம்
சிறு கலைஞர்களுக்கு நீண்ட கால நிவாரணம் வழங்குவது குறித்து பாடகர் டிஎம் கிருஷ்ணா முக்கிய கோரிக்கைகளை வைக்க உள்ளார். அந்த கோரிக்கைகளை முதல்வரிடம் கொண்டு சென்று நிறைவேற்றுவோம் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் பிடிஆர் ட்வீ ட் செய்த 2 நாட்களில் கரகாட்ட கலைஞர்கள் எல்லோருக்கும் முதல்கட்ட நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

நிவாரணம்
மதுரை கரகாட்ட கலைஞர்கள் எல்லோருக்கும் முதல் கட்டமாக 2 ஆயிரம் ரூபாய் இன்று வழங்கப்பட்டது. அதோடு இவர்களுக்கு வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டது. பொருளாதார ரீதியாக கஷ்டத்தில் இருந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இவர்களின் எதிர்கால கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலினிடம் கொண்டு செல்வேன் என்று அமைச்சர் பிடிஆர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications