தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை பேஸ்புக்கில் விஜயின் மாஸ்டர் பட காட்சிகள்.. வேலையை காட்டிய ஹேக்கர்ஸ்!
சென்னை: தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையின் பேஸ்புக் பக்கத்தை முடக்கிய மர்ம நபர்கள், அதில் நடிகர் விஜயின் மாஸ்டர் பட காட்சிகளை அப்லோடு செய்து வைத்து இருக்கிறார்கள். நேற்று முதல் இந்த பேஸ்புக் பக்கத்தில் விஜய் பட காட்சிகள் பதிவிடப்பட்டு வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் போலீஸ் டிஜிபி அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளனர்.
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையின் சார்பில் பேஸ்புக் பக்கம் உள்ளது. இந்த பேஸ்புக் பக்கதில் மாணவர்களை ஊக்குவிப்பது தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்படும். அதேபோல், பள்ளி கல்வி தொடர்பான தமிழக அரசின் திட்டங்கள், தேர்வுக்கு மாணவர்கள் தயாராவது எப்படி என்பது உள்ளிட்ட மாணவ மாணவிகளுக்கு பயனுள்ள பல்வேறு கருத்துக்கள் இந்த பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டப்பட்டு வருகிறது.

மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவகர்களின் பேட்டி, முத்த ஆசிரியர்களின் அறிவுரைகள் என மாணவர் மற்றும் பெற்றோர் நலன் கருதி பல்வேறு பதிவுகள் இந்த பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டு வருகிறது. இந்த பேஸ்புக் பக்கத்தை ஒரு லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பள்ளி கல்வித்துறையின் முகநூல் பக்கத்தில் நடிகர் விஜயின் மாஸ்டர் படக் காட்சிகள் நேற்று முதல் தொடர்ச்சியாக பதிவிடப்பட்டு வருவது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தளபதி விஜய் என்ற ஹேஷ்டேக்குடன் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி - விஜய் இடையேயான சண்டைக்காட்சிகள், வசன காட்சிகள் உள்ளிட்டவை பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

மர்ம நபர்களால் பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து, பள்ளிக் கல்வித்துறை தரப்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் போலீசர் விசாரணையை தொடங்கியுள்ளனர். பள்ளி கல்வித்துறையின் பேஸ்புக் பக்கம் மர்ம நபர்களால் முடக்கப்பட்டு இருப்பது மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications