ஷாக்! கீவ் நகரில் குடியிருப்பு கட்டிடத்தை நோக்கி வந்த ரஷ்ய ஏவுகணை.. பதைபதைக்க வைக்கும் வீடியோ
கீவ்: உக்ரைன் நாட்டில் போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தலைநகர் கீவ் நகரிலும் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தத் தொடங்கி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைன் எல்லையில் நீண்ட நாட்களாக நீடித்த பதற்றம் இப்போது போராக மாறி உள்ளது. கடந்த வியாழக்கிழமை உக்ரைன் மீது முழு வீச்சில் போரைத் தொடங்க அதிபர் புதின் உத்தரவிட்டார்.
ரஷ்யாவின் பாதுகாப்பு கருதியே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரிவித்த புதின், உலகின் நாடுகள் யாராவது ரஷ்யாவின் நடவடிக்கையில் தலையிட்டால் இதுவரை கண்டிராத மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

உக்ரைன் போர்
உக்ரைன் எல்லையில் மீது முதலில் வான்வழித் தாக்குதலைத் தொடங்கிய ரஷ்ய ராணுவம், அதன் பின்னர் நேரடியாகவும் தாக்குதல் நடத்த தொடங்கியது. எல்லையில் நுழைந்த ரஷ்ய ராணுவம் வேகமாகத் தலைநகர் கீவ்வை நோக்கி முன்னேறத் தொடங்கியது. உக்ரைன் தலைநகரைக் கைப்பற்றினால், கிட்டதட்ட மொத்த உக்ரைனும் தன் கட்டுப்பாட்டில் வந்ததைப் போல என்பதால், ரஷ்ய ராணுவம் வேகமாகத் தலைநகர் கீவ்வை நோக்கி முன்னேறியது.

அதிபர் ஜெலன்ஸ்கி
போர் ஆரம்பித்த இரண்டாவது நாளான நேற்று தலைநகர் கீவ்வுக்கு வெளியே ரஷ்ய ராணுவம் தாக்குதலைத் தொடங்கியது. அங்கிருக்கும் உக்ரைன் வீரர்கள் ரஷ்ய ராணுவத்தைக் கண்டு அஞ்சாமல் துணிச்சலுடனும் போராடி வருகின்றனர். என்ன ஆனாலும் தலைநகர் கீவ்வை விட்டு வெளியேற மாட்டேன் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளது, அந்நாட்டு ராணுவத்திற்குப் பெரியளவில் உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது.

அடுக்குமாடிக் குடியிருப்பில் தாக்குதல்
இதனிடையே ரஷ்ய ராணுவம் மக்கள் குடியிருப்புகளை நோக்கியும் தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியது. இருப்பினும், இதை முற்றிலுமாக மறுத்த ரஷ்யா, ராணுவ தளங்களை மட்டுமே குறிவைத்துத் தாக்கி வருவதாக விளக்கம் அளித்தது. இந்தச் சூழலில் தலைநகர் கீவ்வில் உள்ள உயரமான அடுக்குமாடிக் குடியிருப்பின் மீது நேற்றிரவு ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இத்தகவலை கியேவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ உறுதி செய்துள்ளார்.

வீடியோ
இந்த தாக்குதலில் சிலர் உயிரிழந்துள்ளதாகவும் கட்டிடத்தில் இருக்கும் மற்றவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக உக்ரைன் நாட்டின் அவசர சேவைகள் மையம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் இந்த தாக்குதலில் குறைந்தபட்சம் 5 தளங்கள் தேசமடைந்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ரஷ்யா படைகளில் தாக்குதலால் தலைநகர் கீவ்வில் அமைதியற்ற சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் கிவ் நகரில் ரஷ்ய ராணுவம் இல்லை என்றாலும் பல்வேறு திசைகளில் இருந்தும் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாக மேயர் விட்டலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் வெளியுறவு அமைச்சர்
அதேபோல உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா சேதமடைந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் படத்தை ட்வீட் செய்துள்ளார். "கீவ் அற்புதமான, அமைதியான நகரம். இந்த நகரம் ரஷ்யாவின் கொடூர தாக்குதலில் மற்றொரு இரவில் எதிர்கொண்டுள்ளது. ரஷ்ய ராணுவத்தின் ஏவுகணை குடியிருப்பு பகுதியைத் தாக்கி உள்ளது. சர்வதேச நாடுகள் ரஷ்யாவை ஒட்டுமொத்தமாகத் தனிமைப்படுத்தும் நேரம் வந்துவிட்டது. உலக நாடுகள் ரஷ்யத் தூதர்களை வெளியேற்ற வேண்டும், பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும், எண்ணெய் ஏற்றுமதிக்கும் தடை விதிக்க வேண்டும்" என் வலியுறுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications