எஸ்பிஐ மேனேஜருக்கு பளார்.. முக அழகிரி மகள் மீது கிரிமினல் கேஸ்! சென்னை ஹைகோர்ட் போட்ட ஆர்டர்!
சென்னை: சென்னை அடையாறு எஸ்பிஐ வங்கி மேலாளரை தாக்கிய வழக்கு தொடர்பாக திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழியை கைது செய்த சாஸ்திரி நகர் போலீசார், சிறிது நேரத்திலேயே காவல்நிலைய பிணையில் விடுவித்துள்ளனர். இந்த நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கயல்விழி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு குறித்து காவல்துறை பதிலளிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
சென்னை அடையாறில் திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதியின் பேத்தியும், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகளுமான கயல்விழிக்குச் சொந்தமான கட்டிடத்தில், காந்தி நகர் எஸ்பிஐ என்ஆர்ஐ வங்கிக் கிளை செயல்பட்டு வருகிறது.

அந்தக் கட்டிடத்தில் இருந்த லிஃப்ட் நீண்ட நாட்களாக பழுதடைந்த நிலையில் இருந்ததாகவும், அதை சீரமைக்கும்படி கட்டிட உரிமையாளரான கயல்விழியை வங்கி நிர்வாகம் பலமுறை தொடர்புகொண்டு பேசியதாகக் கூறப்படுகிறது.
ஆனால், பலமுறை தகவல் தெரிவித்தும் கயல்விழி தரப்பு லிப்டை சரிசெய்துதரவில்லை என சொல்லப்படுகிறது இந்த நிலையில், வங்கிக் கிளை மேலாளர் ஹர்ஷீன் சிங் நேரடியாக கட்டிட உரிமையாளரான கயல்விழியிடம் லிஃப்ட் பழுது தொடர்பாக பேசியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, கயல்விழி வங்கிக்கு நேரில் சென்று கிளை மேலாளருடன் பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலியில், ஆத்திரமடைந்த கயல்விழி, வங்கி மேலாளரை கன்னத்தில் அறைந்துள்ளார்.
இதற்கிடையில், சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதனையடுத்து எஸ்பிஐ தலைமை மேலாளர் நமச்சிவாயம், கடந்த ஜூலை 21-ஆம் தேதி சென்னை சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் வங்கி அதிகாரி மீது தாக்குதல் நடத்திய கயல்விழி மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், சாஸ்திரி நகர் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
விசாரணை முடிவில், வழக்கு தொடர்பாக கயல்விழியை போலீசார் கைது செய்தனர். எனினும், கைது செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே அவரை காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர். இந்த நிலையில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் கயல்விழி மனுதாக்கல் செய்துள்ளார்.
சிவில் விவகாரத்துக்கு கிரிமினல் சாயம் பூசப்பட்டுள்ளதாகவும், வங்கியின் மேனேஜர் தான் தம்மை தகாத வார்த்தைகளால் திட்டி அதனை மறைத்து தனக்கு எதிராக புகார் அளித்துள்ளதாக கூறியிருந்தார். மேலும் சம்பவத்தை பார்க்காத நபர் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கயல்விழி கூறி இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கயல்விழி தரப்பு வாதிட்டது. இதை அடுத்து இது தொடர்பாக பதில் அளிக்க சென்னை காவல்துறை மற்றும் எஸ்பிஐ மண்டல தலைமை மேலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கை வரும் 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.


Click it and Unblock the Notifications
