என்னை அன்போடு அண்ணன் என்று தான் சொல்வார் விஜயகாந்த்.. மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
அரசியல் எதுவும் விஜயகாந்த்துடன் பேசவில்லை என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: விஜயகாந்த் உடல் நலம் தேறி வந்து நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். உடல்நலம் குறித்து பேச மட்டுமே வந்தாகவும், அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை என்றும் விஜயகாந்த்துடனான சந்திப்புக்கு பின் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தற்போது பாராளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமடைந்திருப்பதால், ஒவ்வொரு தலைவரின் சந்திப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
நேற்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான திருநாவுக்கரசர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

ரஜினிகாந்த்
இதை பற்றி சொன்ன திருநாவுக்கரசர், "தேர்தல் நேரத்தில் சந்திக்கும்போது அரசியல் குறித்து பேசாமல் இருக்க முடியுமா? அரசியல் ரீதியாக பேசினோம். நாட்டு நலனுக்கேற்ற வகையில் நல்ல முடிவு எடுக்க வேண்டுமென விஜயகாந்த்திடம் வலியுறுத்தினேன்" என்று பளிச்சென சொன்னார். இதேபோல் இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் விஜயகாந்தை சந்தித்தார். பிறகு செய்தியாளர்களிடம், உடல்நலம் குறித்து விசாரிக்க வந்ததாக கூறினார்.

உடல்நலம்
இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் சாலிகிராமத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டுக்கு சென்றார். இதையடுத்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் விஜயகாந்த்தை சந்தித்துவிட்டு வெளியே வந்த ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:

கதறி அழுதார்
விஜயகாந்த் என்னுடைய நீண்ட கால நண்பர். விஜயகாந்த்திடம் நலம் விசாரித்தேன். விஜயகாந்த் உடல் நலம் தேறி வந்து நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும். மரியாதையுடன் அண்ணன் என்று அழைக்கக் கூடியவர் விஜயகாந்த். கருணாநிதி மீது பக்தி கொண்டவர். கருணாநிதி மறைந்தபோது வெளிநாட்டில் இருந்தார் விஜயகாந்த். அப்போது தாங்க முடியாமல் அவர் அழுத காட்சி இன்றைக்கும் மறக்க முடியாது.

ஆரோக்கியமாக வாழ வேண்டும்
அதேபோல நாடு திரும்பியதும் நேரடியாக கலைஞர் நினைவிடம் சென்று அழுத காட்சியும் மறக்க முடியாதது. இன்னும் ஆரோக்கியமாக அவர் திகழ வேண்டும் என்று அவரிடம் தெரிவித்துக் கொண்டேன். உடல் நலம் குறித்து பேச மட்டுமே வந்தேன். மற்றபடி இது அரசியல் தொடர்பான சந்திப்பு அல்ல" என்றார்.












Click it and Unblock the Notifications