“சோப்ளாங்கி தவெக அரசு.. சொல் புத்தியும் இல்ல.. சுயபுத்தியும் இல்ல” - மு.க.ஸ்டாலின் அட்டாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "சொந்த புத்தியும் இல்லாமல், சொல் புத்தியும் இல்லாமல் சட்டம் - ஒழுங்கைச் சீரழித்துவிட்ட சோப்ளாங்கி த.வெ.க அரசு! நாளை திமுக அரசு நடத்தவுள்ள ஆர்ப்பாட்டம், தறிகெட்டு ஓடும் த.வெ.க அரசுக்கான Wake-up call" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக மகளிர் அணி சார்பில் நாளை, தவெக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதுதொடர்பாகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்.

mk stalin dmk tvk

"பெண்களைத் த.வெ.க அரசு காப்பாற்ற வேண்டிய அவசியமில்லை. மாறாக, த.வெ.க கட்சியை விட்டே பெண்களைக் காப்பாற்ற வேண்டிய ஆபத்தான சூழல்தான் இப்போது நிலவுகிறது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் வேறு எங்குமே தேடிப் போகத் தேவையில்லை; தன் சொந்தக் கட்சியில் இருப்பவர்களைக் கட்டுப்படுத்தினாலே மாநிலத்தில் நடக்கும் குற்றங்கள் பாதியாகக் குறைந்துவிடும்" என்று மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.

மாநிலத்தில் குற்றவாளிகளுக்குச் சிறிதும் சட்டம் குறித்த பயம் இல்லை என்றும், இந்த ஆட்சியைத் தங்களுக்குச் சாதகமான ஒரு 'கிரிமினல் கொண்டாட்ட ஆட்சியாக' அவர்கள் கருதுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். "தலைநகர் சென்னையின் முக்கியப் பகுதிகளிலேயே கொலைகள் அரங்கேறுகின்றன. நீதிமன்றத்தில் ஜாமினில் வெளியே வரும் குற்றவாளிகள், காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு வெளியே வரும்போதே ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்படுகின்றனர்" என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்து அரசை விளாசியுள்ள அவர், "ஓட ஓட விரட்டிக் கொலைகள் நடப்பது, சிறைக் கைதிகள் தப்புவது, சிறுமிகள் மாயமாவது, பகிரங்கமாகக் கொலை செய்துவிட்டுச் குற்றவாளிகள் சாதாரணமாக நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகளை எல்லாம் முதலமைச்சர் பார்க்கிறாரா இல்லையா? இந்தச் செய்திகள் எல்லாம் அவர் காதுக்கு எட்டவில்லையா? எதுவுமே நடக்காதது போல அவரது செயல்பாடு இருப்பதுடன், எந்தவிதமான பொறுப்புள்ள பதிலும் அரசிடமிருந்து இல்லை" என்று கொந்தளித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "சொந்த புத்தியும் இல்லாமல், சொல் புத்தியும் இல்லாமல் சட்டம் - ஒழுங்கைச் சீரழித்துவிட்ட சோப்ளாங்கி த.வெ.க அரசு! நாளை திமுக அரசு நடத்தவுள்ள ஆர்ப்பாட்டம், தறிகெட்டு ஓடும் த.வெ.க அரசுக்கான Wake-up call! முதலமைச்சரையும் தூங்கி வழியும் ஆட்சி நிர்வாகத்தையும் எழுப்ப முயற்சிப்போம்! ஆளத் தெரியாத அரசுக்குப் பாடம் புகட்டுவோம்!" எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள்- குழந்தைகள் பாதுகாப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் நாளை (அக்.31) கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழகத்தில் கொலை, கொள்ளை, போதைப் பொருள் விற்பனை ஆகியவை அதிகரித்து சட்டம் ஒழுங்கு பெரியளவில் சீர்கேட்டு இருப்பதோடு, பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் குழந்தைகள் கடத்தல் ஆகியவை மிகப்பெரிய அளவில் அதிகரித்து தமிழகத்தை பாதுகாப்பற்ற மாநிலமாக இந்த ஆட்சி கொண்டு வந்திருக்கிறது.

ஒரு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகத்தை படுகுழியில் தள்ளி உள்ள தவெக அரசை கண்டித்து திமுக மகளிர் அணியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 31.10.2026 சனிக்கிழமை காலை 10 மணியளவில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெறும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

அந்தந்த மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்கள் தலைமையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுபவர்கள் விவரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வடக்கில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கனிமொழி எம்.பி கண்டன உரையாற்றுகிறார்!" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+