Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டாலினா? எடப்பாடியா? உண்மையிலேயே யார் 'கெத்து'? ரெக்கார்டு என்ன சொல்லுது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் களத்தில் மு.கருணாநிதி மற்றும் ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஒரு வெற்றிடம் உருவானது என்பது பலரும் ஏற்றுக்கொண்ட கருத்து. அந்த இடைவெளியை இதுவரை யார் நிரப்பியுள்ளனர். ஸ்டாலினா? எடப்பாடி பழனிசாமியா? என்ற மோதல் வலுத்துள்ளது. இடையில் 'தவெகவுக்கும் திமுகவுக்கு இடையேதான் போட்டி' எனக் கம்பு சுற்றிக் கொண்டிருக்கிறார் விஜய்.

திமுகவினரும் சரி, உதயநிதி ஸ்டாலினும் சரி, எடப்பாடி பழனிசாமிக்கும் எங்களுக்குள் தான் போட்டி எனத் திரும்பத் திரும்பப் பேசி வருகின்றனர். காரணம், 'எடப்பாடி இருந்தால்தான் எங்களது வெற்றி எளிமையாக இருக்கும்' என்கிறார் உதயநிதி.

MK Stalin Edappadi Palaniswami Who holds the Power What do the full data reveal

அரசியல் களத்தில் எடப்பாடி பழனிசாமியை விடத் தானே சீனியர் என்கிறார் மு.க.ஸ்டாலின். அதாவது 1971லேயே தான் அரசியலுக்கு வந்துவிட்டேன் என்கிறார். அவர் மிசாவில் சிறை சென்றபோது அவருக்கு 23 வயது. எமர்ஜென்சி காலத்தில், ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்ற மூத்த தலைவர்களே மூச்சுப் பிடிக்க முடியாமல் தவித்தனர். காமராஜர் கூட கலங்கிப் போய் நின்றார். இந்திய அரசியல் தலைவர்கள் சந்தித்த நெருக்கடிக் காலத்தில் களத்திலிருந்தவர் ஸ்டாலின் என்பது மறுக்க முடியாத வாதம்.

ஆனால், இந்திய அரசியலில் ஸ்டாலின் மூத்த அனுபவம் கொண்டவராக இருந்தாலும், இவரது அரசியல் வாழ்க்கை என்பது அவரது தந்தை மு.கருணாநிதியின் அரவணைப்பால் உருவானது. எம்ஜிஆர் மறைவுக்குப் பின் ஜெயலலிதா அதிமுகவின் தலைவியாக வர பல போராட்டங்களைச் சந்தித்தார். அதிமுகவினரே அவரை அகற்றப் பல அரசியல் சதிகளைச் செய்தனர். இரண்டாம் கட்டத் தலைவர்களான பண்ருட்டி ராமச்சந்திரன், நெடுஞ்செழியன், எஸ்டிஎஸ், திருநாவுக்கரசு, பிஹெச் பாண்டியன் போன்றவர்களை எதிர்த்துப் போராடி கட்சியின் தலைமையைக் கைப்பற்றினார் ஜெ.

அந்தப் போராட்டம் ஸ்டாலினுக்கு இருக்கவில்லை. இவர் தன் தந்தை தலைமையில் திமுக இயங்கியபோதே கட்சியின் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்களை தன் ஆதரவாளர்களைக் கொண்டு இட்டு நிரப்பிவிட்டார். மிக இயல்பாக, கழகம் அவர் கையில் செயல் தலைவர், தலைவர் என்ற பதவியை வழங்கிவிட்டது. அவரது ஒரே எதிர்ப்பு மு.க.அழகிரிதான். அது ஒரு குடும்பச் சண்டை என்ற அளவிலேயே முடிந்துவிட்டது. பெரிய முட்டுக்கட்டைகள் இல்லை.

இவருக்கு எதிர்புறம் உள்ள எடப்பாடி பழனிசாமியின் அரசியல் எழுச்சி இவ்வாறான திட்டமிட்டு உருவாக்கப்பட்டதல்ல. அவர் சாதாரண கிளைக்கழக செயலாளராக இருந்து, படிப்படியாக உயர்ந்து ஜெயலலிதா காலத்திலிருந்த அதிகாரம் மிக்க 4 பேர் கொண்ட குழுவில் இடம்பெற்றார். இன்னும் சொல்லப்போனால் சசிகலாவின் தயவால் ஜெயலலிதாவுக்கு நெருங்கிய குழு என்பது பழனிசாமிக்காக 5 ஆக உயர்த்தப்பட்டது.

எனவே அதிமுகவின் முதல்வர் பதவியை அடைய அவர் பல நெருக்கடிகளைச் சந்தித்தவர். இறுதியாக தனக்கு முதல்வர் நாற்காலியை வழங்கிய சசிகலாவையே நகர்த்தி விட்டு, ஆட்சியைத் தக்கவைத்தவர். பின் தன் ஒரே அரசியல் போட்டியான ஓபிஎஸ்சையும் கட்சியிலிருந்து காணாமல் போகச் செய்தவர்.

எடப்பாடியா? ஸ்டாலினா?

இவரது அரசியல் வளர்ச்சி என்பது பல நிலைகளில் விமர்சனத்தைப் பெற்றுள்ளது. ஆனால், தனக்குக் கிடைத்த அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்தி 4 ஆண்டுகள் நிலையான ஆட்சியை அவர் கொடுத்தார்.

ஸ்டாலினுக்கும் பழனிசாமிக்கும் உள்ள முக்கிய வேறுபாடு ஒன்று உண்டு. ஸ்டாலின் அவரது தந்தை மறைவுக்குப் பின் கட்சியின் தலைமையைப் பிடித்தார். ஆனால், அவரது திறமையால் ஆட்சியைப் பிடித்தார். அவர் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர். அந்தப் பதவியை பழனிசாமிக்கு மக்கள் அளிக்கவில்லை. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து அளித்த அதிகாரமாகும்.

அதில் முதல் நிலையில் ஸ்டாலின் நிற்கிறார். அதை அரசியல் விருப்புவெறுப்பு இல்லாதவர்கூட ஏற்றுத்தான் தீரவேண்டும். மேலும் திமுக 2006இல் கூட மு.கருணாநிதியின் ஆட்சி பெரும்பான்மை பெறவில்லை. அதை முறியடித்து திமுகவின் பெரும்பான்மை ஆட்சியை உண்டாகிக் காட்டியவர் ஸ்டாலின். இவரது கூட்டணி 159 இடங்களில் வென்றது. இதன் மூலம் அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியை அவர் முடிவுக்குக் கொண்டு வந்தார்.

இத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அதிமுக கூட்டணி 75 இடங்களுக்கு மேல் எகிற முடியவில்லை. 2.16% என்ற குறைந்த விகிதாச்சாரம்தான் என அதிமுகவினர் ஆறுதல் கூறலாம். ஆனால், எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது நடந்த 2019 சட்டமன்ற இடைத்தேர்தலில் 22 தொகுதிகளில் 9 இடங்களில் மட்டுமே அதிமுக வெல்ல முடிந்தது.

பொதுவாக இடைத்தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சிக்குச் சாதகமாகவே இருக்கும் என்பார்கள். 'திருமங்கலம்' ஃபார்முலா என திமுக ஆட்சிக்காலத்தில் ஒரு கரும்புள்ளியை மு.க.அழகிரி ஏற்படுத்தினார்.

பாடம் உணர்த்தாத பல தோல்விகள்?

எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில்கூட 'இடி அமின் ஆட்சியில் இடைத்தேர்தல் ஒரு கேடா?' எனக் கருணாநிதி தன் தோல்விக்கு நியாயம் கற்பித்து கவிதை படித்து வரலாறு. முந்தைய படிப்பினைகள் எதுவும் பழனிசாமிக்குக் கைகொடுக்கவில்லை. அங்கே ஆரம்பித்தது அவர் சறுக்கல்.

அடுத்து 2021 சட்டமன்றத் தேர்தலில் தோல்வி, 2022இல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 21 மாநகராட்சிகளை வென்றது திமுக. நகராட்சி, பேரூராட்சி என அதன் வெற்றி குறியீடு மேல்நோக்கிச் சென்றது. அதிமுக கோட்டையாகக் கருதப்படும் மேற்கு மண்டலமே பறிபோனது.

கடந்த 2019 மக்களவையில் தேனியில் ஒரு தொகுதிதான் வென்றது. அடுத்து 2024 மக்களவையில் 40க்கு பூஜ்ஜியமானது அதிமுக. சில தொகுதிகளில் நாதகவை விட பின்னுக்குத் தள்ளப்பட்டது. அதிமுகவைவிட பாஜக சில இடங்களில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது. ஜெயலலிதா கூட சில தோல்விகளைச் சந்தித்துள்ளார்.

ஆனால், தொடர்ந்து 10 தோல்விகளை அவர் எப்போதும் சந்தித்ததில்லை. ஒரு தோல்விக்குப் பின் அடுத்த வெற்றி அவர்தான். அதையே சிதைத்துவிட்டது பழனிசாமி தலைமை. இது நம் கருத்தல்ல; அவர் பெற்றுள்ள வெற்றிகள் கூறும் பாடம்.

அதைத்தான் 'அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையேற்ற பின் ஒருமுறைகூட வென்றதில்லை. திமுகவுக்கு நான் தலைமையேற்ற பின் ஒருமுறைகூட தோற்றதில்லை' என்று மார்தட்டிச் சொல்கிறார் ஸ்டாலின். 10 தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமி தோற்றுள்ளார்.

என்னதான் பழனிசாமி தொடர் தோல்விகளைச் சந்தித்திருந்தாலும் அவர்தான் மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சி. அதைக்கூட அவர் கடந்த 5 ஆண்டுகளில் தீவிரமாகச் செயல்பட்டு திமுக அரசை முடக்கவில்லை. பட்டும் பாடாமல் 5 ஆண்டுகள் அரசியல் செய்தார். இப்போது தேர்தல் வந்ததும் ஸ்டாலின் ஆட்சியில் கொரோனா வரவில்லை, வெள்ளம் வரவில்லை என்கிறார். இரண்டு வெள்ளங்களைச் சென்னை சந்தித்தது. அதை வேளச்சேரி மக்களைக் கேட்டால் சொல்வார்கள்.

கொரோனா அலையில் பாதுகாப்பு உடையுடன் ஸ்டாலின் மேற்பார்வை செய்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்தத் தரவுகள் கூட சரியாக பழனிசாமி கையில் இல்லை. அதனால்தான் 'வெற்றிகரமான தேர்தல் வியூகவாதி' ஸ்டாலின் என வேறு மாநில அரசியல் தலைவர்கள் அடையாளம் கண்டு சொல்கிறார்கள்.

எழுதியவர்: கடற்கரய்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+