தவெக விஜய்க்கு சிக்கல் தராமல் ‘ஜென்டில்’ அரசியல்.. மக்கள் மனதை வென்ற ஸ்டாலின்! எடப்பாடி அவுட்!
சென்னை: தவெக ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் இமேஜ் உயர்ந்துள்ளது. அதிமுக ஆட்சி அமைக்க முயற்சிகள் மேற்கொண்டதாக தகவல் வெளியானதால், எடப்பாடி பழனிசாமி அதிகார வெறியோடு செயல்பட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ள அதேசமயத்தில், மென்மையாக நடந்துகொண்டு மக்கள் மனதை வென்றுள்ளார் ஸ்டாலின்.
நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களைப் பெற்று நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்கள் இல்லாத நிலையில் கடந்த சில நாட்களாக திமுக கூட்டணி கட்சிகளுடன் தவெக பேசி ஆட்சி அமைக்க முயற்சித்து வருகிறது.

ஆட்சி அமைக்க போராடிய விஜய்
ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை இல்லாத நிலையிலும் புதன்கிழமை தமிழக பொறுப்பு ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க விஜய் உரிமை கோரினார். ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் ஆட்சி அமைக்க அழைக்க முடியாது என்று ஆளுநர் தெரிவித்த நிலையில் மீண்டும் வியாழக்கிழமை இரண்டாவது முறையாக ஆளுநரை சந்தித்து பேசி இருந்தார் விஜய்.
தவெகவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்க கைகோர்த்துள்ள நிலையில், சிபிஐஎம், சிபிஐ, முஸ்லீம் லீக் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் தமிழக வெற்றிக் கழகம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதற்கிடையே, ஒரு தகவல் தீவிரமாகப் பரவியது. எதிரெதிர் துருவங்களாக அரசியல் களத்தில் செயல்பட்டு வரும் திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க உள்ளதாக தகவல் பரவியது.
ஸ்டாலின் திட்டவட்டம்
இந்நிலையில், வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். நேரடியாக அங்கு சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் நலன் கருதி நான் ஒரு முடிவை எடுத்துள்ளேன். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும், பொறுமையாக இருங்கள், நல்லதே நடக்கும் என பேசியதாக தகவல் வெளியானது.
ஆனால், திமுக தலைவர் ஸ்டாலினோ, தவெக ஆட்சியமைப்பதில் எந்த இடையூறும் செய்யமாட்டோம் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக, சிபிஐ, சிபிஐஎம், ஐ.யூ.எம்.எல் ஆகிய கட்சிகளுக்கு நெருக்கடியும் தரவில்லை.
விஜய்க்கு ஆதரவு அளித்த திமுக கூட்டணி கட்சிகள்
இந்நிலையில் தான் திமுக கூட்டணியில் இருக்கும் விசிக, சிபிஐ, சிபிஐஎம், ஐ.யூ.எம்.எல் ஆகிய கட்சிகள், விஜய் ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துள்ளன. இடதுசாரிகள், வெளியில் இருந்து விஜய்க்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளனர். இதன் மூலம் 120 எம்.எல்.ஏக்கள் ஆதரவு என்ற எண்ணிக்கையை எட்டியுள்ள தவெக, நாளை ஆட்சியமைக்கத் தயாராகியுள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டாம் எனக் கூறினால் விசிக, இரு கம்யூனிஸ்ட்கள், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவு விஜய்க்கு கிடைத்திருக்காது என்பது அரசியல் அறிந்தவர்கள் அனைவரும் அறிந்த உண்மை. இந்தச் சூழலை மென்மையாக, அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் கையாண்டுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.
ஆளுநரை வலியுறுத்திய ஸ்டாலின்
மேலும், திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக பொறுப்பு ஆளுநரை வலியுறுத்தி எக்ஸ் தளத்திலும் பதிவிட்டிருந்தார். ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், "தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டு விட்டது. ஏற்கனவே இருந்த சட்டமன்றத்தையும் கலைத்து ஆளுநர் அவர்கள் ஆணையும் பிறப்பித்து விட்டார். இப்படியொரு நிலையில், தேர்தலில் வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கும், மாநிலத்தின் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மிக முக்கியப் பணி!
இந்தச் சூழ்நிலையில் அரசு அமைவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அரசியல் சட்டப்படி, புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மாண்புமிகு ஆளுநர் உடனடியாக எடுத்திட வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்." எனத் தெரிவித்திருந்தார்.
மனதை வென்ற ஸ்டாலின்
தவெக தலைவர் விஜய், பிரச்சாரக் கூட்டங்களில் எல்லாம் ஸ்டாலினைத்தான் கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனால், ஸ்டாலின் ஒருமுறை கூட விஜய் பெயரையே சொல்லவில்லை. தவெக தனிப்பெரும் கட்சியாக வென்று, மெஜாரிட்டி இல்லாமல் ஆட்சி அமைக்க நெருக்கடியைச் சந்தித்தபோதும், விஜய்க்கு இடையூறு ஏற்படுத்தாமல் அமைதி காத்தார்.
அதோடு, தவெக ஆட்சி அமைக்க, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் ஆதரவு தேவை என்ற சூழலில், அதற்கும் உதவியுள்ளார் ஸ்டாலின். சிபிஐ, சிபிஐஎம், முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் தற்போதும் திமுக கூட்டணியில் தொடர்வதாகவே கூறியுள்ளன. எனினும், அக்கட்சிகள் தவெக ஆட்சியமைக்க ஆதரவளிப்பதில் ஆட்சேபனை தெரிவிக்காமல், அமைதி காக்கிறார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications